பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி அங்கு இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் வெற்றியாளராகியிருந்தது. இலங்கை தமது பயணத்தின் அடுத்த கட்டமாக நாளை (31) சிட்டகொங்கில் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷுடன் விளையாடுகின்றது.
[rev_slider LOLC]
ஹத்துருசிங்க மீதான நம்பிக்கை வீண் போகவில்லை – சந்திமால்
தொடர் தோல்விகள் மற்றும் உபாதைகள் என இக்கட்டான..
பங்களாதேஷின் சொந்த மண்ணில் நான்கு வருடங்களின் பின்னர் இரண்டு அணிகளும் மோதுகின்ற இந்த டெஸ்ட் தொடர் பற்றிய ஒரு முன்னோட்டத்தினை நாம் பார்ப்போம்.
இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிகள் வரலாறு
பங்களாதேஷுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னர் 2001ஆம் ஆண்டிலிருந்து இலங்கையுடன் அவ்வணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதுவரை இரண்டு அணிகளும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு அவற்றில் 15 போட்டிகளில் இலங்கை அணி வெற்றியினை சுவைத்திருக்கின்றது. இதில் பங்களாதேஷ் வீரர்கள் ஒரேயொரு வெற்றியினையே பெற்றிருக்கின்றனர். இந்த வெற்றி கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் அணிக்கு கிடைத்திருந்தது.
குறிப்பிட்ட அந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் வீரர்கள் இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரொன்றினை வரலாற்றில் முதற்தடவையாக (1-1 என) சமநிலைப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது தவிர இரண்டு அணிகளுக்குமிடையிலான எஞ்சிய இரண்டு போட்டிகளும் சமநிலை அடைந்திருக்கின்றன.
பங்களாதேஷ் மண்ணில் இறுதியாக இரண்டு அணிகளும் 2014ஆம் ஆண்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்ததோடு அத்தொடரினை 1-0 என இலங்கை கைப்பற்றியிருந்தது.
இலங்கை அணி
டெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடத்தில் காணப்படும் இலங்கை அணிக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்திருந்தது. இதற்கு ஒரு நாள் போட்டிகளினதும், T-20 போட்டிகளினதும் தோல்விகள் பிரதான காரணமாக அமைந்திருந்தன. எனினும், இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தோல்விகளுடன் ஒப்பிடும் போது இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு மோசமான பதிவினைக் காட்டியிருக்கவில்லை.
பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) ஜனவரி..
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானை அவர்களது இரண்டாம் தாயகமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து 2-0 என டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இலங்கை வீரர்கள், அத் தொடர் வெற்றியின் மூலம் பாகிஸ்தானை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து டெஸ்ட் தொடரொன்றில் வீழ்த்திய முதல் அணியாக மாறியிருந்தனர். இது நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்ற இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வீரர்கள் அங்கு இடம்பெற்ற டெஸ்ட் தொடரிலும் மைதானச் சொந்தக்கரர்களுக்கு சவால் தரும் வகையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் ஆளுகையில் முக்கோண ஒரு நாள் தொடரினை அதிரடி வெற்றிகளுடன் கைப்பற்றி புதிய வருடத்தினை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணிக்கு, கடந்த ஆண்டில் பெற்றுக்கொண்ட தோல்விகளில் இருந்து மீள்வதற்கான அடுத்த சந்தர்ப்பமாக நாளை ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் தொடர் அமையவுள்ளது.
தினேஷ் சந்திமால் தலைமையில் பங்களாதேஷை எதிர்கொள்ளும் இலங்கை அணியில், அஞ்செலோ மெதிவ்ஸ் காயம் காரணமாக விளையாடுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. காயத்தின் பின்னர் இலங்கைக்குத் திரும்பிய அவர் இன்னும் இங்கிருந்து செல்வில்லை.
