யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியானது தமது 200ஆவது ஆண்டு பூர்த்தி விழாவினை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில், தமது உட்கட்டுமான அபிவிருத்தியில் பாரிய கவனஞ்செலுத்தி வருகின்றது. கடந்த மாதம் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்தாட்ட மைதானம் திறந்துவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காலநிலைக்கு பாதகமில்லாத டென்னிஸ் ஆடுகளமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய ஞானப்பொன்ராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராயர் வணக்கத்துக்குரிய வில்வராஜ் கனகசபை அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், தனது ஆசியினையும் வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
Photos: Opening Ceremony of St. John’s College Tennis Court
Photos of Opening Ceremony of St. John’s College Tennis Court
வட மாகாணத்தில் அமையப் பெறுகின்ற முதலாவது, காலநிலைக்கு பாதிப்பு ஏற்படாத டென்னிஸ் ஆடுகளம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 3.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த டென்னிஸ் ஆடுகளத்திற்கு திரு. தினேஷ் ஷிறாஃப்ரர் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்.
“இந்த ஆடுகளத்தின் சுற்றுவலை மற்றும் மின் ஒளி அமைக்கும் பணிகள் மீதமாகவிருப்பதாகவும், அதற்கு தேவையான 1.7 மில்லியன் ரூபாவிற்காக தாம் அனுசரணையாளர்களை எதிர்பார்த்திருப்பதாக“ கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய ஞானப்பொன்ராஜா அவர்கள் தெரிவித்தார்.
வைபவ ரீதியான திறப்பு விழாவினைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் அயல் பாடசாலைகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் காட்சிப் போட்டிகளில் பங்கெடுத்திருந்தனர். கல்லூரியினது ரென்னிஸ் மற்றும் மினி ரென்னிஸ் அணிகளின் முன்னேற்றத்திற்கு, இந்த காலநிலைக்கு பாதகமில்லாதா ஆடுகளமானது இனிவரும் காலங்களில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் முகமாக கல்லூரியானது அடுத்த கட்டமாக கிரிக்கெட்டிற்கான புற்தரை ஆடுகளம், அதனைத் தொடர்ந்து ஆழ் நீச்சலிற்கேற்ற நீச்சல் தடாகம் (Diving Swimming Pool) ஆகியன அமைக்கவுள்ளது.
சென். ஜோன்ஸ் கல்லூரியில் இந்த டென்னிஸ் ஆடுகளமானது, வெறுமனே தேசிய போட்டிகளின் போது மாத்திரம் இவ்வாறான ஆடுகளத்தில் விளையாடி வந்த வட மாகாண வீரர்கள் தமது பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறந்த தளமாக அமையும். கல்லூரி டென்னிஸ் அணியை அபிவிருத்தி செய்வதற்கு மாத்திரமன்றி, வடமாகாணத்தில் பெரிதளவு பிரபல்யமில்லாதிருக்கும் டென்னிஸ் விளையாட்டை விருத்தி செய்வதற்கு இதன் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.