கபில்ராஜ் சகலதுறைகளிலும் அசத்த சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு இலகு வெற்றி

680

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறுகின்ற 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் டிவிஷன் – II பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியொன்றில் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி தெல்லிப்பளை மஹாஜன கல்லூரிய்யை 287 ஓட்டங்களால் தோற்கடித்து அதிரடி வெற்றியொன்றை பதிவு செய்திருக்கின்றது.

நேற்று (6) மஹாஜன கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி கனகரத்தினம் கபில்ராஜ் அரைச்சதம் கடந்து பெற்றுக்கொண்ட 84 ஓட்டங்களின் உதவியுடனும், P. திமோசன் பெற்றுக்கொண்ட 44 ஓட்டங்களின் துணையுடனும் முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மஹாஜன கல்லூரி சார்பாக பந்துவீச்சில் S. சதுர்ஜன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் தம்முடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்திருந்த மஹாஜன கல்லூரி வீரர்கள் ஓட்டங்கள் சேர்க்க தடுமாறி அனைத்து விக்கெட்டுக்களையும் 115 ஓட்டங்களுக்கே பறிகொடுத்தனர். மஹாஜன கல்லூரிக்காக M. சுஜீபன் அதிகபட்சமாக 34 ஓட்டங்களைக் குவிக்க மறுமுனையில் சென். ஜோன்ஸ் கல்லூரியின் V. ஜதுசன் மற்றும் கபில்ராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் வடக்கின் சமரில் பங்கெடுக்கும் பாடசாலைகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 123 ஓட்டங்கள் முன்னிலையோடு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கியது.  இம்முறையும் முதல் இன்னிங்ஸ் போன்று  கபில்ராஜ் அரைச்சதம் (52) கடந்தார். கபில்ராஜோடு நாகேந்திரராசா செளமியன் (68) P. திமோசன் (58) ஆகியோரும் தங்கள் பங்குக்காக பெற்றுக் கொண்ட அரைச்சதங்களோடு 45.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களோடு காணப்பட்டிருந்த போது சென். ஜோன்ஸ் கல்லூரியினர் தமது இரண்டாம் இன்னிங்சை இடைநிறுத்தினர். மஹாஜன கல்லூரியின் பந்துவீச்சில் S. சதுர்ஜன் 5 விக்கெட்டுக்களை இந்த தடவை சாய்த்திருந்தார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம் அறிவிப்பு

பலமான இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் ஒன்றை சென். ஜோன்ஸ் கல்லூரி அணி காட்டியிருந்த காரணத்தினால் போட்டியின் வெற்றி இலக்காக 391 ஓட்டங்கள் மஹாஜன கல்லூரிக்கு நிர்ணயிக்கப்பட்டது

மிகவும் சவால் கொண்ட இந்த வெற்றி இலக்கைத் தாண்டுவது கடினம் என்பதனால் போட்டியை சமநிலை செய்யும் நோக்கோடு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மஹாஜன கல்லூரி வீரர்களை கபில்ராஜ் பந்துவீச்சில்  மிரட்டத் தொடங்கியிருந்தார். இதனால், இரண்டாம் இன்னிங்சிலும் ஓட்டங்கள் சேர்க்க பெரிதும் சிரமத்தை எதிர் கொண்ட மஹாஜன கல்லூரி வெறும் 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியடைந்தது. இம்முறை கபில்ராஜ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

கனகரத்தினம் கபில்ராஜ் இந்த இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சோடு மொத்தமாக 7 விக்கெட்டுக்களையும், 136 ஓட்டங்களையும் தனியொருவராக பெற்று இப்போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரியின் வெற்றிக்கு சகலதுறைகளிலும் பங்களிப்பு வழங்கியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 238 (43.1) – கனகரத்தினம் கபில்ராஜ் 84, P. திமோஷன், M. அபினாஷ் 22, S. சதுர்ஜன் 4/85

மஹாஜன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 115 (37.1) M. சுஜீபன் 34, V. ஜதுசன் 3/18, கனகரத்தினம் கபில்ராஜ்  3/50

சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 267/8d (45.5) – N. செளமியன் 68, P. திமோஷன் 58, கனகரத்தினம் கபில்ராஜ் 52, S. சதுர்ஜன் 5/56

மஹாஜன கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 103 (26.2) – கனகரத்தினம் கபில்ராஜ் 4/46, J. சுபீட்சன் 2/02, V. ஜதுசன் 2/03

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 287 ஓட்டங்களால் வெற்றி

இதேவேளை வடக்கின் சமரில் பங்கேற்கின்ற மற்றைய (டிவிஷன் – III) பாடசாலையான யாழ். மத்திய கல்லூரி நேற்று (06) சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியை எதிர்கொண்டிருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.