இலங்கையின் இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டத்திற்கு முதுகெலும்பாக காணப்படும் மெதிவ்ஸ் இத்தொடரில் இல்லாதது ஒரு பின்னடைவு என்ற போதிலும், மெதிவ்சின் பொறுப்பினை தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா போன்ற வீரர்கள் எடுத்துக் கொண்டு அணியை சிறந்த முறையில் வழிநடாத்துவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சந்திமால் கடந்த ஆண்டில் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 45 இற்கு மேலான துடுப்பாட்ட சராசரியுடன் 1,000 ஓட்டங்களுக்கு (1003) மேல் பெற்ற வீரராக காணப்படுகின்றார். கடந்த ஆண்டில் 1,000க்கு மேலான ஓட்டங்களை குவித்த மற்றுமொரு இலங்கை வீரரான திமுத் கருணாரத்னவும் இலங்கையின் முன்வரிசைக்கு நங்கூரமிடக்கூடிய ஒரு துடுப்பாட்ட வீரராக காணப்படுகின்றார்.
இவர்கள் தவிர கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருந்த ரோஷென் சில்வா, டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கும் குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க போன்றவர்கள் இலங்கை அணிக்காக மேலதிகமாக துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சுத் துறையினை எடுத்து நோக்கும் போது சுழல் வீரரான அகில தனன்ஞயவினை இந்த டெஸ்ட் தொடர் மூலம் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை அணியின் பிரதான சுழல் வீரராக மாறியிருக்கும் தனன்ஞய இம்முறை கிடைத்திருக்கும் வாய்ப்பு மூலம் டெஸ்ட் போட்டிகளிலும் அப்படியான ஒரு பாத்திரத்தை தொடர்வார் என நம்பப்படுகின்றது.
இதுவரையில் 34 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடியிருக்கும் தனன்ஞய 98 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். தனன்ஞயவோடு சேர்த்து சகலதுறை வீரரான தில்ருவான் பெரேரா மற்றும் இலங்கையின் பிரதான சுழல் வீரர் ரங்கன ஹேரத் ஆகியோர் பங்களாதேஷின் விக்கெட்டுக்களை சாய்க்க எதிர்பார்க்கப்படும் ஏனைய சுழல் வீரர்களாவர். ஹேரத் 400 இற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய அனுபவம் கொண்டுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் உபதலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் சுரங்க லக்மால் வேகப்பந்துவீச்சுத் துறையினை லஹிரு கமகே, துஷ்மந்த சமீர ஆகியோருடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளார்.
இலங்கை அணிக் குழாம்
தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரொஷென் சில்வா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால்(பிரதி அணித்தலைவர்), தில்ருவான் பெரேரா, துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகன், அகில தனன்ஞய, லஹிரு கமகே, லஹிரு குமார
பங்களாதேஷ் அணி
கடந்த வருட ஒக்டோபரில் பங்களாதேஷ் அணியினை தென்னாபிரிக்கா 2-0 என டெஸ்ட் தொடரொன்றில் வீழ்த்தியது. இந்த முடிவை ஒருபுறம் வைத்தால் பங்களாதேஷ் தமது அண்மைய ஆட்டங்கள் மூலம் உலகின் முதல்தர அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கின்றது. 2016 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தை தமது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் போட்டியொன்றில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி தொடர்ந்து, இலங்கை அணியினையும் அவுஸ்த்திரேலிய அணியினையும் (டெஸ்ட் போட்டிகளில் முதல்தடவையாக) வீழ்த்தி தமது வெற்றிப் பயணத்தினை தொடர்ந்திருந்தது. அண்மைய முடிவுகளை வைத்து வளர்ந்து வருகின்ற பங்களாதேஷ் அணி பற்றி இலங்கை வீரர்கள் தவறான எடைபோட்டு விடக்கூடாது.
