சுதந்திரக் கிண்ண முக்கோண T20 தொடரில் இந்திய அணியின் தலைவராக செயற்பட்டிருந்த ரோஹித் சர்மா, தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கை அணியின் தீவிர ரசிகரான மொஹமட் நிலாமின் வீட்டுக்குச் சென்று இன்ப அதிர்ச்சி தந்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக மாறியிருக்கின்றது.
யார் இந்த மொஹமட் நிலாம்?
இலங்கை கிரிக்கெட் அணி எந்த நாட்டிற்கு சென்று எப்படியான தொடர்களில் விளையாடினாலும் குறித்த தொடருக்காக அந்நாட்டுக்கே பயணம் செய்து போட்டி நடக்கும் மைதானத்தில் இலங்கை அணிக்கு ஆதரவு தரும் ரசிகர்கள் சிலர் உள்ளனர்.
அந்த அடிப்படையில் தாய் நாட்டுக்கு ஆதரவு தர உலகின் எந்த மூலைக்கும் பயணிக்கும் ஆர்வம் கொண்ட ஒரு தீவிர ரசிகரே மொஹமட் நிலாம் ஆவார். இலங்கையுடன் விளையாடும் சக அணி வீரர்களும் நிலாமுடன் நட்புறவை பேணி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய அணி வீரரான ரோஹித் சர்மா மிக முக்கியமானவர். நிலாம் இலங்கை அணியோடு மட்டுமல்லாது ரோஹித்துக்கும் மிகப் பெரிய ரசிகராக இருந்து வருகின்றார்.
புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்த தமிழக நட்சத்திரம் கார்த்திக்!
கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால்…
கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. அங்கு இலங்கை அணி விளையாடிய போட்டிகளில் ஆதரவுதர மொஹமட் நிலாமும் அங்கு சென்றிருந்தார். எனினும் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் துரதிஷ்டவசமாக நிலாமின் தந்தை புற்று நோய்க்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைந்த நிலாமுக்கு உடனடியாக நாடு திரும்ப வேண்டிய கட்டாய நிலை ஒன்று உருவாகியிருந்தது. இப்படியான ஒரு தருணத்தில் நிலாம் இலங்கை செல்லத் தேவையான விமானப் பயண சீட்டையும் பண உதவியையும் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா வழங்கியதோடு, நிலாமுகக்கு ஆறுதலும் கூறி தான் இலங்கை வரும் போது நிலாமின் வீட்டுக்கு வருவதாகவும் உறுதியளித்திருந்தார்.
அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை (16) ரோஹித் சர்மா கொழும்பில் உள்ள நிலாமின் வீட்டுக்குச் சென்றதன் மூலம், இலங்கையின் தீவிர ரசிகர் ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கின்றார்.
பிரபலங்கள் பொதுவாக எந்தவித முன்னறிவிப்புக்களுமின்றி தங்களது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவர். அதேமாதிரியாகவே, ரோஹித் சர்மா எந்தவித முன்னறிவிப்புக்களுமின்றி நிலாமின் வீட்டுக்குச் சென்று தனது ரசிகரையும் அவரது குடும்பத்தையும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார்.
இந்திய அணி வீரர் ஒருவர் இலங்கை ரசிகரின் வீடொன்றுக்குச் சென்ற விடயம் இந்திய, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாகவே இருக்கின்றது.
நிலாமின் வீட்டுக்குச் சென்றது தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு ரோஹித் சர்மா இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
“எனக்கு அவரை (நிலாமை) பல ஆண்டுகளாகத் தெரியும். எனக்காக நீண்ட காலமாக அவர் உற்சாகம் தந்து வருகின்றார். எனக்கு அந்த நாள் இன்னும் நினைவிருக்கின்றது. இந்தியாவில் இடம்பெற்று முடிந்த டெஸ்ட் போட்டியொன்றின் பின் அவர் அழுது கொண்டு என்னிடம் அவரது தந்தையின் சுகவீனம் பற்றிக் கூறியிருந்தார்“
“இப்படியான ஆட்களே எங்களை இன்றைய நாளில் நாங்கள் இப்படி இருக்க காரணமாக இருக்கின்றனர். இவர்கள் தான் எங்களுக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றனர். எங்களுக்கு துன்பம் வரும் போது இப்படியானவர்களே பின்னால் இருந்து தட்டிக் கொடுக்கின்றனர். நான் மார்ச் மாதம் இலங்கைக்கு வந்தால் உங்களது வீடு வந்து உங்கள் தந்தையைப் பார்க்கின்றேன் எனக் கூறினேன். இன்று, என்னை அவர்கள் பார்க்க கிடைத்தது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது“
நிலாமின் தந்தை சுகவீனமுற்றிருந்த விடயம், சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதீர் கெளதம் மூலம் ரோஹித் சர்மாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
மெதிவ்ஸ், சந்திமாலின் சேவையை எதிர்பார்க்கும் இலங்கையின் முன்னாள் வீரர்
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்..
ரோஹித் சர்மா பற்றி கருத்து தெரிவித்த நிலாம், “ ரோஹித் தூய்மையான இதயம் கொண்ட ஒருவர், எனக்கும் நல்ல ஞாபகம் இருக்கின்றது. எனது குடும்பத்தார் என்னிடம் தொலைபேசியில் எனது அப்பாவுக்கு சுகவீனம் என்று கூறினர். உண்மையைச் சொல்லப் போனால், அப்போது என்னிடம் பணம் எதுவும் இருக்கவில்லை மேலும் இந்தியாவிலும் எனக்கு ஒருவரையும் தெரியாது. விரைவாக விமானம் ஒன்றில் செல்ல வேண்டுமெனில், அதற்கு செலவாகும் பயணச்சீட்டு செலவு மிக அதிகம். இந்த தருணத்தில் எனது விடயம் தொடர்பாக சுதீர் மூலம் அறிந்திருந்த ரோஹித் என்னை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து, ஒரு தொகைப் பணத்துடன் விமானச் சீட்டையும் வழங்கியிருந்தார். இப்படியான விடயத்தை இந்த நாளின் இந்த நேரத்தில் (ரோஹித் சர்மாவைத் தவிர வேறு) யாரால் செய்ய முடியும்? எனக் குறிப்பிட்டார்.
உலகின் எந்த மூலையில் இந்திய அணி விளையாடினாலும், ரோஹித் சர்மாவுக்கு நிலாம் ஆதரவு தருவது வழமையான விடயமாகும். தனது நாடு அல்லாத வேறு நாட்டு வீரர் ஒருவராக இருந்த போதிலும் ரோஹித் சர்மாவுக்கு இலங்கை ரசிகர் ஒருவர் இவ்வாறு ஆதரவு தருவது அவரது துடுப்பாட்டத்திற்கு மட்டுமல்லாது அவரது எளிமையான வாழ்க்கை முறைக்கும், ஏனையோருக்கு உதவும் குணத்திற்கும் கிடைத்த ஒரு கெளரவமாகவே கருதப்படுகின்றது.
“சுதீர் (கெளதம்) சச்சின் டெண்டுல்கருக்கு இருப்பவர்களில் சிறந்த ரசிகன் என்றால், அதே மாதிரியாக நான் தான் ரோஹித் சர்மாவின் சிறந்த ரசிகனாக இருப்பேன்“ எனக் கூறிய நிலாம் ரோஹித்திற்கு தான் எந்தளவு ரசிகராக இருக்கின்றார் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.