சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறும் தென்னாபிரிக்க புயல்

515

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மோர்னே மோர்கல், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரும், வேகப்பந்து வீச்சாளருமான 33 வயதுடைய மோர்னே மோர்கல், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடனான தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்திருந்ததுடன், அண்மையில் நிறைவுக்குவந்த இந்திய அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 13 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மீண்டும் மன்னராக மகுடம் சூடிய இந்தியா

டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது முறையாகவும்..

இந்நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மோர்னி மோர்கெல் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அறிவித்தார்.

மிகவும் கடினமான முடிவு, ஆனால் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க இதுவே சிறந்த தருணம் என்று நினைக்கிறேன். எனக்கு இளம் குடும்பம், அயல்நாட்டு மனைவி என்பவற்றுக்கு மத்தியில் தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நெருக்கமாக அமைக்கப்படுவதால் அழுத்தம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் என்னால் அவர்களுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. எனவே குடும்பத்தை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது புதிய வாழ்க்கையை துவங்குவதற்கும் இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

என்னிடம் பங்களிப்பு செய்ய இன்னமும் நிறைய இருக்கிறது என்றே கருதுகிறேன். ஆனால் எதிர்காலத்தில் எனக்காகக் காத்திருக்கும் விடயங்கள் எனக்கு உற்சாகமூட்டுகின்றன. இப்போதைக்கு எனது ஆற்றலும் கவனமும் தென்னாப்பிரிக்க அணியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறச் செய்வதுதான்என்றார்.

மேலும், தென்னாபிரிக்கா அணிக்காக, தென்னாபிக்காவின் ஜேர்சியுடன் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் அழகானது. இந்த நேரத்தில் எனக்கு இத்தனை ஆண்டு காலம் உறுதுணையாக இருந்த எனது சக வீரர்களுக்கும், எனது குடும்பத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எதிர்வரும் அவுஸ்திரேலிய தொடருக்குப் பிறகு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் பங்களாதேஷ் குழாமில் காயத்திலிருந்து மீளாத ஷகீப்

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர…

அண்மைக்காலமாக தென்னாபிரிக்க வீரர்களை இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்குப் பிடித்துப் போடும் கோல்பாக் ஒப்பந்தத்தில் மோர்னி மோர்கல் பெயர் அடிபட்டது. கைல் அபோட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இங்கிலாந்து கவுண்ட்டி அணிகளுக்காக தற்போது விளையாடி வருகின்றனர். இதற்கு பணம் ஒரு பிரதான காரணம். ஆனால் கோல்பாக் ஒப்பந்தத்தில் தான் கைச்சாத்திடவில்லை என்று மோர்னே மோர்கல் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

கடந்த 2006இல் இந்திய அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட மோர்னே மோர்கல் அப்போதிலிருந்தே தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து துறையில் முக்கிய அங்கம் வகித்தார். 2009இல் மகாயா நிடினி ஓய்வு பெற்ற பிறகு டேல் ஸ்டெய்னின் உறுதுணையாக மோர்கல் செயற்பட்டார். ஸ்டெய்ன், வேர்னன் பிலாண்டர் இல்லாத நிலையில் தென்னாபிரிக்காவின் பந்துவீச்சை வழிநடத்தவும் செய்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015 உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளராகவும் மோர்னே மோர்கல் விளங்கினார். அதிலும், அனைத்து வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் ஒரு கட்டத்தில் முதல் 10 பந்துவீச்சாளராகள் பட்டியலிலும் இடம்பிடித்திருந்ததுடன், 2011இல் ஒரு நாள் பந்துவீச்சாளர்களில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டார்.

அந்த அணிக்காக இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளிலும், 117 ஒரு நாள் போட்டிகளிலும், 44 T-20 போட்டிகளிலும் மோர்னே மோர்கல் விளையாடியுள்ளதுடன், இதில் 294 டெஸ்ட், 188 ஒரு நாள் மற்றும் 44 T-20 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அனைத்துவகை போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக 529 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தென்னாபிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள 5ஆவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.