ஆசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையின் சமன்த புஷ்பகுமார ஆண்கள் பிரிவில் 19ஆவது இடத்தையும், நிலானி ரத்னாயக்க பெண்கள் பிரிவில் 12ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
ஆசிய நகர்வல ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் இருவர்
14ஆவது ஆசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவின் கியாங் நகரில் இன்று நடைபெற்றதுடன், இப்போட்டித் தொடரில் இலங்கை சார்பில் 2 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்படி, 12 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக அமைந்த ஆண்களுக்கான திறந்த போட்டிப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சமன்த புஷ்பகுமார, போட்டித் தூரத்தை 41.55 செக்கன்களில் நிறைவுசெய்து 19ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றிய இப்போட்டியில், சீனாவைச் சேர்ந்த பேன்க் கியென்வா, போட்டியை 38.22 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் நாட்டு வீரர்களான நிஷியமா கஷுயா(38.26 செக்) மற்றும் இமினிஷி சியுன்ஷியிகே(38.28 செக்) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதேநேரம், 8 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக அமைந்த பெண்களுக்கான திறந்த போட்டிப் பிரிவில் இலங்கை சார்பாக போட்டியிட்ட நிலானி ரத்னாயக்க, போட்டியை 30.56 செக்கன்களில் நிறைவுசெய்து 12ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக
இதில் 15 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டதுடன், சீனாவின் லீ டான் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் குறித்த போட்டியை 28.03 செக்கன்களில் நிறைவுசெய்திருந்தார். அத்துடன், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஏபி யுகாரி(28.06 செக்) வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவைச் சேர்ந்த சன்ஜீவனி பி ஜாதவ்(28.19 செக்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இப்போட்டித் தொடரின் மற்றுமொரு அங்கமாக நடைபெற்ற ஆசிய நகர்வல கனிஷ்ட போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சீனாவின் சுவலங் கெரின் தங்கப் பத்தையும், பெண்கள் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த வாட யுனா தங்கப் பத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்படி, இம்முறை ஆசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் திறந்த மற்றும் குழு நிலைப் போட்டிகளில் ஜப்பான் சம்பியன் பட்டத்தை வென்றதுடன், 2ஆவது இடத்தை சீனா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.