மத்திய வரிசை சிறப்பாக இல்லாதபோதும் வெற்றி நம்பிக்கைதருகிறது – குசல் பெரேரா

643

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் குசல் ஜனித் பெரேராவின் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதற்கு துரதிஷ்டமான நிகழ்வுகளுக்கும் நியாயமான பங்கு உள்ளது. முதலில், அவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக தவறுதலாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பின்னர் சர்வதேச கிரிக்கெட் சபையினால் அது வாபஸ் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பின் தொடை பகுதியில் ஏற்பட்ட தீவிரமான உபாதைகள் அவரை போட்டியில் இருந்து தூரமாக்கியது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு பின்னர் பெரேரா தனது சொந்த மண்ணில் ஆடும் முதல் போட்டியாக இது இருந்தது. இதற்கு முன் கடைசியாக அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே இலங்கையில் விளையாடினார்.    

ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (06) நடந்த சுதந்திர கிண்ண முதல் போட்டியில் 27 வயது குசல் பெரேரா 37 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்று இந்திய அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்த உதவியது அவர் போட்டிக்கு மீண்டும் திரும்பும் மறக்க முடியாத ஆட்டமாக இருந்தது.   

குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய இலங்கை

“கடந்த பல மாதங்களில் ஒரு சில காயங்கள் இருந்து வந்தன. இந்த தொடருக்கு முன்னர் நான் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடியதோடு அதில் சிறப்பாக செயற்பட்டேன். எனவே தொடரின் முதல் போட்டியில் நான் அதிக நம்பிக்கையுடனேயே இருந்தேன். சிறப்பாக செயற்பட முடிந்ததையிட்டு நான் அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று போட்டிக்கு பின்னர் பெரேரா குறிப்பிட்டார்.    

ஷர்துல் தாகூர் வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் பெரேரா ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 27 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலம் 175 ஓட்ட வெற்றி இலக்கை எட்டிய இலங்கை அணிக்காக போட்டியை திசை திருப்பும் வீரர் என்பதை அவர் நிரூபித்தார். “T20 கிரிக்கெட்டில் 175 ஓட்டங்களை விரட்டுவது இலகுவான சவால் இல்லை. பவர் பிளே ஓவர்களில் அதிகபட்ச ஓட்டங்களை நாம் பெற்றோம். மூன்றாவது ஓவரில் வேகமாக ஆடவேண்டும் என்று நான் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால் ஷோட் (Short) பந்துகளும் புஃல் (Full) பந்துகளுமாக விழுந்ததால் இரண்டு பந்துகளுக்கு பின் நான் அடித்தாட ஆரம்பித்தேன். பந்துகளை அடித்தாட வேண்டும், அதுவே T20 போட்டியாகும்” என்றும் குசல் பெரேரா குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் இந்தியாவிடம் தோல்விகளை சந்தித்த நிலையில் இந்த வெற்றி இலங்கை ரசிகர்களால் கொண்டாடும் தருணமாக இருந்தது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆறு வார சுற்றுப்பயணம் செய்து அனைத்து வகை கிரிக்கெட்டிலுமாக ஒன்பது போட்டிகளிலும் வெற்றி பெற்றது. “இன்று நாம் ஒரு கௌரவமான ஆரம்பத்தை பெற்றோம். ஆனால் மத்திய வரிசையில் நாம் சில விக்கெட்டுகளை இழந்தோம். மத்திய வரிசையின் செயற்பாடு சிறப்பானதாக இருக்கவில்லை. எனினும் போட்டியின் மூன்று துறைகளிலும் வெற்றியுடன் ஆரம்பித்தது திருப்தி தருவதாக இருந்தது” என்று குசல் பெரேரா மேலும் கூறினார்.

“வெற்றியுடன் ஆரம்பித்தது சிறப்பாக இருந்ததோடு அது எமது நம்பிக்கையை பலப்படுத்த உதவும். அதுவே முக்கிய விடயமாகும். நாம் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் கண்டு முன்னேறிச் செல்ல முயற்சிக்க வேண்டும்” என்று பெரேரா கூறினார்.