மழலைகளின் சமரில் சில்வெஸ்டர் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

255

கண்டியின் பிரபல கல்லூரிகளான புனித சில்வெஸ்டர் மற்றும் வித்யார்த்த அணிகளுக்கிடையில் இடம்பெறும் மழலைகளின் சமர் என அழைக்கப்படும் வருடாந்த கிரிக்கெட் சமரின் இவ்வருடத்திற்கான போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதில் வித்யார்த்த கல்லூரியின் அணித் தலைவர் புலின குணதிலக மற்றும் சில்வெஸ்டர் கல்லூரியின் மனோஹரன் பவிதரன் சதமடித்து தத்தமது கல்லூரிக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.

60ஆவது தடவையாக நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரானது நேற்று பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சில்வெஸ்டர் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை வித்யார்த்த கல்லூரிக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுபெடுத்தாடிய வித்யார்த்த கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பாக அணித்தலைவர் புலின குணதிலக, சதம் குவித்து அசத்தியிருந்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதில் 176 பந்துகளுக்கு முகங்கொடுத்த புலின, 6 சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் நதீர பாலசூரிய மற்றும் ஹுசிந்து நிஸ்ஸங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய சில்வெஸ்டர் கல்லூரி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மனோஹரன் பவிதரன் சதம்(101) அடித்து அசத்த, பசன் ஹெட்டியாரச்சி(88) மற்றும் கெவின் சஹஸ்த்ர(67) ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்திருந்தனர்.

வித்யார்த்த கல்லூரி சார்பாக பந்து வீச்சில் கசுன் கருணாதிலக 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 71 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது 2ஆவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய வித்யார்த்த கல்லூரி அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் புலின குணதிலக 42 ஓட்டங்களையும், ரவிஷ்க உபனந்த 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

வித்யார்த்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)  229/10 (74) – புலின குணதிலக 102*, கசுன் கருணாதிலக 28, கிஹான் ஜயசேகர 28, நதீர பாலசூரிய 3/27, ஹுசிந்து நிஸ்ஸங்க 3/47, நிம்ஸர அத்தரகல்ல 2/62

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 300/6d  (84.5) – மனோஹரன் பவிதரன் 101, பசன் ஹெட்டியாரச்சி 88, கெவின் சஹஸ்த்ர 67, கசுன் கருணாதிலக 3/62

வித்யார்த்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 111/7 (29) – புலின குணதிலக 42, ரவிஷ்க உபனந்த 36, நிம்ஸர அத்தரகல்ல 3/53, நதீர பாலசூரிய 2/18

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.