விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது?

1453

விஞ்ஞானம் உலகுக்கு தந்த கொடைகளில் ஒன்றே மருத்துவமாகும். மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பேண உதவுகின்ற இத்துறையின் ஒரு கிளையாக “விளையாட்டு மருத்துவம்“ அமைகின்றது.

அந்த வகையில் நவீன விளையாட்டு வீரர்கள் அவர்களது ஆரோக்கியத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொள்ள பிரதானமாக உதவுகின்ற இந்த விளையாட்டு மருத்துவம் பற்றி கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வைத்திய அதிகாரி புஹைம் அவர்கள் பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை ThePapare.com இற்கு வழங்கியிருந்தார்.  

அதனை உங்களுடன் எழுத்து வடிவில் பகிர்கின்றோம்.

கே: விளையாட்டு மருத்துவம் (Sports Medicine) என்றால் என்ன?

உலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உடற்பயிற்சியிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட, துரிதமான வளர்ச்சியும் பிரபல்யமும் அடைந்துகொண்டிருக்கின்ற மருத்துவத்தின் ஒரு துறையாகும்.

Courtesy – ara.cat

விளையாட்டு மருத்துவமானது பின்வரும் பிரதான பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது.

1. விளையாட்டிற்கு முன்னரான மருத்துவப் பரிசோதனை.
2. விளையாட்டு போசணை முறை.
3. விளையாட்டின் போது முதலுதவி சிகிச்சைகளை வழங்கல்.
4. விளையாட்டில் உபாதைகளை தடுக்கின்ற நுட்பங்கள்.
5.விளையாட்டில் ஏற்படுகின்ற உபாதைகளுக்கான சிகிச்சைகள், புனருத்தாபன முறைகள்.
6. விளையாட்டு உளவியல்.
7. விளையாட்டில் ஊக்க மருந்துப் பாவனையினை கட்டுப்படுத்தல்.
8. பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற தொற்றல்லாத நோய்களை கட்டுப்படுத்தல்.

உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக..

கே: விளையாட்டுத்துறைக்கு விளையாட்டு மருத்துவத்தின் அவசியம் என்ன?

விளையாட்டுக்கள் தேசிய, சர்வதேச ரீதியில் விளையாடப்படுகின்ற போது அது அவ்வீரர்களுக்கும் அவர்களது பிரதேசம், நாடு என்பவற்றுக்கும் பெருமையினையும் வருமானத்தினையும் ஈட்டித்தரக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறாக கீழ்மட்ட போட்டி நிலையிலிருந்து விளையாட்டின் உயர் மட்ட நிலைகளான தேசிய, சர்வதேச போட்டிகளிற்கு தெரிவாகின்ற போது வீரர்களிற்கு இடையிலான திறமையானது அண்ணளவாக சமனாகக் காணப்படும்.

இவ்வாறான நிலையில் வீரர்கள் விளையாட்டு மருத்துவம் (Sports Medicine), விளையாட்டு விஞ்ஞானம் (Sports Science) சார்ந்த நுட்பங்கள் உள்வாங்கப்படுவதன் மூலமாகவே உயர்மட்ட போட்டிகளில் வெற்றிபெற்று திறமையான வீரராக வெளிவர முடியும்.

கே: ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் விளையாட்டுக்கு முன்னரான உடற்தகுதிப் பரிசோதனை (Pre-Participation Physical Examination – PPE) மேற்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும், அதற்கான காரணம் என்ன?

விளையாட்டுக்களின் மூலம் பல்வேறு வகையான உடல் மற்றும் உள ரீதியிலான நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும் அதன் மூலம் உபாதைகளும் சிலவேளைகளில் திடீர் திடீர் உயிரிழப்புகளும் நிகழ்ந்து விடுகின்றன. இவ்வாறாக ஏற்படுகின்ற திடீர் இறப்புக்களில் அனேகமானவை பிறப்புடன் சார்ந்த இதயத்தின் கட்டமைப்பு, தொழிற்பாடுகளிலுள்ள பிரச்சினைகள் மூலமாக நிகழ்கின்றன.

