வருடத்தின் முதல் டெஸ்ட் வெற்றிக்காக தயாராகவுள்ள இலங்கை

804

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி நாளை (8)  டாக்கா நகரின் மிர்பூரில் ஆரம்பமாகின்றது.

[rev_slider LOLC]

ஜனவரி 31ஆம் திகதி சிட்டகொங்கில் ஆரம்பமாகியிருந்த இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவுற்றதனை அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஆட்டமாக நாளை ஆரம்பமாகவுள்ள போட்டி அமையவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி பற்றிய ஒரு சுருக்கம்

சிட்டகொங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாடி 513 ஓட்டங்களினை முதல் இன்னிங்சில் குவித்திருந்தது. இதனையடுத்து தங்களது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை அணியினர் 713 என்ற இமாலய ஓட்டங்களுடன் தங்களது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர்.

தொடர்ந்து 200 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த பங்களாதேஷ், ஆட்டத்தின் ஐந்தாம் நாளின் இறுதிவரை துடுப்பாடி 307 ஓட்டங்களோடு காணப்பட்ட நிலையில், இரண்டு அணித் தலைவர்களினதும் சம்மதங்களோடு போட்டி சமநிலையில் முடிக்கப்பட்டது.

இலங்கையின் வெற்றி வாய்ப்பை சிதறடித்த மோமினுலின் சதம்; போட்டி சமநிலையில் முடிவு

பங்களாதேஷ் அணியின் முதல் வீரராக மோமினுல் ஹக் இரு..

இதில் மொமினுல் ஹக் பங்களாதேஷ் அணி சார்பாக இரண்டு இன்னிங்சுகளிலும் சதம் கடந்த முதல் வீரர் என்கிற பதிவினை நிலைநாட்டியிருந்தோடு, இலங்கை சார்பாக குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் ரொஷேன் சில்வா ஆகிய மூவரும் சதம் கடந்திருந்தனர். பந்துவீச்சில் மொத்தமாக 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த இலங்கை அணியின் ரங்கன ஹேரத் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய 500ஆவது விக்கெட்டினை இந்த டெஸ்ட் மூலம் பெற்றிருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளினதும் நட்சத்திர சகலதுறை வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், பங்களாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் சகீப் அல் ஹசன் ஆகிய இருவரும் காயம் காரணமாக விலகியிருந்தனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இதே நிலமை தொடரும்.

முதல் டெஸ்ட் நடந்த மைதானத்தில் சர்ச்சை?

முதல் போட்டி நடைபெற்றிருந்த ஷாஹூர் அஹ்மட் செளத்ரி மைதானம் தயார் செய்யப்பட்ட விதத்தில் சில குறைபாடுகள் இருந்த காரணத்தினால் இரு அணி வீரர்களினாலும் சகலதுறைகளிலும் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயற்பட முடியாது போயிருந்தது. முழுவதும் துடுப்பாட்டத்திற்கு சாதமாக மாறியிருந்த இந்த மைதானத்தில் இரு அணி வீரர்களினாலும் ஐந்து சதங்களும், ஆறு அரைச்சதங்களும் பெறப்பட்டிருந்தன.  எனினும், பந்துவீச்சாளர்களுக்கு எதிர்பார்த்த விதத்தில் செயற்பட முடியாமல் போயிருந்தது.

இந்த மைதானம் தவறாக தயார்படுத்தப்பட்டிருந்தது என்ற குற்றாச்சாட்டினை முன்வைத்து, முதல் டெஸ்ட் போட்டியின் மத்தியஸ்தர் டேவிட் பூன் ஒரு தரம் தாழ்த்தல் புள்ளியினை சிட்டகொங் மைதானத்திற்கு தற்போது வழங்கியிருக்கின்றார்.

இந்தப் பிரச்சினைகள் எதுவும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகின்ற ஷேரி பங்களா நெஷனல் மைதானத்தில் வராமல் இருக்கும் என நம்பப்படுகிறது.

இலங்கை அணி

புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் ஆளுகையினுள் வந்திருக்கும் இலங்கை அணி தம்முடைய பழைய ஆட்டத்திற்கு படிப்படியாக மீண்டு வருவதை அண்மைய முடிவுகள் மூலம் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஐ.சி.சி இன் புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு..

