தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக

1238

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வுகள் வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச அனுபவம் கொண்ட பயிற்றுவிப்பாளருமான பக்கீர் அலி கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.  

அடுத்த வாரம் ஆரம்பமாகும் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய…

இந்நிலையில், பக்கீர் அலியின் பயிற்றுவிப்பின்கீழ் இலங்கை அணி பங்குகொள்ளவுள்ள முதலாவது போட்டித் தொடராக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள சாப் சம்பியன்ஷிப் கால்பந்து தொடர் அமையவுள்ளது.  

எனவே, குறித்த தொடருக்கான இலங்கை அணியைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகளை பல கட்டங்களாக நடத்துவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்தது. அதேபோன்று இம்முறை A மற்றும் B என இரண்டு குழாம்களைத் தெரிவு செய்வதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்வுகளின் முதல் கட்டம் கடந்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகின.

இந்நிலையில், சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கு கொள்ளும் அணிகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் l) தொடரில் பங்குகொள்ளும் அணிகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட வீரர்களுக்கான தேர்வுகள் மூன்று கட்டங்களாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.

Photos – Training Session – Nizam Packeer Ali (Head Coach)

Photos – Training Session – Nizam Packeer Ali (Head Coach)..

இதன் அடுத்த கட்டமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான தேர்வுகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன. கால்பந்து சம்மேளனம் ஏற்கனவே தெரிவித்திருந்தமைக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வுகள் ஒரே முறையில் இம்மாதம் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், அரியாலை கால்பந்து பயிற்சி மையத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பகுதி வீரர்களுக்கு தேசிய அணியில் இணைவதற்கு சிறந்த முறையில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக தேர்வுகளை நடத்த முடிவெடுத்ததாக இலங்கை தேசிய கால்பந்து அணியின் முகாமையாளர் சுனில் சேனவீர ThePapare.com இடம் தெரிவித்தார்.  

இதன்படி, வட மாகாணத்திற்கான தேர்வுகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் அரியாலை கால்பந்து பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து, கிழக்கு மாகாணத்திற்கான தேர்வுகள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.   

தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு குறித்து தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலி ThePapare.com இடம் வழங்கிய பிரத்தியேகமான பேட்டியில், ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இங்குள்ளவர்களுக்கு தமிழ் மொழி தெரியாத காரணத்தினால் அவர்கள் தேசிய அணிக்கும், தேர்வுகளுக்கும் வருவதற்கு அஞ்சுகின்றனர்.

எனினும், எனக்கும் எமது முகாமையாளருக்கும் தமிழ், சிங்களம் உட்பட பல மொழிகள் தெரியும். எனவே, இதன் பிறகு வடக்கு, கிழக்கு வீரர்கள் எந்தத் தயக்கமும் இன்றி தேசிய அணியிலும், தேர்வுகளிலும் கலந்துகொள்ளலாம். அதுபோன்றே, குறித்த பகுதி வீரர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த நாம் முன்பைவிட அதிகமான வாய்ப்புக்களை வழங்குவோம். அங்குள்ள தலைசிறந்த வீரர்களையும் நாட்டிற்காக விளையாட வைப்பதே எமது இலக்கு” என்றும் தெரிவித்தார்.  

குறித்த தேர்வுகளும், முன்னர் இடம்பெற்ற தேர்வுகளைப் போன்று ஒவ்வொரு நாளும் தலா இரண்டு கட்டங்களைக் கொண்டதாக அமையும். இதன்போதும் தேர்வுகளுக்கு வரும் வீரர்களுக்கான தங்குமிட மற்றும் உணவு வசதிகள் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.