சுதந்திரக் கிண்ண முத்தரப்புத் தொடரின் மூன்றாவது T-20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷுடன் தோல்வியினைச் சந்தித்திருக்கின்றது. இந்த தோல்விக்கு தொடரை நடாத்தும் நாடான இலங்கையின் மோசமான பந்துவீச்சே காரணம் என அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்திருக்கின்றார்.
[rev_slider LOLC]
நேற்று (10) போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சந்திமால் தமது அணி பந்துவீச்சுத்துறையில் திட்டமிட்டிருந்த விடயங்கள் எதிர்பார்த்த விதத்தில் நடைபெறாது போயிருந்தமைக்காக தான் ஏமாற்றம் அடைவதாக குறிப்பிட்டிருந்தார்.
“ எங்களது பந்துவீச்சு எதிர்பார்த்ததைவிட இன்று மோசமாக அமைந்திருந்தது, அதோடு பந்துவீச்சு தரப்பாக நாம் திட்டமிட்ட விடயங்களும் கைகூடியிருக்கவில்லை. இதுவே, எங்களுக்கு தோல்வியினை தந்தது.” என்றார்.
சாதனை வெற்றியுடன் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தொடரின் மூன்றாவது போட்டியாக சனிக்கிழமை (10) நடைபெற்ற இந்த ஆட்டத்தில்
இலங்கை வீரர்கள் எந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், பங்களாதேஷ் அணி ஆரம்ப வீரர்களான தமிம் இக்பால் மற்றும் லிடன் ஆகியோரின் துணையுடன் தமது முதல் 50 ஓட்டங்களினையும் வெறும் 25 பந்துகளிலேயே பெற்றிருந்தது. அதோடு, நம்பிக்கைக்குரிய சுழல் வீரர்களில் ஒருவரான அகில தனன்ஞய ஆரம்பத்திலேயே இரண்டு ஓவர்களில் 24 ஓட்டங்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்திருந்தார். இதுவும் பங்களாதேஷ் பாரிய இலக்கு ஒன்றினை எட்டுவதற்காக சிறந்த சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்க காரணமாக அமைந்திருந்தது.
அகில தனன்ஞயவின் பந்துவீச்சு பற்றி பேசியிருந்த சந்திமால்,
“ இன்று எமக்கு அது (அகிலவின் பந்துவீச்சு) சரியான முறையில் வேலை செய்திருக்கவில்லை. எங்களிடம் இருக்கும் முதல்தர பந்துவீச்சாளர் அவர்தான். அதாவது, சுழல் வீரராக எமக்கு இருக்கும் விக்கெட்டுக்களை கைப்பற்றக் கூடிய பந்துவீச்சாளர் அகில. துரதிஷ்டவசமாக அவருக்கு இன்று இயலாமல் போய் விட்டது. வெறும் இரண்டு போட்டிகளில் மாத்திரமே (அகில சரியான முறையில் பிரகாசிக்காது போயிருந்தது) இப்படி நடந்திருக்கின்றது. பங்களாதேஷில் இடம்பெற்ற போட்டிகளில் அவர் மிகவும் சிறப்பாக செயற்பட்டிருந்தார். இப்படியாக வீரர் ஒருவர் கிரிக்கெட் போட்டியொன்றில் பிரகாசிக்காமல் போவது வழமையாக நடக்கும் விடயங்களில் ஒன்றுதான், அவர் மீண்டும் இலங்கை அணிக்காக சிறப்பாக விளையாடுவார் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். “ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அணி ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த போதிலும், அணித்தலைவர் மஹ்மதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் போன்றோரின் துடுப்பாட்டம் பங்களாதேஷ் அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு போராட மிகுதியாக எதனையும் வைத்திருக்கவில்லை. விக்கெட்டுக்கள் பறிபோன பின்னரும் அவர்கள் ஓவர் ஒன்றிற்கு 10 ஓட்டங்களுக்கு மேல் பெறுவதனை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்திருந்தனர்.