இலங்கையை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் அணியினை எடுத்து பார்க்கும் போது நட்சத்திர சகலதுறை வீரரான சகிப் அல் ஹஸன் கடந்த வாரம் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியிருக்கின்றார். இது பங்களாதேஷுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் விடயங்களில் ஒன்றாகும். பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவரும் சகீப் என்பதனால், அவ்வணியினை நாளை ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மஹ்மதுல்லா தலைமை தாங்குகின்றார்.
பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் 4 வருடங்களின் பின் இணையும் நட்சத்திர வீரர்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க..
இலங்கைக்கு எதிரான முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்ற மஹ்மதுல்லா, டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் 2000 இற்கு கிட்டவான ஓட்டங்களை குவித்திருக்கின்றார். இதோடு மஹ்மதுல்லா டெஸ்ட் போட்டிகளில் 39 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார். எனவே, மஹ்மதுல்லாவின் பங்களிப்பு பங்களாதேஷ் அணிக்கு சகலதுறைகளிலும் தேவைப்படுகின்றது.
இவர் தவிர பங்களாதேஷின் துடுப்பாட்டத்துக்கு பெறுமதி சேர்க்க கூடியவர்களாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் காணப்படுகின்றனர். தமிம் இக்பால் 40 இற்கு கிட்டவான டெஸ்ட் துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சுத் துறையினை எடுத்துப் பார்க்கின்ற போது இத்தொடரில் பங்களாதேஷ், சுழல் வீரரான அப்துர் ரஷாக்கிற்கு நீண்ட காலத்திற்கு பின்னர் வாய்ப்புத் தந்திருக்கின்றது. பங்களாதேஷின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அசத்திவரும் ரஷாக் அண்மையில் முதல்தரப் போட்டிகளில் பங்களாதேஷ் சார்பாக 500 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்கிற சாதனையினை நிலைநாட்டியிருந்தார். ரஷாக்கும் ஏனைய சுழல் வீரரான மெஹதி ஹசனும் அணியில் காயமுற்ற சகீப் அல் ஹஸனின் இடத்தினை இலங்கையுடன் நிரப்ப எதிர்பார்க்கப்படுகின்றது.
பங்களாதேஷ் அணியில் புதிய சுழல் வீரர்களுக்கும் இத்தொடரில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. இம்முறைக்கான 19 வயதின் கீழான உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய வலதுகை சுழல் வீரர் நயீம் ஹசன் இதில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். ஹசனோடு சுன்சமுல் இஸ்லாம், தன்பிர் ஹைதர் ஆகியோரும் இந்த டெஸ்ட் தொடரில் சுழல் வீரர்களாக அறிமுகமாகின்றனர்.
பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இத்தொடரில் ரூபெல் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் செயற்படவிருகின்றனர். நடைபெற்று முக்கோண ஒரு நாள் தொடரின் மூலம் முஸ்தபிசுர் ரஹ்மான் பங்களாதேஷ் சார்பாக ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக சாதனை செய்திருந்தார். இலங்கை வீரர்களுக்கு அதிக அச்சுறுத்தல் தரக்கூடிய பங்களாதேஷ் பந்துவீச்சாளராக முஸ்தபிசுர் ரஹ்மானே எதிர்பார்க்கப்படுகின்றார்.
பங்களாதேஷ் குழாம்
மஹ்முதுல்லா (தலைவர்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், மொஸாதிக் ஹொசைன், தைஜூல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், கம்ருல் இஸ்லாம் ரப்பி, மெஹதி ஹசன், ருபெல் ஹொசைன், சுன்சமுல் இஸ்லாம், தன்பிர் ஹைதர், நயீம் ஹசன், அப்துல் ரஷாக்
டெஸ்ட் தொடர் அட்டவணை
முதல் டெஸ்ட் – ஜனவரி 31 தொடக்கம் பெப்ரவரி 04 வரை – சிட்டகொங்
இரண்டாவது டெஸ்ட் – பெப்ரவரி 8 தொடக்கம் பெப்ரவரி 12 வரை – டாக்கா