கடைசி அணியாக உலகக் கிண்ணத்திற்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்

582
Image Courtesy - ICC

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஆச்சரியமான முறையில் எழுச்சி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தீர்க்கமான ஆட்டத்தில் அயர்லாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு கடைசி அணியாக தகுதி பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் தொடர்ச்சியாக நான்காவது உலகக் கிண்ணத்தில் விளையாடும் அயர்லாந்தின் எதிர்பார்ப்பு தகர்ந்தது. ஏற்கனவே மற்றொரு முக்கிய அணியான ஜிம்பாப்வேயும் உலகக் கிண்ண வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண தகுதிகாண் ‘சுப்பர் 6’ சுற்றின் கடைசி போட்டியாகவே வெள்ளிக்கிழமை (23) அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஜிம்பாப்வே அணி ஐக்கிய அரபு இராச்சியத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து உலகக் கிண்ண வாய்ப்பை இழந்ததால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற ஒரு ஆட்டமாக மாறி இருந்தது. இதனால் இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி உலகக் கிண்ணத்திற்கு நுழைய முடியும் என்ற எதிர்பார்ப்புடனேயே களமிறங்கின.

ஹராரேயில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்தின் ஆட்டம் ஆரம்பம் முதல் மந்தமாகவே இருந்தது. அணித் தலைவர் வில்லியம் போர்டபீல்ட் மற்றும் போல் ஸ்டெர்லிங் ஆரம்ப விக்கெட்டுக்கு 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றபோதும் அதனை எடுப்பதற்கு அவர்கள் 93 பந்துகளுக்கு முகம் கொடுத்தனர்.

35 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே

அயர்லாந்து அணிக்காக அதிகூடிய ஓட்டங்களை பெற்ற போல் ஸ்டெர்லிங் 87 பந்துகளுக்கு முகம் கொடுத்தே 57 ஓட்டங்களை பெற்றார். மத்திய வரிசை வீரர்களும் மிக மந்தமாகவே ஆடினர். வழமை போல் வேகமாக ஆடிய கெவின் ஓ பிரைன் மாத்திரமே 37 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் 19 வயதுடைய இடதுகை சுழல் பந்து வீச்சாளர் ரஷீத் கான் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.   

இதன்படி, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவராக சாதனை படைக்க ரஷீத் கானுக்கு இன்னும் ஒரு விக்கெட் மாத்திரமே தேவைப்படுகிறது. தற்போது இந்த சாதனையை தன் வசம் வைத்திருக்கும் மிச்சல் ஸ்டார்க் 52 போட்டிகளில் சாதனை படைத்திருக்கும் நிலையில் ரஷீத் கான் இதுவரை 43 ஒருநாள் போட்டிகளிலேயே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முஹமது ஷஹ்சாட் மற்றும் குல்பதின் நயிப் 83 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது அந்த அணி இலக்கை நெருங்குவதை இலகுவாக்கியது. ஷஹ்சாட் 50 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றதோடு குல்பதின் நயிப் 45 ஓட்டங்களை குவித்தார்.     

எனினும் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்சாய் 29 பந்துகளில் ஆட்டமிழக்காது பெற்ற 39 ஓட்டங்களும் ஆப்கான் அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. அஸ்கர் ஸ்டனிக்சாய் தனது பருத்த உடலுடன் கடைசி ஓவரின் முதல் பந்துக்கு பவுண்டரி ஒன்றை விளாசியே அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

இதன் மூலம் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்ற அவர் கூறியதாவது, ”நான் அதிக வலியை உணர்ந்தபோதும் எனது நாட்டுக்காக விளையாடினேன். உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற வேண்டும் என்பது எமது கனவாகும்” என்றார்.

மழையின் உதவியோடு மேற்கிந்திய தீவுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி

ஆப்கானிஸ்தான் இந்த தகுதிகாண் போட்டிகளில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து எதிர்பாராத முறையிலேயே உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் குழுநிலை போட்டிகளில் ஸ்கொட்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஹொங்கொங் அணிகளிடம் தோற்று எந்த ஒரு புள்ளிகளும் இன்றியே சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேனெறியது. இதனால் அந்த சுற்றில் முக்கிய போட்டிகளிலும் வென்றாலே ஆப்கானுக்கு உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற முடியும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது.

இந்த சாவாலை சிறப்பாக தாண்டிய ஆப்கானிஸ்தான் பலம் மிக்க மேற்கிந்திய தீவுகள், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தி உலகக் கிண்ணத்திற்கு முன்னேற முடிந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் முதல் முறை பங்குபற்றிய ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கிண்ணத்தில் பங்குபெற முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த தகுதிகாண் போட்டிகள் மூலம் மேற்கிந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றிருக்கும் நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019, மே 30ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14ஆம் திகதி வரை நடைபெறும் 12 ஆவது உலகக் கிண்ண போட்டியில் கலந்துகொள்ளும் 10 அணிகளும் தேர்வாகியுள்ளன. நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் தரவரிசை அடிப்படையில் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆட சுப்பர் 6 புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) ஹராரேயில் நடைபெறவுள்ளது.