அவ்வாறான உயிரிழப்பினை ஏற்படுத்துகின்ற காரணிகள் மட்டுமல்லாமல் உபாதைகளை ஏற்படுத்துகின்ற காரணிகளைக் கண்டறிவதுடன், ஒரு நபர் அக்குறிப்பிட்ட விளையாட்டிற்கு தகுதியுடையவராக இருக்கின்றாரா? எனக் கண்டறிவதும் இதன் பிரதான நோக்கங்களாகக் காணப்படுகின்றது.  

கே: விளையாட்டில் உணவு முறையின் (Sports Nutrition) முக்கியத்துவத்தினைப்பற்றி கூறமுடியுமா?

Courtesy – anwnutrition.com

தசைத் தொழிற்பாட்டின் மூலமாகவே உடல் இயக்கமடைகின்றது. இவ்வாறான இயக்கத்திற்கு சக்தி வழங்கல் அவசியமாகிறது. எனவே, தொடர்ச்சியான தொழிற்பாட்டின் மூலம் விளையாட்டுக்களில் ஈடுபடும்போது பயன்படுகின்ற சக்தியானது நாம் சாப்பிடுகின்ற உணவிலுள்ள போசணைப்பொருட்கள் மூலமாகவே உருவாகின்றது.

இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க

மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான..

காபோவைதரேற்று, கொழுப்பு என்பன பெருமளவிலும் புரதம் அரிதாகவும்  உடலுக்கு சக்தியை வழங்குகின்றது. ஒரு விளையாட்டு வீரனது நாளாந்த உணவானது ஒரு முழுமையடைந்த உணவாகவும் அதில் 65% மாப்பொருள், 30% கொழுப்பு சத்தும், 5-15% வீத புரதமும் அடங்கியிருப்பதுடன் விற்றமின்கள், கனியுப்புக்கள் நீர் என்பன உள்ளடங்கியதாகவும் இருத்தல் வேண்டும்.

இவ்வாறான உணவுமுறைகள் போட்டிகளை அண்மிக்கும்போதும் அதன் பின்னரும் போட்டிகளின் வகைகளிற்கேற்ப வித்தியாசப்படலாம்.  

கே: விளையாட்டில் தடுக்கப்பட்ட மருந்து/பதார்த்தங்களின் பாவனை (Doping in Sports) சம்பந்தமாக கூறமுடியுமா?

விளையாட்டு வீரர்கள் போட்டிகளின் போது பாவிக்கக்கூடாத சில மருந்துகள் உலக ஊக்கமருந்துக்கெதிரான அமைப்பின் (World Anti-Doping Agency – WADA) மூலம் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. இவை விளையாட்டு வீரர்களுக்கு வாழ் நாள் பூராகவும், சில மருந்துகள் விளையாட்டு வீரர்களிற்கு போட்டி நடைபெறுகின்ற போதும் தடை செய்யப்பட்டுள்ளன.

Caption – mytoba.ca

அதோடு பின்வரும் காரணங்களுக்காக குறிப்பிட்ட மருந்துகள் தடுக்கப்பட்டு அவை பாவிப்பவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படுகின்றது.

a. செயற்கையான முறையில் விளையாட்டுத்திறனை அதிகரிக்க கூடியதாக இருத்தல்.

b. உடல் நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருத்தல்.

c. விளையாட்டின் உண்மைத்தன்மைக்கும், நேர்மைக்கும் கலங்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருத்தல்.

கே: விளையாட்டிற்கு பயிற்சி வழங்குதலில் எவ்வாறான விடயங்கள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்?

