குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் இன்று கேலாகலமாக ஆரம்பம்

305

23ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் கோலாகலமான ஆரம்ப விழாவுடன் இன்று தொடங்குகின்றன. இம்மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக தென்கொரியாவில் இடம்பெறுவதுடன், ஆரம்ப நிகழ்வு, இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30க்கு இடம்பெறவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளைப் போல 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இந்த போட்டியில் அரங்கேறவுள்ளதுடன், குளிர் கால ஒலிம்பிக் வரலாற்றில் அதிக குளிருக்கு மத்தியில் நடைபெறுகின்ற முதல் ஒலிம்பிக் விழாவாகவும் இது அமையவுள்ளது.

ஆசிய விளையாட்டு விழா முன்னோடிப் போட்டிகளில் 24 இலங்கையர்

இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்த்தாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள …

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் ஐஸ் ஹொக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உட்பட 15 வகையான விளையாட்டுகள் 102 பதக்கங்களுக்காக நடைபெறவுள்ளன. இதில் இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உட்பட 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீர, வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.  

அத்துடன், குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான உத்தியோகபூர்வ சின்னமாக இம்முறை சூராங் என்ற வெள்ளைப் புலி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரிய மொழியில் சூ என்றால் பாதுகாப்பு என அர்த்தம். ஹோ ராங் என்றால் புலி என பொருள்படும். எனவே இதிலுள்ள ராங் என்ற சொல்லை மட்டும் சூ உடன் இணைத்து சூராங் என பெயரிட்டுள்ளனர். தென் கொரிய நாட்டின் புராணக் கதைகளிலும், கலாச்சாரத்திலும் வெள்ளைப்புலி நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதுடன், தமது நாட்டை பாதுகாக்கும் விலங்காக அந்நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளமை இதற்கு முக்கிய காரணமாகும்.

இதேநேரம், குளிர்கால ஒலிம்பிக் ஜோதி கடந்த வருடம் ஒக்டோபர் 24ஆம் திகதி தென் கொரியாவில் இருந்து தனது பயணத்தை தொடங்கியதுடன், 7.5 கோடி மக்களை தொகையை கொண்ட தென் கொரியாவை பிரதிபலிக்கும் வகையில் 7,500 பேரின் கைகளுக்கு சென்று தொடக்க விழா நடைபெறவுள்ள பியோங்சாங் நகரிற்கு இன்று வந்தடைகிறது.

இதேவேளை, இம்முறை குளிர்கால ஒலிம்பிக்கில் ஈக்வொடார், எரித்தியா, கோசோவா, நைஜீரியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 6 நாடுகள் முதல்முறையாக பங்கேற்கின்றன. அதிலும் குறிப்பாக ஆபிரிக்கா நாடொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள முதல் வீராங்கனை என்ற பெருமையை நைஜீரியாவைச் சேர்ந்த அக்வாசி ப்ரிம்போங் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், ஆரம்ப விழா நிகழ்ச்சிகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், ஒருசில பிரிவுகளில் போட்டிகள் நேற்று(08) முதல் ஆரம்பமாகின. அத்துடன், அமெரிக்கா, வடகொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் போட்டி நடைபெறும் இடம் மற்றும் வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தென்கொரியாவில் நடைபெறும் இம்முறை போட்டித் தொடரில் அதன் எதிரி நாடான வடகொரியாவும் பங்கேற்கிறது. தொடக்க விழாவில் இரு அணிகளும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல இருப்பது முழு உலகமும் எதிர்பார்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமையவுள்ளது.  

அதேபோன்று ஐஸ் ஹொக்கியில், பெண்கள் பிரிவில் இரு நாடுகளும் இணைந்து கொரியா என்ற பெயரில் ஒரே அணியாக விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அத்துடன், 5 விளையாட்டு போட்டிகளுக்காக 22 வீரர்கள் வடகொரியா சார்பாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஊக்கமருந்து குற்றச்சாட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தடை நீடிக்கும் நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த 168 வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ், போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.