பங்களாதேஷுடனான T20 தொடரும் இலங்கை வசம்

1724

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்று முடிந்திருக்கும், T-20 தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை பங்களாதேஷ் அணியை 75 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.

[rev_slider LOLC]

சில்லெட் நகரில் இன்று (18) ஆரம்பமாகியிருந்த இந்த தீர்மானமிக்க ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்றிருந்த பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்மதுல்லா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை (15) நடந்திருந்த இந்த T-20 தொடரின் முதல் போட்டியில் அதிரடி வெற்றியொன்றைப் பெற்றிருந்த இலங்கை அணி, அப்படியான நல்ல ஒரு முடிவை எதிர்பார்த்து இந்தப் போட்டியிலும் தொடரைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியிருந்தது. தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை குழாமில் இன்றைய போட்டிக்காக நிரோஷன் திக்வெல்லவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்ததோடு, அவரின் இடத்தை எடுத்துக் கொண்ட சுழல் வீரரான அமில அபொன்சோ T-20 போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க

பங்களாதேஷ் அணியும் இரண்டு அறிமுக வீரர்களுடன் (அபு ஜாயேத், மஹெதி ஹசன்) தமிம் இக்பால், மொஹமட் மிதுன் ஆகியோரை அணிக்கு உள்வாங்கியிருந்தது. இவர்களுக்கு பதிலாக சப்பீர் ரஹ்மான், ருபெல் ஹொசைன், அபிப் ஹொசைன், ஷாகிர் ஹசன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை இலங்கை அணி ஆரம்பித்தது. தொடக்க வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ் ஆகியோர் பவுண்டரி எல்லைகளை பதம் பார்த்த வண்ணம் இலங்கை அணிக்கு அட்டகாசமான ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இந்த இளம் துடுப்பாட்ட ஜோடியின் இணைப்பாட்டத்தை மொத்த ஓட்டம் நூறை எட்டியிருந்த போதே தடுக்க இயலுமாக இருந்தது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக தனுஷ்க குணத்திலக்க செளம்ய சர்க்காரின் பந்துவீச்சில் தமிம் இக்பாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பெறுமதியான இன்னிங்ஸ் ஒன்றை தந்த தனுஷ்க குணத்திலக்க ஓய்வறை நடக்கும் போது 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்க குணத்திலக்கவை அடுத்து மத்திய வரிசை வீரரான திசர பெரேராவை முன்வரிசையில் துடுப்பாட இலங்கை அணி அனுப்பியிருந்தது. களத்தில் நின்ற குசல் மெண்டிசுடன் கைகோர்த்த பெரேரா தனது பங்கிற்கான அதிரடியை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார். மறுமுனையில் குசல் மெண்டிசினால் இத்தொடரில் தொடர்ச்சியான இரண்டாவது அரைச்சதம் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து இலங்கை அணிக்கு வலுவளித்திருந்த திசர பெரேரா, குசல் மெண்டிஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களை அபு ஜாயேத், முஸ்தபிசுர் ஆகியோர் கைப்பற்றியிருந்தனர். இதில் குசல் மெண்டிஸ் 42 பந்துகளுக்கு 6 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்று T-20 சர்வதேசப் போட்டிகளில் தனது சிறந்த துடுப்பாட்டத்தை பதிவு செய்திருந்தார். அத்தோடு திசர பெரேரா 17 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 31 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இவர்களை அடுத்து இலங்கை அணிக்கு உபுல் தரங்க, தசுன் சானக்க ஆகியோர் வழங்கிய அசத்தல் அதிரடியின் மூலம், இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 210 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

சகல துறைகளிலும் அசத்திய அன்ரன் அபிஷேக்; சம்பியன் பட்டம் வென்ற சென். ஜோன்ஸ்

இலங்கை அணி வலுவான மொத்த ஓட்டங்களைப் பெறுவதில் முக்கிய பங்காற்றிய உபுல் தரங்க 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 25 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, தசுன் சானக்க வெறும் 11 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் செளம்ய சர்க்கர், மொஹமட் சயீபுத்தின், அறிமுக வீரர் அபு ஜாயேத், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட சவால் மிகுந்த வெற்றி இலக்கான 211 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி இலங்கைப் பந்துவீச்சாளர்களால் ஆரம்பம் முதலே சரிவைக் காட்டி முடிவில் 18.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 135 ஓட்டங்களையே பெற்று படுதோல்வியடைந்ததுடன் T-20 தொடரையும் இழந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் மஹ்மதுல்லா 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவர் தவிர ஏனைய பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் முப்பது ஓட்டங்களையேனும் தாண்டவில்லை.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஷெஹான் மதுசங்க, தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் ஆட்ட நாயகனாகவும் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவாகியிருந்தார்.

இவ்வெற்றியோடு பங்களாதேஷ் அணியுடனான சுற்றுப் பயணத்தை இலங்கை அணி வெற்றிகரமாக நிறைவு செய்து கொள்கின்றது. இந்த T-20 தொடரோடு இலங்கை, பங்களாதேஷில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் தொடர் (1-0), முக்கோண ஒரு நாள் தொடர் என்பவற்றையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

 

 

 

முடிவு – இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி

இங்கை அணி  

தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தசுன் சானக்க, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, ஷெஹான் மதுசங்க, அகில தனன்ஜய, ஜெப்ரி வென்டர்செய், அமில அபொன்சோ, அசித்த பெர்னாந்து”

பங்களாதேஷ் அணி

மஹ்மதுல்லா (அணித் தலைவர்), ஸாகிர் ஹசன், செளம்யா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், அபிப் ஹுஸைன், சப்பீர் ரஹ்மான், அரிபுல் ஹக், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், நஸ்முல் இஸலாம், அபு ஹைதர், அபு ஜாயேத், மஹெதி ஹசன், தமிம் இக்பால்