தேசிய வீரர்களைக் கொண்ட SSC, NCC இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை

2169

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் சம்பியன் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்த பல தேசிய வீரர்களைக் கொண்ட SSC மற்றும் NCC அணிகள் தகுதி பெற்றுக் கொண்டன.

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/2018 ஆம் ஆண்டுக்கான இந்த போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று (23) நடைபெற்றன. இதில் சிறப்பான பந்துவீச்சின் மூலம் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தி SSC அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதோடு NCC அணி அபார துடுப்பாட்டத்தின் மூலம் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

தேசிய வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அரையிறுதிக்கு தெரிவான SSC

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின்…

இதன்படி SSC மற்றும் NCC அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளிலும் இலங்கை தேசிய அணியின் வீரர்கள் சரிசமமாக ஆடும் நிலையில் இறுதிப் போட்டி பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

SSC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக SSC அணி அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் SSC அணி போட்டியை 8 விக்கெட்டுகளால் இலகுவாக வென்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சச்சித்ர சேனநாயக்க தலைமையிலான SSC அணி ஷெஹான் ஜயசூரிய தலைமையிலான சிலாபம் மேரியன்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

எனினும் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்த சிலாபம் மேரியன்ஸ் அணி அது தொடக்கம் இடைவிடாது விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. இதன்படி 100 ஓட்டங்களை பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த சிலாபம் மேரியன்ஸ் அணி மேலும் 39 ஓட்டங்களில் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் அந்த அணி 41 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மத்திய வரிசையில் வந்த ஓசத பெர்னாண்டோ 86 பந்துகளுக்கு முகம்கொடுத்து பெற்ற 43 ஓட்டங்களே சிலாபம் மேரியன்ஸின் அதிகூடிய ஓட்டங்களாகும்.

SSC அணி சார்பில் ஆறு வீரர்கள் பந்துவீசியதோடு அனைவரும் ஒரு விக்கெட்டையேனும் பெற்றனர். குறிப்பாக அணித்தலைவர் சச்சித்ர சேனநாயக்க 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தொடரின் அதிக விக்கெட்டுகளை பெற்றவர் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். இந்த தொடரில் அவர் மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய SSC அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க எந்த நெருக்கடியும் இன்றி வேகமாக ஓட்டங்களை சேர்த்தார். மறுமுனையில் கௌஷால் சில்வா (04) மற்றும் திமுத் கருணாரத்ன (17) சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும் குணதிலக்க  SSC அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் SSC அணி 23.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 140 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. குணதிலக்க 70 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அதிகபட்சமாக ஆறு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றிருக்கும் SSC அணி 2013/2014ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை சம்பியனாகும் இலக்குடனேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 138 (41) – ஓஷத பெர்னாண்டோ 43, ஷெஹான் ஜயசூரிய 25, சச்சித்ர சேரசிங்க 24, சச்சித்ர சேனநாயக்க 2/16, தம்மிக்க பிரசாத் 2/23, தசுன் ஷானக்க 2/28, ஜெப்ரி வென்டர்சே 2/37

SSC – 140/2 (23) – தனுஷ்க குணதிலக்க 78*, தசுன் ஷானக்க 26*

முடிவு SSC அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி


NCC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இம்முறை பிரதான கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் பலம் கொண்ட அணி ஒன்றாக களமிறங்கி இருக்கும் NCC அணி, செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அபாரமாக ஆடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவின் சதத்தின் உதவியோடு NCC அணி இந்த போட்டியில் 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட NCC அணி சார்பில் ஆரம்ப விக்கெட்டுக்கு திக்வெல்ல மற்றும் உபுல் தரங்க 108 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். அபார சதம் பெற்ற நிரோஷன் திக்வெல்ல 132 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் உபுல் தரங்க 56 ஓட்டங்களை பெற்றதோடு மத்திய வரிசையில் மஹேல உடவத்த (50) மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோரும் (58) அரைச்சதம் கடந்தனர்.

இலங்கை அணியின் தோல்விக்கு தலைவர் பொறுப்புக்கூற வேண்டும்: தயாசிறி

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே பொறுப்புக்கூற…

இதன் மூலம் NCC அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை குவித்தது. இந்த தொடரில் இதுவே ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக அமைந்தது.

பின்னர் பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தேவைப்படும் ஓட்ட வேகத்தை தக்கவைத்துக் கொள்ள தடுமாறியது. இதனால் அந்த அணி 43.3 ஓவர்களில் 238 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மத்திய வரிசையில் வந்த புனித ஆலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த 19 வயது வீரர் அஷேன் பண்டார மாத்திரம் அரைச்சதம் (51) ஒன்றை பெற்றார்.

இதன்போது லசித் மாலிங்க, பர்வீஸ் மஹ்ரூப் மற்றும் துஷ்மந்த சமீர தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இம்முறை பிரதான உள்ளூர் T20 சம்பியன் பட்டத்தை வென்ற NCC அணி  நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், பர்வீஸ் மஹ்ரூப், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க ஆகிய முன்னணி வீரர்களுடனேயே SSC அணியை எதிர்கொள்ளவுள்ளது. கடைசியாக நடைபெற்ற 2015/2016 பருவத்திற்கான பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சம்பியனான NCC அணி அதனை தக்கவைத்துக் கொள்ளவே இம்முறை போராடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

NCC – 327/5 (50) – நிரோஷன் திக்வெல்ல 110, சதுரங்க டி சில்வா 58, உபுல் தரங்க 56, மஹேல உடவத்த 50, அஞ்செலோ பெரேரா 41, சதுரங்க ரந்துனு 2/65, அன்டி சொலமன்ஸ் 2/71

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 238 (43.3) – அஷேன் பண்டார 51, ரவிந்து குணசேகர 31, நவிந்து விதானகே 30, பர்வீஸ் மஹ்ரூப் 2/36, துஷ்மந்த சமீர 2/41, லசித் மாலிங்க 2/51

முடிவு NCC அணி 89 ஓட்டங்களால் வெற்றி