அடுத்த வாரம் ஆரம்பமாகும் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு

932

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக பகீர் அலி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் சர்வதேச போட்டிகளுக்கான தேசிய அணியைத் தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு எதிர்வரும் நாட்களில் பல கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தெரிவித்துள்ளது.  

கடந்த காலங்களில் சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளாத இலங்கை கால்பந்து அணி, FIFA தரவரிசையில் வரலாற்றில் மிகவும் மோசமான பதிவாக 200ஆவது இடத்தில் உள்ளது.   

இவ்வாறான ஒரு நிலையில், கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெற்ற இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான தேர்தலின் பின்னர் தெரிவாகியுள்ள புதிய நிர்வாகம், இலங்கை கால்பந்தில் பல முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் முதல் கட்டமாக தேசிய அணியை முன்னேற்றும் திட்டத்தில் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை கால்பந்து அணியை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுள்ள பக்கீர் அலி

இலங்கை தேசிய கால்பந்து அணி…

குறித்த திட்டத்திற்கு அமைவாக, இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச மட்டத்தில் அதிக அனுபவத்தை பெற்றவருமான நிசாம் பகீர் அலி தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று தேசிய அணியின் முகாமையாளராக சர்வதேச மட்டத்தில் நடுவராகவும், போட்டி மத்தியஸ்தராகவும் கடமையாற்றிய அனுபவங்களைக் கொண்ட சுனில் சேனவீர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பகீர் அலியின் பயிற்றுவிப்பின் கீழ் இடம்பெறவுள்ள முதலாவது தொடராக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் (SAFF Championship) தொடருக்கான அணியைத் தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு இம்மாதம் 26ஆம் திகதி முதல் பல கட்டங்களாக இடம்பெறவுள்ளன.  

குறித்த தேர்வுக்கு டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் விளையாடும் ஒவ்வொரு கழகங்களிலும் இருந்து தலா 5 வீரர்களையும், பிரிவு ஒன்று (டிவிஷன் l) தொடரில் விளையாடும் கழகங்களில் இருந்து தலா 2 வீரர்களையும் பரிந்துரை செய்ய முடியும்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் குறித்த பகுதிகளிலிருந்தும் தங்களது லீக்குகளினால் பரிந்துரை செய்யப்படும் வீரர்களுக்கென்று தனியான தேர்வொன்றும் இடம்பெறவுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக, முன்னணி அணிகளில் விளையாடாத திறமையான வீரர்களை தேசிய அணிக்கு உள்வாங்கும் நோக்கில் நாடு பூராகவும் உள்ள கால்பந்து லீக்குகளுக்கும் சிறந்த வீரர்களை பரிந்துரை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் குழுவுக்கான தேர்வு  

  • காலம் – பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரை
  • இடம் – பெத்தகான கால்பந்து பயிற்சி மையம்

பங்கு கொள்ளும் தரப்பு

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், ரினௌன் விளையாட்டுக் கழகம், கொழும்பு கால்பந்துக் கழகம், பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம், இராணுவ விளையாட்டுக் கழகம் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றில் இருந்து பரிந்துரைக்கப்படும் வீரர்கள்.

இரண்டாவது குழுவுக்கான தேர்வு  

  • காலம் – மார்ச் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை
  • இடம் – பெத்தகான கால்பந்து பயிற்சி மையம்

சமநிலையான போட்டி முடிவுடன் ஒற்றுமைக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை அணி

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின்…

பங்கு கொள்ளும் தரப்பு

கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம், மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம், நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம், விமானப்படை விளையாட்டுக் கழகம், கடற்படை விளையாட்டுக் கழகம், சொலிட் விளையாட்டுக் கழகம், அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் என்பவற்றில் இருந்து பரிந்துரைக்கப்படும் வீரர்கள்.

மூன்றாவது குழுவுக்கான தேர்வு  

  • காலம் – மார்ச் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை
  • இடம் – பெத்தகான கால்பந்து பயிற்சி மையம்

பங்கு கொள்ளும் தரப்பு

புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் பிரிவு ஒன்று (டிவிஷன் l) தொடரில் விளையாடும் கழகங்களில் இருந்து பரிந்துரைக்கப்படும் வீரர்கள்.

நான்காவது குழுவுக்கான தேர்வு  

  • காலம் – மார்ச் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை
  • இடம் – அரியாலை கால்பந்து பயிற்சி மையம், யாழ்ப்பாணம்

பங்கு கொள்ளும் தரப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள லீக்குகளினால் பரிந்துரை செய்யப்பட்ட வீரர்கள்

இந்த அனைத்து தேர்வுகளின் நிறைவில், தெரிவுக் குழுவினரால் தலா 30 வீரர்களைக் கொண்ட இரண்டு குழாம் தெரிவு செய்யப்படும். எனவே, ஏ மற்றும் பி என வேறுபடுத்தப்பட்ட இந்த இரண்டு குழாம்களிலும் இணைவதற்கு மொத்தம் 60 வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த இரண்டு குழாமுக்கும் பயிற்சிகளும் வேறு வேறாகவே இடம்பெறவுள்ளதுடன், தனித்தனி பயிற்றுவிப்பாளர்களும் அதற்காக நியமிக்கப்படுவர். தெரிவு செய்யப்படும் குழாமை தேர்வுக் குழுவினர் மார்ச் மாதம் 24ஆம் திகதி வெளியிடுவர்.

அனைத்து தேர்வுகளும் வதிவிடத் தேர்வுகளாகவே இருக்கும். எனவே, தேர்வில் பங்குகொள்ளும் அனைத்து வீரர்களுக்குமான தங்குமிட வசதி மற்றும் உணவு என்பவற்றுக்கான சகலவித ஏற்பாடுகளையும் இலங்கை கால்பந்து சம்மேளனம் மேற்கொள்ளவுள்ளது.

ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் கால்பந்து போட்டி இம்மாதம் ஆரம்பம்

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி…

இந்த தேர்வுகள் குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய முகாமையாளர் சுனில் சேனவீர,

”இம்முறை தேசிய அணிக்கான வீரர்கள் தேர்வு முழுமையாக மாற்றமான முறையில் இடம்பெறவுள்ளன. சிறந்த வீரர்களுக்கு ஓரிரு மணி நேரத்தில் அல்லது ஒரு நாளில் தமது திறமையை காண்பிக்க முடியாது. கடந்த காலங்களில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளினால் சில சிறந்த வீரர்கள் தேசிய அணியில் இருந்து விடுபட்டிருக்கலாம்.

எனவே, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் பார்த்து, சிறந்த ஒழுக்கமுள்ள வீரர்களை உருவாக்கும் நோக்கோடு நாம் தேசிய அணியொன்றை தெரிவு செய்யவுள்ளோம். அதன் மூலம் நாட்டில் முன்னேற்றகரமான குழாமொன்றை உருவாக்குவோம்.

அந்த அடிப்படையில் தேர்வில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்குமான முழுமையான வசதிகளை செய்து கொடுக்க கால்பந்து சம்மேளனம் முன்வந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக ஒழுக்கமுள்ள, நாட்டின் தேசிய அணியை நேசிக்கும் வகையில் உள்ள வீரர்களுக்கு எதிர்காலத்தில் முன்னணி நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளையும் நாம் செய்வோம்” என்றார்.