இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் யாழ் இந்துக் கல்லூரி

940

இந்து மைந்தர்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு (பம்பலபிட்டி) இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி (BIG MATCH) இன்று (9) 9ஆவது தடவையாக யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

கடந்த ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற இரண்டு அணிகளுக்குமிடையிலான ஆண்டுச் சமர் (8ஆவது) சமநிலை முடிவை எட்டியிருந்ததை அடுத்து, இம்முறை வெற்றி எதிர்பார்ப்புக்களுடன் இரண்டு அணிகளும் களமிறங்கியிருந்தன.

இரண்டு நாட்கள் இடம்பெறும் (9,10) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் தலைவர் சரண் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது அணிக்காக தெரிவு செய்து கொண்டார்.

வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த யாழ் மத்திய கல்லூரி முன்னிலையில்

இதன்படி, பிரவீன் குமார் மற்றும் கெனிஷன் ஆகியோருடன் கொழும்பு இந்துக் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்தது. ஆரம்ப வீரர்களில் ஒருவரான பிரவீன் குமாரின் விக்கெட்டினை 8 ஓட்டங்களுடன் ஆடுகளத்துக்குச் சொந்தக்காரர்களான யாழ் இந்துக் கல்லூரி அணியினர் சந்துருவின் ஓவரில் கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கெனிஷனையும் சந்துரு 17 ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார்.

தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்சை களத்தில் நின்ற தினேஷ் மற்றும், புதிய துடுப்பாட்ட வீரராக வந்திருந்த ஷேவாக் ஆகியோர் முன்னெடுத்துச் சென்றனர்.

இரண்டு வீரர்களினதும் சிறந்த ஆட்டத்தினால் கொழும்பு பாடசாலைக்கு மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 65 ஓட்டங்கள் கிடைத்திருந்தது. தொடர்ந்து, ஷேவாக் 24 ஓட்டங்களுடன் கொழும்பு இந்துக் கல்லூரியின் மூன்றாம் விக்கெட்டாக மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

எனினும், தினேஷ் பெற்றுக் கொண்ட அரைச்சதம் மூலம் கொழும்பு இந்துக் கல்லூரி வலுப் பெற்றுக் கொண்டது. தினேஷின் விக்கெட்டை அடுத்து சடுதியான முறையில் துடுப்பாட்ட வீரர்களை இழந்த கொழும்பு இந்துக் கல்லூரி அணியினர் 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தினேஷ் 65 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களினை குவித்திருந்தார். இதேவேளை, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பந்துவீச்சில் சிவலுக்ஷன் வெறும் 49 ஓட்டங்களை விட்டுத் தந்து 5 விக்கெட்டுக்களையும், கோபிராம் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை யாழ் இந்துக் கல்லூரி ஆரம்பித்திருந்தது. யாழ் இந்துக் கல்லூரி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான G. சந்தோஷ் 32 ஓட்டங்களுடன் அணிக்கு பெறுமதி சேர்ந்திருந்தார்.

சந்தோஷூக்கு கைகொடுத்த ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான U. மிலுக்ஷன் அரைச்சதம் கடக்க கொழும்பு இந்துக் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் மொத்த ஓட்டங்களை இலகுவாக யாழ்ப்பாண வீரர்கள் தாண்டினர்.

மிலுஷனின் விக்கெட் கொழும்பு இந்துக்கல்லூரி வீரர் கெனிஷனின் பந்துவீச்சில் பறிபோயிருந்தது. ஆட்டமிழக்கும் போது மிலுஷன் 120 பந்துகளுக்கு 10 பெளண்டரிகள்  2 சிக்ஸர்கள் அடங்கலாக 71 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

மனுல பெரேராவின் அபார பந்துவீச்சினால் முதல் நாள் றோயல் வசம்

தொடர்ந்து வந்த வீரர்களில், Y. விருஷனும் அரைச்சசதம் ஒன்றுடன் உதவ போட்டியின் முதல் நாள் முடிவில் யாழ். இந்துக் கல்லூரியானது முதல் இன்னிங்சுக்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை குவித்து வலுப்பெற்றிருந்தது.

அரைச்சதம் ஒன்றினை தாண்டிய நிலையில் (50*) விருஷனும், R. கஜனநாத் 33 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

கொழும்பு இந்துக் கல்லுரியின் இன்றைய பந்துவீச்சு சார்பாக கெனிஷன் இரண்டு விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 165 (45.4) – தினேஷ் 66, ஷேவாக் 24, சிவலுக்ஷன் 49/5, கோபிராம் 17/3, சந்துரு 38/2

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 212/4 (42) – U. மிலுக்ஷன் 71, Y. விருஷன் 50*

போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்