“ T20 போட்டிகளை பொறுத்தவரை, எப்படியான மொத்த ஓட்டங்களை நீங்கள் பெற்ற போதிலும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்கள் கைப்பற்றுவது உங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இந்த குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிக்கு அதுவே முக்கியம். இதனால், நாங்களும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்கள் கைப்பற்ற எதிர்பார்த்திருந்தோம். எனினும், பந்துவீச்சுத் தரப்பாக எமக்கு அது கைகூடியிருக்கவில்லை. “
போட்டி நடந்த ஆடுகளம் மிகவும் சிறந்த முறையில் இருந்தது என்று குறிப்பிட்ட சந்திமால், இரண்டு அணிகளதும் துடுப்பாட்ட வீரர்கள் வித்தியாசமான முறையில் செயற்பட்டது தான் போட்டியின் போக்கு மாறக்காரணம் என்றும் கூறியிருந்தார். எனினும், பொதுவாக ஆர். பிரேமதாச மைதானம் குறைந்த ஓட்டங்கள் பெறப்படுகின்ற (பந்துவீச்சுக்கு சாதகமான) மைதானங்களில் ஒன்றாகும். நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் குறைந்த பங்களிப்பினை வழங்க துடுப்பாட்ட வீரர்கள் (குறிப்பாக பங்களாதேஷ் அணியின் சார்பாக) அசத்தியிருந்தனர்.
Photos – Sri Lanka v Bangladesh – Nidahas Trophy 2018 Match #3
Photos of the 3rd match of Nidahas Trophy between Sri Lanka and Bangladesh.
“ ஆடுகளங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம் எனில், இந்த தொடரில் எமக்கு நல்ல ஆடுகளங்கள் தரப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களினை எடுத்துப் பார்க்கும்போது, இங்கே சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், இப்போது அப்படியிருப்பதில்லை. இது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளம் ஒன்றே. (இப்படியான ஆடுகளம் ஒன்றை வழங்கியமைக்கு) நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்தப்போவதும் இல்லை. நாங்கள் நல்ல இலக்கு ஒன்றினை வைத்திருந்தோம். ஆனால், சில தவறுகளினால் பந்துவீச்சுத்துறை சொதப்பலாகிவிட்டது. எங்கள் பந்துவீச்சாளர்களும் சில இடங்களில் போராடியிருந்த போதிலும், எல்லா இடத்திலும் எமக்கு திட்டமிட்ட முறையில் நடைபெறாதது இறுதியில் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. இப்படியான விடயங்கள் கிரிக்கெட்டில் நடக்கும் தான். 200 ஓட்டங்கள் பெறுவது என்பது உங்களது அணியின் வெற்றியினை உறுதி செய்யாது. எல்லாப் பெருமையும் பங்களாதேஷ் அணிக்கே சாரும். சிறந்த முறையில் அவர்கள் விளையாடியிருந்ததோடு, அழுத்தம் நிறைந்த தருணங்களையும் நல்ல முறையில் கையாண்டியிருந்தனர். “
தோல்வியினை ஒரு இடத்தில் வைத்து பார்த்தால், இலங்கை அணி இப்போட்டியில் சில நேர்மறையான (Positive) விடயங்களினையும் வெளிப்படுத்தியிருக்க தவறவில்லை எனவும் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் கூறினார். அதில் ஒன்றாக இலங்கை அணியின் நேற்றைய துடுப்பாட்டத்தினை குறிப்பிட்டிருந்தார்.
“ எங்களால் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. ஒரு அணியாக எமது இலக்கு எல்லாப் போட்டிகளும் எதிரணிகளுக்கு சவால் தரும் வகையில் செயற்படுவதுதான். இதுவே, அணியொன்றுக்கு வெற்றி வாய்ப்புக்களை பெற்றுத்தரும். நாங்கள் இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், நல்ல முறையில் கிரிக்கெட் விளையாடியிருந்தோம். ஆனால், இந்த நாளில் பங்களாதேஷ் எங்களை விட சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாடி விட்டது. “