அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்ற பிறகு, இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள ஏழு கண்டங்களின் மரதன் ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்று அதன் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளும் முதல் இலங்கையர் என்ற பெருமையை மரதன் ஓட்ட வீரரான ஹசன் எசுபலி பெற்றுக்கொள்ளவுள்ளார்.
உலகில் இடம்பெறுகின்ற மிகவும் சவால்மிக்க, அதி பயங்கரமான மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று, அதில் தமது திறமைகளை வெளிப்படுத்திய உலகின் பிரபலமிக்க மரதன் ஓட்ட வீரர்களை உள்ளடக்கிய ஏழு கண்டங்களின் மரதன் ஓட்ட சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு ஹசன் எசுபலி தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
2020 இல் தியகமவில் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தொகுதி
தியகமவில் சர்வதேச விளையாட்டு கட்டடத் தொகுதி (International Sports Complex),…..
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹசன் எசுபலி, தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வருகின்றார். அதேநேரம், இங்கிலாந்தில் தனது உயர் கல்வியையும் மேற்கொண்டு வருகின்றார்.
முன்னதாக 2016இல் அவுஸ்திரேலியாவின் கெயான்ஸ் நகரில் நடைபெற்ற ஆசிய – பசுபிக் அயர்ன்மேன் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்ற ஹசன், தனது சிறந்த காலத்தையும் பதிவுசெய்திருந்தார். குறித்த போட்டித் தொடரில் 3.86 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட நீச்சல் போட்டி, 180 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட சைக்கிளோட்டப் போட்டி மற்றும் 42.2 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட மரதன் ஓட்டப் போட்டி என்பவற்றில் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இவ்வருடத்தில் ஹசன் எசுபலி கலந்துகொள்ளவுள்ள முதலாவது சர்வதேச போட்டித் தொடராக உலகின் மிகவும் பழமையான, மரதன் உலகிற்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்த பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டித் தொடர் அமையவுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் ஜுன் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள பிக் பைவ் மரதன் ஓட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
தென்னாபிரிக்காவில் உள்ள மிகப் பெரிய விலங்குகளாக விளங்குகின்ற யானை, ரெய்னோ, எருமை மாடு, சிங்கம் மற்றும் புலி ஆகிய 5 பிரதான விலங்குகள்(பிக் பைவ்) அதிகளவில் வசிக்கின்ற தென்னாபிரிக்காவின் செவனா காட்டினை ஊடறுத்து இந்த மரதன் ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனையடுத்து, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மற்றுமொரு மரதன் ஓட்டப் போட்டியான இன்கா ட்ரயல் தொடரிலும் அவர் பங்கேற்கவுள்ளார். கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதியில் இந்த மரதன் ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது. இது உலகின் மிகவும் சவாலான மற்றும் கடினமான மரதன் ஓட்டப் போட்டியாக கருதப்படுகிறது,
Photos: Seven Continental Marathon Press Conference
ThePapare.com | Viraj Kothalawala | 28/03/2018 Editing and re-using images……
இந்நிலையில், ஹசனின் இறுதி சவாலாக, இவ்வருட இறுதியில் அண்டார்டிக்காவில் நடைபெறவுள்ள 14ஆவது அன்டார்ட்டிக் பனி மரதன் ஓட்டப் போட்டி அமையவுள்ளது. போட்டியின் கடினத் தன்மையை கருத்திற்கொண்டு ஒவ்வொரு வருடமும் 50 வீரர்களுக்கு மாத்திரம் ஏற்பாட்டுக் குழுவினால் அனுமதி அளிக்கப்படுகின்ற தொடாராகவே இது இடம்பெற்று வருகின்றது.
அத்துடன், அன்டார்ட்டிக் பனிப்பாறையிலிருந்து 100 மைல் தூரத்துக்கு அப்பால் உள்ள தெற்குப் பகுதியில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரானது, 700 மீற்றர் உயரத்தில் 20 செல்சியஸ் வெப்பநிலையுடனான காலநிலைக்கு மத்தியில் பனிப்பாறைகளை ஊடறுத்து நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனவே, இந்தப் போட்டித் தொடரானது மிகவும் கடினமானதாகவும், சவால் மிக்கதாகவும் அமையவுள்ளதால், இதனை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவது என்பது வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.
எனினும், இந்த தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தால் மாத்திரமே ஹசன் எசுபலிக்கு ஏழு கண்டங்களின் மரதன் ஓட்ட சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 271 வீரர்கள் ஏழு கண்டங்களின் மரதன் ஓட்ட சங்கத்தில் தற்போது அங்கம் வகிப்பதுடன், இதில் 212 வீரர்களும், 59 வீராங்கனைகளும் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமின்றி, ஒரு வருடத்திற்குள் வெவ்வேறு கண்டங்களில், வித்தியாசமான காலநிலைகளுக்கு மத்தியில் நான்கு மிகப் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பதென்பது சவாலான விடயமாகும். அதிலும் ஒவ்வொரு மரதன் ஓட்டப் போட்டியையும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் நிறைவு செய்தால் மாத்திரமே ஏழு கண்டங்களின் மரதன் ஓட்ட சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மும்பை இந்தியன்ஸ் குழாமில் மஹேலவுடன் இணைந்த மாலிங்க
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக.. இந்திய கிரிக்கெட் சபையினால் 11ஆவது தடவையாகவும்…….
