75 அணிகள் பங்குகொள்ளும் கண்டி ஹொக்கி சிக்ஸஸ்

201

இரண்டாவது முறையாகவும் நடைபெறவுள்ள கண்டி ஹொக்கி சிக்ஸஸ் போட்டிகளில், 75 அணிகள் பங்குபற்றி சிறப்பிக்கவுள்ளன. சென்ற வருடத்தை விட அதிக அணிகள் பங்குபெறும் இப்போட்டி, இம்மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கண்டி ஹொக்கி சம்மேளனம் மற்றும் சீதாதேவி கல்லூரி இணைந்து ஒருங்கிணைக்கும் இப்போட்டியானது, இலங்கையில் நடைபெறும் மிகப் பெரிய ஹொக்கி போட்டிகளில் ஒன்றாகும். கடந்த தசாப்தமாக இலங்கை ஹொக்கி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீதாதேவி கல்லூரியானது, தொடராக நடாத்திவந்த சீதாதேவி செவன்ஸ் போட்டிகளுக்கு பதிலாக, கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டதே கண்டி ஹொக்கி சிக்ஸஸ் போட்டித் தொடராகும்.

சென்ற வருடம் 54 அணிகள் பங்குபற்றிய நிலையில், இவ்வருடம் 75 அணிகள் பங்குபற்றுகின்றன. கடந்த வருட போட்டிகளில், சுப்பர் 9 பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பிரிவிலும் விமானப்படை அணி கிண்ணத்தை சுவீகரித்தது. டொப் 14 பிரிவில் வித்தியார்த்த கல்லூரி பழைய மாணவர்கள் கழகம் சுவீகரித்துக்கொண்டது. 15 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தர்மராஜ கல்லூரி கிண்ணத்தை சுவீகரிக்க, பெண்கள் பிரிவில் சீதாதேவி கல்லூரி கிண்ணத்தை சுவீகரித்தது.

இம்முறையும் அதிகளவிலான அணிகள் பங்குகொள்வதனால், போட்டிகள் 4 பிரதான பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான போட்டிகளானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதற்தர பிரிவான பிரிவு A இல் இம்முறை 15 அணிகள் பங்குகொள்கின்றன. பிரிவு B இல் இம்முறை 32 அணிகள் பங்குகொள்கின்றன. பெண்களுக்கான பிரிவில் 17 அணிகள் பங்குகொள்கின்றன.

3 வருடங்களுக்குப் பிறகு தர்ஜினி சிவலிங்கத்துக்கு தேசிய அணியில் வாய்ப்பு

பாடசாலை பிரிவில் 16 வயதிற்கு உட்பட்ட அணிகள் பங்குபற்றுகின்றன. இதில் ஆண்கள் பிரிவில் 6 அணிகளும், பெண்கள் பிரிவில் 5 அணிகளும் கிண்ணத்திற்காக மோதவுள்ளன.

இம்முறை போட்டியின் சிறப்பம்சமாக பாகிஸ்தானிலிருந்து ஒரு அணி பங்குபற்றவுள்ளது. பாஷா கான் ஹொக்கி அகடமி எனப்படும் இவ்வணி, முதற்தர பிரிவான பிரிவு A இல் இலங்கையின் சிறந்த கழகங்களுடனும், முப்படையுடனும் போட்டியிடத் தயாராகவுள்ளது. 

முப்படையின் பங்குபற்றுதலுடன் பிரிவு A இல் கடுமையான போட்டியை காணக்கூடியதாக இருக்கும். எனினும் அதற்கு சற்றும் தளராத வகையில், பிரிவு B இலும் சிறப்பான அணிகள் காணப்படுவதனால் இம்முறை போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் ஐயமில்லை.