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்தன முதல் டெஸ்ட் போட்டியில் ஓட்டம் எதனையும் பெறாமல் ஓய்வறை நடந்திருந்தார். இதோடு கருணாரத்ன தனது இறுதி 7 டெஸ்ட் இன்னிங்சுகளில் ஒரு அரைச்சத்தினை மாத்திரமே குவித்திருக்கின்றார். எனினும் நாளை ஆரம்பமாகும் போட்டியில் அவர் அணிக்கு சிறந்த முறையில் பிரகாசிப்பார் என நம்பப்படுகின்றது.

நாளைய போட்டியில் விளையாடவிருக்கின்ற இலங்கை அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம். பந்துவீச்சினை எடுத்து நோக்குகின்ற போது முதல் போட்டியில் சிறப்பாக செயற்படாத சுழல் வீரர் லக்ஷான் சந்தகன், வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோருக்குப் பதிலாக அகில தனன்ஜயவுக்கும், லஹிரு கமகேவுக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன.

இதில் உள்ளூர் முதல்தர போட்டிகளில் இதுவரையில் 100 இற்கு கிட்டவான விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் அகில தனன்ஜய டெஸ்ட் போட்டிகள் எதிலும் இன்னும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இது தவிர முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்ட இலங்கை குழாமே மாற்றங்கள் ஏதுமின்றி நாளைய போட்டியிலும் களமிறங்கும்.  

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

“திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தனன்ய டி சில்வா, ரொஷேன் சில்வா, தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், லஹிரு கமகே, சுரங்க லக்மால், அகில தனன்ஜய/லக்ஷான் சந்தகன் “  

பங்களாதேஷ் அணி

தொடரை தீர்மானிக்கின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியும் மாற்றங்கள் சிலவற்றினை செய்யும் என நம்பப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அறிமுகப்படுத்தியிருந்த சுழல் வீரரான சுன்சமுல் இஸ்லாம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் இருந்து நீக்கப்பட துடுப்பாட்ட வீரரான சப்பீர் ரஹ்மான் டெஸ்ட் குழாத்தில் மீண்டும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

சிட்டகொங் ஆடுகளத்தை சராசரியை விட குறைவாக தரப்படுத்தியது ICC

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு ..

சிரேஷ்ட வீரர் சகீப் அல் ஹசன் இல்லாத நிலையில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்திற்கு முதுகெலும்பாக  மொமினுல் ஹக் மாத்திரமே முதல் டெஸ்ட்டில் காணப்பட்டிருந்தார். இதனால், மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவரின் தேவையினை உணர்ந்திருக்கும் பங்களாதேஷ் அணி நாளைய போட்டியில் சப்பீர் ரஹ்மானுக்கு வாய்ப்பு வழங்குவதை எதிர்பார்க்க முடியும்.

முதல் டெஸ்ட்டில் பெரிதாக பந்துவீச்சில் சிறப்பிக்காத பங்களாதேஷ் அணி நாளைய போட்டியில் சுழல் வீரரான அப்துர் ரசாக்கிற்கு வாய்ப்புத் தரலாம். பங்களாதேஷில் நடைபெற்று வரும் உள்ளூர் முதல்தர போட்டிகளின் நட்சத்திர வீரராக மாறியிருக்கும் ரசாக், பங்களாதேஷ் அணி சார்பாக முதல்தரப் போட்டிகளில் 500 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்கிற சாதனையினை அண்மையில் நிலைநாட்டியிருந்தார். ரசாக் தவிர வேகப்பந்து வீச்சாளரான ருபெல் ஹொசைனும் அணிக்குள் உள்வாங்கப்பட சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றன.  

எதிர்பார்க்கப்படும் பங்களாதேஷ் குழாம்

“தமிம் இக்பால், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், லிடன் தாஸ் (விக்கெட் காப்பாளர்), மஹ்மதுல்லா (அணித் தலைவர்), சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், தய்ஜூல் இஸ்லாம்/அப்துர் ரசாக், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொசைன்

இறுதியாக

போட்டி நடைபெறப்போகின்ற டாக்கா மைதானம் பந்துவீச்சுக்கு சாதமாக அமையும் என எதிர்வுகூறப்பட்டிருக்கின்றது. எனவே, இரண்டு அணிகளதும் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தினை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிகம் பார்க்க முடியும். எனவே, சிறந்த முறையில் செயற்பட்டு தொடர் வெற்றியாளராக எந்த அணி மாறுகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.