பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம் அறிவிப்பு

4668
Sri Lanka T20I

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி இன்று(07) அறிவிக்கப்பட்டது.

[rev_slider LOLC]

இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளின் அணித் தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ், பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வேயுடனான போட்டியின் போது தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் எஞ்சிய அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகிக்கொண்டார்.

இந்நிலையில், முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடாத்திய தினேஷ் சந்திமால், பங்களாதேஷ் அணியுடனான T-20 தொடரிலும் இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான T-20 தொடரில் மெதிவ்ஸின் தலைமைப் பதவி சந்திமாலுக்கு

தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி..

இறுதியாக கடந்த 2016ஆம் அண்டு இறுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போதும் அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதைக்குள்ளானார். இதனையடுத்து இலங்கை T-20 அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்பட்டிருந்ததுடன், குறித்த தொடரை 2-1 என இலங்கை அணி கைப்பற்றியிருந்தது. எனினும், அதன்பிறகு நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளின் சுற்றுப்பயணங்களின் போது நடைபெற்ற T-20 தொடர்களில் இலங்கை T-20 குழாமிலிருந்து சந்திமால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்பொழுது T-20 குழாமுக்குள் சந்திமால் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அணித்தலைவராகவும் செயற்படவுள்ளார்.

இதேநேரம், நீண்ட காலமாக இலங்கை அணியில் இடம்பெறாமல் இருந்த சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸ், சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பியுள்ளார்.

அண்மைக்காலமாக உலகம் பூராகவும் நடைபெற்று வரும் T-20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்ற 35 வயதான ஜீவன் மெண்டிஸ், இதுவரை பல நாடுகளிலும் நடைபெற்ற சுமார் 120 T-20 போட்டிகளில் விளையாடி 1,800 ஓட்டங்களையும், 120 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். எனினும், அவர் இறுதியாக கடந்த 2013ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக இலங்கையில் நடைபெற்ற T-20 போட்டியிலேயே இலங்கை அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வருடத்தின் முதல் டெஸ்ட் வெற்றிக்காக தயாராகவுள்ள இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ்…

இதேவேளை, இறுதியாக பாகிஸ்தான் அணியுடன் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற 3 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த சதுரங்க டி சில்வா, சச்சித் பத்திரன மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  

அத்துடன், முக்கோண ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான குசல் ஜனித் பெரேரா மீண்டும் T-20 அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.  

அதேநேரம் அண்மையில் நிறைவுக்கு வந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்று பங்களாதேஷ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டை கைப்பற்றி புதிய சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளரான செஹான் மதுஷங்க, முதற்தடவையாக இலங்கை T-20 குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல தற்போது நடைபெற்று வருகின்ற கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகளில் சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற 20 வயதான அசித பெர்னாண்டோ, முதற்தடவையாக T-20 அணிக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கெண்ட அவர், இதுவரை 21 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே…

அத்துடன், இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அமில அபோன்சோ, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் இடதுகை மித வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதான ஆகியோரும் T-20 அணிக்கு திரும்பியுள்ளனர்.

பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டி எதிர்வரும் 15ஆம் திகதியும், 2ஆவது T-20 போட்டி 18ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, இத்தொடருக்கான அணியிலும் இணைத்துக்கொள்ளப்படாமை குறிப்பிடத்தக்கது.  

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தசுன் சானக, இசுரு உதான, ஜெப்ரி வெண்டர்சே, அகில தனஞ்சய, அமில அபோன்சோ, அசித பெர்னாண்டோ, செஹான் மதுசங்க, ஜீவன் மெண்டிஸ்