போட்டியில் பங்குகொள்ளும் அணிகள் 

பிரிவு A 

  1. இலங்கை விமானப்படை – A, B 
  2. இலங்கை கடற்படை – A, B 
  3. இலங்கை பொலிஸ் – A, B 
  4. இலங்கை இராணுவப்படை –  A, B 
  5. CH & FC – Reds 
  6. ஜிம்கானா விளையாட்டு கழகம் 
  7. வென்னப்புவ விளையாட்டு கழகம் 
  8. B.R .C 
  9. விஜய கல்லூரி பழைய மாணவர்கள் கழகம் 
  10. பெனடிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள் கழகம் 
  11. பாஷா கான் ஹொக்கி அகடமி 

பிரிவு B 

  1. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் – A, B 
  2. மாரிஸ் ஹொக்கி கழகம் 
  3. நாயகன்ஸ் ஹாக்கி கழகம் 
  4. வென்னப்புவ விளையாட்டு கழகம் – B 
  5. ஸாஹிரா கல்லூரி கொழும்பு பழைய மாணவர்கள் கழகம் 
  6. தர்மராஜ பழைய மாணவர்கள் கழகம்
  7. வித்தியார்த்த பழைய மாணவர்கள் கழகம்
  8. அந்தோனியார் பழைய மாணவர்கள் கழகம்
  9. தூதியன் பழைய மாணவர்கள் கழகம்
  10. பேராதனை பல்கலைக்கழகம் 
  11. ரஜரட்ட பல்கலைக்கழகம் 
  12. SLEAME கழகம் 
  13. க்ரியேட்டர்ஸ் கழகம் 
  14. கன்னர்ஸ் கழகம் 
  15. வேகொன்னர்ஸ் கழகம் 
  16. பெனடிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள் கழகம் – B 
  17. ஆலோசியஸ் பழைய மாணவர்கள் கழகம் 
  18. கொத்தலாவல பாதுகாப்பு அகாடமி – A, B 
  19. CH & FC – WHITE 
  20. றோயல் ஹொக்கி கழகம் 
  21. ருஹுனு ரேஞ்சர்ஸ் 
  22. பொலிஸ் விளையாட்டு கழகம் (அபிவிருத்தி அணி )
  23. திரித்துவக் கல்லூரி பழைய மாணவர்கள் கழகம் 
  24. வித்யாலோக விளையாட்டு கழகம் 
  25. இலங்கை கடற்படை கழகம் (அபிவிருத்தி அணி )
  26. வொரியர்ஸ் கழகம் – A, B 
  27. இலங்கை விமானப்படை (அபிவிருத்தி அணி )
  28. இலங்கை இராணுவப்படை (அபிவிருத்தி அணி )
  29. S L O A C 

பெண்கள் பிரிவு 

  1. இலங்கை கடற்படை – A, B 
  2. இலங்கை விமானப்படை – A, B 
  3. சீதாதேவி கழகம் – WHITE, GREEN 
  4. மாஸ்டர்ஸ் கழகம் – ORANGE, BLACK 
  5. புஷ்பதான கழகம் 
  6. மொரட்டுவ பழைய மாணவர்கள் கழகம் 
  7. ராஜரட்ட பல்கலைக்கழகம் 
  8. கம்பஹா கழகம்
  9. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 
  10. வென்னப்புவ கழகம்
  11. கண்டி பெண்கள் கழகம் 
  12. புனித ஜோசப் விளையாட்டு கழகம் கேகாலை 
  13. இலங்கை இராணுவப்படை 

16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு 

  1. தர்மராஜ கல்லூரி 
  2. திரித்துவக் கல்லூரி 
  3. சில்வஸ்டர் கல்லூரி
  4. கிங்ஸ்வூட் கல்லூரி
  5. வித்தியார்த்த கல்லூரி
  6. புனித அந்தோனியார் கல்லூரி 

16 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு 

  1. சீதாதேவி கல்லூரி 
  2. புஷ்பதான கல்லூரி 
  3. சுவர்ணமாலி கல்லூரி 
  4. புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி 
  5. மகமாயா கல்லூரி