எனவே, இவ்வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெறவுள்ள பொஸ்டன் மரதன் ஓட்டத்தை 6 மணி நேரத்திலும், ஆபிரிக்க மரதன் ஓட்டத்தை 7 மணி நேரத்திலும், தென் அமெரிக்காவில் நடைபெறவுள்ள மரதனை 13 மணி நேரத்திலும், இறுதியாக அன்டார்க்டிக்காவில் நடைபெறவுள்ள மரதன் ஓட்டத்தை 10 மணி நேரத்திற்குள்ளும் முடிக்க வேண்டும், இதுதான் இந்த வீரர்களுக்கான உண்மையான சவாலாக அமையவுள்ளது.
இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில், அமைச்சின் கேட்போர்கூடத்தில் இதுதொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றது. இதில் இலங்கையைச் சேர்ந்த மரதன் ஓட்ட வீரரான ஹசன எசுபலி கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து வெளியிடுகையில், ”இந்த வெற்றிகரமான மரதன் ஓட்டத்தினை நாடு முழுவதும் பிரபல்யப்படுத்துவதற்கும், இவ்வாறான கடினமான மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு முகங்கொடுப்பதற்காக எமது வீரர்களை ஊக்கப்படுத்துவதற்கும் நான் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மரதன் ஓட்ட வீரர்களின் வாழ்நாள் இலட்சியங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற ஏழு கண்டங்களின் மரதன் ஓட்ட சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஹசன் எசுபலி கருத்து வெளியிடுகையில்,
‘எனது நோக்கம், இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுப்பதாகும். இலங்கையில் சாகச மரதன் ஓட்டத்தை பிரபல்யப்படுத்துவதற்கும், இதற்காக வீரர்களை ஊக்குவிப்பதற்கும் என்னுடைய இலக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என கருதுகிறேன். இலங்கை ஒரு சிறிய நாடு. ஆனால் விளையாட்டுத்துறை மற்றும் சாகச விளையாட்டுக்கு ஆற்றலைக் கொண்ட நிறைய வீரர்கள் இருக்கின்றனர். எனவே இவ்வாறான விடயங்களை ஊக்குவிக்க எமது ஒத்துழைப்பை நிச்சயம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு கால்பந்து விளையாட்டு குறித்து பக்கீர் அலி
இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் வடக்கு…..
அதேநேரம், எனக்கு இந்தப் போட்டித் தொடரை வெற்றிகரமாக பூர்த்தி செய்து அதன் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வது என்பது சவாலாக இருக்காது என நம்புகிறேன். ஏழு கண்டங்களின் மரதன் ஓட்டப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு, உரிய பரிசோதனைகள் மற்றும் அடைவுமட்டங்களை பூர்த்தி செய்த வீரர்களுக்கு மாத்திரமே முடியும். எனவே என்னுடைய முயற்சி வெற்றி அளித்தால் அனைத்து இலங்கையர்களுக்கும் இது மிகப் பெரிய கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் நாம் தேசிய விளையாட்டு விழா மற்றும் ஒலிம்பிக், ஆசிய, தெற்காசிய விளையாட்டு விழா உள்ளிட்ட போட்டித் தொடர்களில் இடம்பெற்று வருகின்ற மரதன் ஓட்டம் மற்றும் அரை மரதன் ஓட்டம், நகர்வல ஓட்டங்களை மாத்திரமே தெரிந்துவைத்திருந்தோம்.
ஆனால், உலகிலேயே மிகவும் சவால்மிக்க மரதன் ஓட்டப் போட்டியாக ஒரு சிலரால் மாத்திரம் விளையாடப்படுகின்ற ஏழு கண்டங்களின் மரதன் ஓட்டப் போட்டிகள் தொடர்பிலும் ஒருசில விடயங்களை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
இது இலங்கையிலுள்ள விளையாட்டு ரசிகர்களுக்கு புதியதொரு அனுபவமாகவும் இருக்கலாம். எதுஎவ்வாறியினும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வசித்து வருகின்ற ஹசன் எசுபலி கல்வித்துறையில் மாத்திரமல்லாது விளையாட்டுத்துறையிலும் சாதனை படைத்து இலங்கைக்கு பெருமையைப் பெற்றுக்கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றார். எனவே, அவரது வெற்றிப்பயணத்துக்கு எமது இணையத்தளத்தின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.