அது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்துவமிக்கதாக காணப்படும். ஒரு வீரரிற்கு பயிற்சியளிக்கும் போது அவர் விளையாட்டில் ஈடுபடும் முறையினை (Skills) மாத்திரம் கருத்திற்கொள்ளாது அங்கு பாவிக்கப்படுகின்ற தசைவகை, சக்தி வழங்கப்படும் பொறிமுறை, அந்தப் போட்டிக்கான நேரத்தின் அளவு, உபாதைகளைத் தடுக்கின்ற உடற்பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் என்பனவும் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.  

கே: விளையாட்டு வீரர்களிற்கு ஏற்படுகின்ற உபாதைகளைப்பற்றி (Injuries in Sports) கூறமுடியுமா?  

விளையாட்டின் போது உபாதைகள் இரண்டு வகையாக ஏற்படுகின்றன.       

a. திடீரென ஏற்படுகின்ற உபாதைகள். (Acute Injury)

இவை நேரடியான (Direct Injury) அல்லது நேரடியற்ற முறையில் (Indirect Injury) ஏற்படலாம்.

b. படிப்படியாக ஏற்படுகின்ற உபாதைகள். (Chronic Injury)

திடீரென ஏற்படுகின்ற உபாதைகள் (Acute Injury)

விழுவதன் மூலமாக அல்லது பாவிக்கப்படுகின்ற பந்துகள் மட்டைகள் அல்லது வேறு பொருட்கள் எதிர்பாராத விதமாக உடம்பில் தாக்குவதன் மூலமாக நேரடியான முறையிலும், வேகமாக ஓடும்போது அல்லது பந்தினை வேகமாக அடிக்கும்போது ஏற்படுகின்ற தசைக்கிழிவுகள் நேரடியற்ற முறையிலும் திடீரென ஏற்படலாம்.

படிப்படியாக ஏற்படுகின்ற உபாதைகள் (Chronic Injury) நீண்ட நாட்களாக தசை/என்பு/இணையம்/சிரை என்பவற்றில் பாதிப்புகளை உண்டாக்கி அந்த இடத்தில் வலி, வீக்கங்கள் ஏற்பட்டு விளையாட்டில் பங்கு பற்ற முடியாமலிருக்கும்.

கே: விளையாட்டு உளவியல் (Sports Psychology) சம்பந்தமாக கூறமுடியுமா?

விளையாட்டின் போது உள்ளத்தின் நிலையானது தடுமாறாமல் உயர்ந்த நிலையில் பேணப்படுவதன் மூலம் விளையாட்டில் கடுமையான போட்டி நிலவுகின்ற போது சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.  

இங்கு சிலவேளைகளில் கோபங்களை அல்லது உச்ச உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில் குறித்த இலக்கினை அடைந்து கொள்வதற்காக மனதினை ஒருங்கிணைத்து வெற்றி இலக்கினை நோக்கி செலுத்த வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில் அச்ச உணர்வுகளை அகற்றி பழைய உயர் பெறுபேறுகளை மனதினுள் தக்கவைத்து செயற்பட வேண்டியிருக்கும்.

கே: விளையாட்டில் உபாதைகளைத் தடுத்தலானது (Sports Injury Prevention) விளையாட்டு மருத்துவத்தின் ஒரு முக்கியமான பங்காகும். அதனை விரைவாகக் கூறமுடியுமா?

விளையாட்டுக்களின் போது உபாதைகளைத் தடுக்கின்ற உக்திமுறைகள் விளையாட்டு மருத்துவத்தின் பிரதானமான பகுதியாகும். எதிர்பாராத விதமாக விளையாட்டின் போது ஏற்படுகின்ற உபாதைகளானது சில வேளைகளில் தவிர்க்க முடியாததாக காணப்பட்டாலும் பெரும்பாலான உபாதைகளை   அதனைத் தடுப்பதற்கான உக்திமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தவிர்த்துக்கொள்ளப்பட முடியும்.

