தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா

4972

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர் டேவிட் வோர்னருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வீரர் குசல் பெரேரா அந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இதனை அடுத்து சன்ரைசர்ஸ்  அணிக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

[rev_slider LOLC]

இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பும் இலக்குடனும் சில காயங்களினைக் கருத்திற் கொண்டதன் காரணமாகவுமே குசல் பெரேரா இந்த ஆண்டு ஐ.பி.எல் அழைப்பை நிராகரித்ததாக அவரது முகாமையாளர் ரவி டி சில்வா உறுதி செய்துள்ளார். இலங்கை அணியின் அடுத்த தொடரான மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது குசல் பெரேராவின் பிரதான இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீருடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வோர்னர்

கிரிக்கெட் உலகையே…

டேவிட் வோர்னருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஓர் ஆண்டு தடை விதித்ததை அடுத்தே ஐ.பி.எல். நிர்வாகமும் அவருக்கு இந்த ஆண்டு தொடரில் தடை விதித்தது. இதனை அடுத்தே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் காப்பாளரும் இடது கை துடுப்பாட்ட வீரருமான குசல் பெரேராவை அணுகியது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்திற்கு இலங்கை அணி வரும் மே மாதம் முதல் வாரத்தில் தனது பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது. இதனால் குசல் பெரேரா ஐ.பி.எல். வாய்ப்பை ஏற்றாலும் தேசிய அணி பயிற்சிக்காக ஐ.பி.எல். போட்டிகளின் பாதியிலேயே வெளியேற வேண்டி ஏற்படும். இலங்கை அணி வரும் மே-ஜுன் மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது.   

‘இந்த வாய்ப்பை ஒட்டி அவர் அதிக உற்சாகம் அடைந்தார்’ என்று ரவி டி சில்வா குறிப்பிட்டார். ‘எனினும் அவர் தேசிய அணியில் தனது இடத்தை பெறுவதற்கு விரும்புகிறார். இதனால் அவர் சுப்பர் 4 மாகாண போட்டிகளில் ஆடி தன்னை நிரூபிப்பது முக்கியமாகும்’ என்றும் குறிப்பிட்டார்.   

அண்மையில் நடந்து முடிந்த சுதந்திர கிண்ண T20 முக்கோண தொடரில் குசல் பெரேரா நான்கு இன்னிங்ஸ்களிலும் மூன்று அரைச்சதங்களுடன் மொத்தம் 204 ஓட்டங்களை விளாசியதை அடுத்தே அவருக்கு ஐ.பி.எல். அணியில் இருந்து அழைப்பு வந்தது.   

ஸ்மித், வோர்னர் மீதான தடை அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் – சங்கக்கார

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த…

இந்நிலையில் ஐ.பி.எல். வாய்ப்பை நிராகரித்தது அவருக்கு கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் 27 வயதான அவருக்கு குறைந்தது இன்னும் ஏழு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட முடியுமாக உள்ள நிலையில் அவர் குறுகிய கால நிதி வாய்ப்பை விடவும் நீண்ட கால திட்டத்தை கருத்தில் கொண்டுள்ளார் என எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் சுப்பர் 4 தொடரில் தம்புள்ளை அணியில் இடம்பெற்றிருக்கும் அவர் அந்த அணியின் உப தலைவராகவும் உள்ளார். எனினும் காயம் தொடர்பான அவதானம் காரணமாக அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை.

‘இந்த தொடரில் குறைந்தது ஒரு போட்டியிலாவது அவர் ஆடுவார்’ என்று குறிப்பிட்ட டி சில்வா, ‘மூன்றுவகை கிரிக்கெட்டிலும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப் படுத்துவது குறித்து அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார்’ என்றார்.

தொடர்ந்து திறமையை காட்டி வரும் குசல் பெரேரா, அண்மைய மாதங்களில் கால்பகுதியில் காயத்திற்கு உள்ளாகி வருகிறார். கடந்த ஆண்டு சம்பியன்ஸ் தொடரின்போது காயத்திற்கு உள்ளான அவர், பின்னர் இலங்கையில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டிகளையும் இழந்தார். கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு திரும்பினார். எவ்வாறாயினும் பங்களாதேஷில் நடந்த முத்தரப்பு தொடரின்போது மீண்டும் காயத்திற்கு உள்ளான குசல் பெரேரா பங்களாதேஷில் நடந்த T-20 தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

குசல் பெரேரா 2015 ஓகஸ்டில் இந்தியாவுக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடியது தொடக்கம் கடைசியாக 2016, டிசம்பரில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிவரை 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.  

இரண்டாம் நாள் முடிவில் காலி, தம்புள்ளை அணிகள் வலுவான நிலையில்

இலங்கை கிரிக்கெட் சபையினால்…

அதேபோன்று தவறுதலாக ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு உள்ளானதால் 2015 ஆம் ஆண்டில் குசல் பெரேரா நான்கு மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாமல் போனது. எனினும் இதற்கு எதிரான மேன்முறையீட்டை அடுத்து குசல் பெரேரா மீதான குற்றச்சாட்டு தவறானது என்று கண்டறியப்பட்டு அவர் மீதான குற்றச்சாட்டை ஐ.சி.சி. கைவிட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத 29 வயது அலெக்ஸ் ஹேல்ஸுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

‘உலகின் மிகப்பெரிய உள்ளூர் தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்திருப்பதை ஒட்டி நான் உற்சாகமடைந்துள்ளேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக இரண்டு T-20 சதங்களை பெற்ற ஒரே வீரரான ஹேல்ஸ், T-20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கு ஒரே இங்கிலாந்து வீரருமாவார்.  

எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.பி.எல். போட்டியின் குழுநிலை போட்டிகள் மே 20 ஆம் திகதி முடிவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து மே 27 ஆம் திகதி வரை நொக் அவுட் போட்டிகள் நடைபெறும்.