பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை அணி 215 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனுபவ சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மொத்தம் 415 விக்கெட்டுகளை வீழ்த்தி இடது கை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் சாய்த்த வசீம் அக்ரமின் சாதனையை முறியடித்தார். எனினும் இதே ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சுகளிலும் 44 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி கன்னி டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு சாதனையை படைத்த அகில தனஞ்சயவை 39 வயதான ரங்கன ஹேரத் பாராட்டி இருந்தார். இதன் போது தனஞ்சய இரண்டாவது இன்னிங்ஸில் கன்னி ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
[rev_slider LOLC]
“இது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிக சிறப்பானதாகும். கன்னி டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு (தனஞ்சய) அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆரம்ப காலத்திலிருந்து கூட அவரை நான் அதிகம் அவதானித்து வருகிறேன். அவர் 2012 உலகக் கிண்ணத்தில் தனது 18 வயதில் இலங்கை அணிக்காக விளையாடினார். அவரது மிகப்பெரிய மற்றும் சிறந்த எதிர்காலத்தை என்னால் காண முடிகிறது” என்று ரங்கன ஹேரத் குறிப்பிட்டார். ஹேரத் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் தொடர் வெற்றிக்கு உதவினார்.
ஆடுளம் சுழல் பந்து வீச்சுக்கு உதவும் நிலையில் இலங்கை சுழல் பந்து வீச்சாளர்கள் பந்தை நேர்த்தியாக வீசி பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் சுதந்திரமாக அடித்தாடுவதை தடுத்தார்கள். இதனால் தனது சொந்த மைதானத்தில் ஆடும் சாதக சூழலை பெறாத பங்களாதேஷ் இரண்டு இன்னிங்சுகளிலும் முறையே 110 மற்றும் 123 ஓட்டங்களுக்கு சுருண்டது.
போட்டியில் அழுத்தம் குறைவாக இருந்தது பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது பற்றி குறிப்பிட்ட ஹேரத், இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பாக ஆடியதாகவும் தெரிவித்தார்.
தனஞ்சயவின் மாய சுழலோடு பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடர் இலங்கை வசம்
“நீங்கள் நிலைமையை பார்த்தால் நாம் 220 ஓட்டங்களை பெற்றதோடு அவர்கள் 110 ஓட்டங்களுக்கு சுருண்டனர். நாங்கள் 110 ஓட்டங்களால் முன்னிலை பெற்றோம். எனவே, இவ்வாறான சூழ்நிலை ஒன்று வந்தால் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் சற்று அழுத்தம் இருக்கும். அதுவே நடந்தது, அதே நேரம் துடுப்பாட்ட வீரர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக துடுப்பெடுத்தாடினார்கள்” என்று இரு அணிகளினதும் ஆட்டம் பற்றி ஹேரத் சுருக்கமாக குறிப்பிட்டார்.
சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கம் செலுத்திய ஆடுகளம் ஒன்றில் இரு இன்னிங்சுகளிலும் அரைச்சதம் பெற்ற ரொஷேன் சில்வாவின் ஆட்டத்தையும் இடதுகை சுழல் பந்து வீச்சாளரான ஹேரத் பாராட்டினார்.
“ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிகம் உதவவில்லை. சுழல் பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் சாதகமாக இருந்தது. அது துடுப்பெடுத்தாட இலகுவானதாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆடும் அவர் (சில்வா) கிட்டத்தட்ட 7000 ஓட்டங்களை எடுத்திருப்பது எனக்கு தெரியும். அந்த அனுபவம் அவருக்கு உதவியது. இந்த ஆடுகளத்தில் இது மிகப்பெரிய சாதனை என்பதால் நான் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
சங்கா மற்றும் மஹேல அணியில் இருந்து விடைபெற்றபோது அது அணிக்கு அதிக ஓட்டங்களையும் இல்லாமல் செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின் தற்போது நாம் அணியை கட்டியெழுப்புகிறோம். எனினும் இப்போது இளைஞர்கள் மற்றும் அனுபவ வீரர்களுடன் சரியான அணி ஒன்றை என்னால் பார்க்க முடிகிறது. குறிப்பாக ரொஷேன், தனஞ்சய மற்றும் குசல் மெண்டிஸை குறிப்பிடலாம்” என்றும் ஹேரத் குறிப்பிட்டார். இதில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் வென்று இலங்கை அணி நல்ல நிலையை பெற்று வருவதாகவும் ஹேரத் சுட்டிக்காட்டினார்.
“இது மட்டுமல்ல, டுபாயில் நாங்கள் ஆடியபோது கூட பாகிஸ்தானுக்கு எதிராக 2-0 என வெற்றி பெற்றோம். இந்தியாவில் மோசமான தொடராக இருந்தது. எனவே, எல்லாவற்றையும் பார்க்கும்போது, டெஸ்ட் அணியாக மற்றொரு பயணத்தை ஆரம்பித்திருப்பதாக நான் உணர்கிறேன். எம்மால் இதனை தொடர முடியும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் ஹேரத்.