டெஸ்ட் அரங்கில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்ற நட்சத்திரங்கள்

சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் குறித்த டெஸ்டில்…

கே: எவ்வாறான யுக்தி முறைகள் மூலம் விளையாட்டுக்களில் ஏற்படுகின்ற உபாதைகளிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும்?

a. உடலை சூடாக்குகின்ற உடற்பயிற்சிகள் (Warm Up)

இது விளையாட்டினை ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்யவேண்டிய உடற்பயிற்சியாகும். இதன் மூலம் இறுக்கமடைந்து காணப்படுகின்ற தசைகள் இயங்க ஆரம்பிப்பதுடன் அத்தசைகளிற்கான இரத்த ஓட்டம் போசணைப் பொருட்கள், ஒட்சிசனின் அளவு அதிகரிப்பதனால் தசை என்புகள் சீராக இயங்க ஆரம்பிக்கின்றன. அத்துடன் அத்தசைகளிற்கு குருதியினை வழங்குகின்ற இதயத்தின் தொழிற்பாடானது படிப்படியாக சீராக அதிகரித்துச் செல்ல இப்பயிற்சிகள் உதவுகின்றன.

b. தசை, இணையம் என்பவற்றினை நீட்சியடையச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் (Stretching).

இறுக்கமடைந்திருக்கின்ற தசைகள், இணையங்கள் தளர்வடைவதனால் மூட்டுக்களின் இயங்குகின்ற வீச்சத்தின் அளவு அதிகரிப்பதன் மூலம் தசை, இணையம், மூட்டுக்கள், என்புகளில் ஏற்படுகின்ற உபாதைகளின் அளவு குறைவடைகின்றது.

c. விளையாட்டின் பின் உடல் சூட்டினைத் தணிக்கின்ற (Warm down/Cool down) பயிற்சிகளைச் செய்வதன்மூலம் வியர்வைக் கழிவுகள் அகற்றப்படுவதுடன் இதயத்தொழிற்பாடு படிப்படியாக குறைவடைந்து சாதாரண நிலைக்கு வருகின்றது.

d. பாதுகாப்பு அணிகலன்களைப் பாவித்தல்

e. விளையாட்டின்போது பாவிக்கப்படுகின்ற உபகரணங்கள் அளவு, நிறை என்பன பொருத்தமானதாக இருத்தல்.

f. விளையாட்டின் போது இருக்கின்ற காலநிலை, விளையாட்டு மைதானத்தின் தரையமைப்பு என்பன கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

g. விளையாட்டில் உணவுமுறை (Sports Nutrition)

h. விளையாட்டில் சிறந்த உளனிலை (Sports Psychology).

i. விளையாட்டிற்குரிய சட்டதிட்டங்களை பேணி விளையாடுதல் (Rules and Regulations)

கே: தொற்றல்லா நோய்களினைத் (Non – Communicable Diseases) தடுத்தலில் விளையாட்டு மருத்துவத்தின் பங்களிப்பு என்ன?

தொற்று அல்லாத நோய்களாவன இருதய வியாதி, சீனி வியாதி (Diabetes), உயர்குருதியமுக்கம் (Hypertension), பாரிசவாதம் (Stroke), புற்று நோய்கள் (Cancers), மூட்டு தேய்வடைதல் (Osteoarthritis), என்பு மென்மையாதல் (Osteoporosis) என்பனவாகும்.

மனித இறப்புக்களில் 65-70% இவ்வாறான நோய்களின் மூலமே ஏற்படுகின்றன. இவ்வாறான நோய்களை ஏற்படுத்தும் காரணிகளாக முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, அதிக உடல் நிறை (Obesity), மது மற்றும் புகைத்தல் பாவனை என்பன காணப்படுகின்றன.

எனவே, மேற்குறிப்பிட்ட தீய பழக்கங்களிலிருந்து தவிர்ந்துகொண்டு நல்ல உணவுப் பழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

நன்றி

Dr. A.A.M. புஹைம்
(MBBS,PGD Sports & Exercise Medicine, DFBM,DCO)

விசேட விளையாட்டு உடற்பயிற்சி மருத்துவர்,
ஊக்கமருந்து தடுப்பு அதிகாரி, விளையாட்டு மருத்துவப்பிரிவு,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, அம்பாறை.