பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க

3752
Chandika-Hathurusingha-3

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இறுதியாக நடைபெற்ற டி20 போட்டி என்பவற்றில் மேற்கொண்ட வித்தியாசங்கள், வியூகங்கள் மற்றும் பங்களாதேஷ் அணி தொடர்பில் தன்னிடம் காணப்பட்ட அறிவு உள்ளிட்டவை காரணமாகவே சொந்த மண்ணில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பலமிக்க பங்களாதேஷ் அணியை வீழ்த்த முடிந்ததாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார்.

[rev_slider LOLC]

அத்துடன், ”பங்களாதேஷ் வீரர்களை பல்வேறு அணுகுமுறைகளுடனும், திட்டங்களுடனும் கையாள முடிந்தமையினால் தான் இந்த வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாக தெரிவித்த ஹத்துருசிங்க, இலங்கை அணியுடனான 2ஆவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் பங்களாதேஷ் அணியை தொடர்ந்து அவதானிக்கவுள்ளதாகவும்” ஹத்துருசிங்க தெரிவித்தார்.

சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் கத்துக்குட்டி அணியாக இருந்த பங்களாதேஷ் அணி கடந்த 3 வருடங்களுக்குள் கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப் பறக்கும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளைக் குவித்து கிரிக்கெட் உலகில் தனி இடத்தை பிடித்துவிட்டது. இதற்கான அனைத்து கௌரவமும் இலங்கையின் முன்னாள் டெஸ்ட் வீரர் சந்திக்க ஹத்துருசிங்கவை சாரும்.

சாதனையுடன் T-20 போட்டிகளின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

அதுமாத்திரமின்றி அந்நாட்டுக்காக விளையாடுகின்ற பெரும்பாலான தேசிய வீரர்களின் விபரங்களையெல்லாம் நன்கு அறிந்துவைத்துள்ள ஹத்துருசிங்க,  துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் தொடர்பிலும் பரந்த அறிவையும் கொண்டுள்ளார். எனினும், ஹத்துருசிங்கவின் திடீர் ராஜினாமா அவ்வணிக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்ததுடன், தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, கடந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. இத்தொடரில் பங்களாதேஷ் அணி ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், தொடரை பறிகொடுத்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் அவ்வணி இழந்தது. இந்நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியது

இது இவ்வாறிருக்க, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் இறுதிப் போட்டியாக இன்று (18) இரண்டாவதும், இறுதியுமான டி20 போட்டி சில்லெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரைக் கைப்பற்றினால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்துவகையான போட்டிகளையும் கைப்பற்றிய திருப்தியுடன் இலங்கை அணி நாடு திரும்பும்.

எனவே, இறுதி டி20 போட்டி நடைபெறுவதற்கு முன், நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் பங்களாதேஷ் அணியைப் பற்றிய எனது அறிவு வித்தியாசத்தை உருவாக்கியது. அவ்வணியின் சில வீரர்களுக்கு சில மூலோபாய திட்டங்களை நாங்கள் வகுத்திருந்தோம். அவர்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதையும் நன்கு அறிந்து வைத்திருந்தோம்.

அவர்கள் (பங்களாதேஷ்) நான் எதிர்பார்த்ததைப் போல முதல் இரண்டு போட்டிகளில் மிகவும் கடினமாக விளையாடியிருந்தனர். என்னுடைய திட்டங்கள் கைகூடவில்லை என்றால், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பேன். எனினும், எனது முயற்சி வீண் போகவில்லை.

பங்களாதேஷ் அணி விளையாடிய விதம் குறித்து மகிழ்ச்சியடைவதைப் போல  முதலிரண்டு தோல்விகளுக்கு பின்னர் நாங்கள் மீண்டும் வந்ததைப் பற்றியும் நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இது எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்திகரமான சுற்றுப்பயணமாகும். ஆனால் இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு, பங்களாதேஷ் அணி மீண்டும் சிறப்பாக விளையாடி, தொடர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார்.

இதேநேரம், தன்னுடைய பயிற்றுவிப்பின் கீழ் விளையாடிய பங்களாதேஷ் வீரர்களின் திறமைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகத் தெரிவித்த ஹத்துருசிங்க, ”அவர்கள் பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் ஆரம்பத்தில் நன்றாக விளையாடியிருந்தார்கள். அவர்கள் இரு அணிகளுக்கும் அழுத்தம் கொடுத்து சிறப்பாக விளையாடியிருந்தனர். ஆனால் ஒரு சில தோல்விகளுக்குப் பிறகு அவர்கள் தங்களை சந்தேகப்படுவதற்கு ஆரம்பித்துவிட்டனர். உண்மையில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் பின்னடைவை சந்தித்துவிட்டதை என்னால் உணரமுடிந்தது” என தெரிவித்தார்.

சகீபைப் போல மெதிவ்ஸ் இல்லாததும் எமக்கு இழப்புதான் – தனுஷ்க குணதிலக

இருப்பினும், பங்களாதேஷ் டி20 அணியின் தலைவர் மஹ்மதுல்லா இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், ”நாம் சிறப்பாக விளையாடி இருந்தால் இந்த நிலை தலைகீழாக மாறியிருக்கும். ஹத்துருசிங்க கடந்த சில வருடங்களாக எங்களுடன் இருந்தார். அவர் எம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் நிச்சயமாக அந்த ரசிகயங்களை பயன்படுத்தி எம்மை வீழ்த்தியுள்ளார். அவர் உலக தரமிக்க ஒரு பயிற்றுவிப்பாளர் மாத்திரமல்லாது அவரிடம் திறமையும் உள்ளது. ஆனால் நாம் சிறப்பாக விளையாடியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம், தற்போது இதைப் பற்றி பேசி எந்தப் பயனும் கிடையாது. கடைசி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி  வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக” அவர் தெரிவித்தார்.

இதேநேரம், 2015 உலகக் கிண்ண போட்டிகளுக்கு பிறகு கிரிக்கெட் உலகில் மிக மோசமாக விளையாடிய அணிகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் டில்ஷான் ஆகியோரின் ஓய்வு, வீரர்கள் அடிக்கடி தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுப்பது, இளம் வீரர்களை சரியான முறையில் இனம் காணாதது உள்ளிட்ட பலவித நெருக்கடிகளுக்கு இலங்கை அணி முகங்கொடுத்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கைக் கிரிக்கெட் அணியின் கடைசி நம்பிக்கையாக சந்திக்க ஹத்துருசிங்க புதிய பயிற்றுவிப்பாளராக இவ்வருடம் முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எனவே, நீண்டகாலமாக வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கு தடுமாறி வந்த இலங்கை அணி, இந்த ஆண்டில் சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் அதற்கான நல்ல அத்திரவாரத்தை பதித்துவிட்டது.

இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை வீரர்களின் திறமைகள் குறித்து ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில், ”இலங்கை வீரர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற பதிலிலிருந்து நான் முழு திருப்தி அடைந்துள்ளேன். உண்மையில் எனது நாட்டுக்காக விளையாடி பெற்றுக்கொடுத்த வெற்றியைப் போன்ற உணர்வை இது ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இதற்காக ஒருசில காலம் தேவைப்பட்டாலும் வீரர்களுடன் மேற்கொண்ட தொடர்பாடல் வெற்றியளித்துவிட்டதாக” அவர் இதன்போது தெரிவித்தார்.