மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்

3456

கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும் ரசிகர்களை மைதானத்துக்கு ஈர்ப்பவர்கள்.

மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் கார்னர், கொலின் க்ரொப்ட் முதல் இலங்கையின் லசித் மாலிங்க உட்பட தற்போது உருவெடுத்து வருகின்ற இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா வரை வித்தியாசமான பாணியில் பந்துவீசுபவர்களைப் பார்ப்பதற்கான ஆர்வம் எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம், அதேநேரம் சுழல் பந்துவீச்சில் போல் ஆடம்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்னும் எவ்வளவோ பந்துவீச்சாளர்கள் மைய நீரோட்டத்துக்கு வராமலேயே திறமையான பந்துவீச்சாளர்களாகவும் வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான பந்துவீச்சுப் பாணியையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

போயகொடவின் உலக சாதனை மூலம் இலங்கை இளையோர் அணி அபார வெற்றி

அந்த வகையில் தமிழ்நாட்டு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியட்ஸ் அணிக்கு விளையாடிய அதிசயராஜ் டேவிட்சனின் பந்துவீச்சுப் பாணியானது அச்சு அசத்தலாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவின் பந்துவீச்சுப் பாணியை நகல் எடுத்தது போல் உள்ளது. அதுமாத்திரமின்றி, மாலிங்கவைப் போல தனது கையை பக்கவாட்டில் வளைத்து யோர்க்கர் பந்துகளை வீசக்கூடிய திறமை படைத்தவராகவும் விளங்குகிறார்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, கடந்த சில தினங்களுக்கு முன் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் அதிசயராஜ் டேவிட்சனின் யோர்க்கர் பந்து ஒன்றின் வீடியோவை வெளியிட்டு அதற்கு ‘மீட் த இந்தியன் லசித் மாலிங்க’ என்று தலைப்பிட்டுள்ளார்.

25 வயதான அதிசயராஜ் டேவிட்சன் தூத்துக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இந்தியாவில் நடைபெற்றுவருகின்ற மாநிலங்களுக்கு இடையிலான சையத் முஷ்டாக் அலி கிண்ண டி20 கிரிக்கெட்டில் முதல் தடவையாக விளையாடி வருகின்றார். எனினும், கடந்த முறை நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் அணிக்காக விளையாடிய அதிசயராஜ் டேவிட்சன் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அத்துடன், தற்போது தெற்கு மண்டல அணிக்காக 5 டி20 போட்டிகளில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ள வலதுகை வேகப்பந்துவீச்சாளரான அதிசயராஜ், அண்மையில் நடைபெற்ற கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். எனினும், அப்போட்டியில் தமிழ்நாடு அணி 78 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றில் அதிசயராஜ் விளையாடியிருந்தார். இதன்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுனில் சாம், அவருடைய திறமையை நேரில் கண்டு எம்.ஆர்.எப் கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அதிசயராஜ் கருத்து வெளியிடுகையில், நான் சிறுவனாக இருக்கும் போது டென்னிஸ் மற்றும் ரப்பர் பந்துகளில் கிரிக்கெட் விளையாடி வந்தேன். அதன் பிரதிபலனாக நான் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஆரம்பித்தேன். கடந்த 3 வருடங்களாக எம்.ஆர்.எப் அணியின் பயிற்றுவிப்பாளரான செந்தில் நாதனிடம் பயிற்சிகளை மேற்கொண்டேன். அதன்பிறகு தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிட்டியதுடன், எனது திறமையை வெளிக்காட்டுவதற்கான சிறந்த களமாகவும் அது அமைந்தது. அதுமாத்திரமின்றி என்னிடம் உள்ள வித்தியாசமான பந்துவீச்சுப் பாணியை எவ்வாறு விக்கெட்டுக்களை கைப்பற்றுவது தொடர்பில் தமிழ்நாட்டு அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளரான லக்‌ஷ்மிபதி பாலாஜி, நிறைய ஆலோசனைகளை எனக்கு வழங்கியிருந்தார். அத்துடன், லசித் மாலிங்கவைப் போல பந்துவீசுகின்ற திறமை என்னிடம் இருப்பதை நான் ஆரம்பத்திலேயே அறிந்துகொண்டேன். இதனால் மாலிங்கவின் வீடியோக்களைப் பார்த்து பந்துவீசுவதற்கு முயற்சி செய்வேன். ஆனால் இது எனது இயல்பான பந்துவீச்சாகும். மற்ற வீரர்களைப் பார்த்து பந்துவீச வேண்டிய அபிப்பிராயம் எனக்கு கிடையாது. ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில் மாலிங்கவின் பந்துவீச்சு முறையின் சில நுட்பங்களையும், தந்திரங்களையும் உள்வாங்கிக் கொள்வேன் என்றார்.

18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு

இந்நிலையில், இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ள அதிசயராஜ், கடந்த புதன்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியின் விசேட பயிற்சி முகாமிலும் கலந்துகொண்டிருந்தார்.

எனவே ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட லசித் மாலிங்கவுக்குப் பதிலாக, நகல் மாலிங்க என வர்ணிக்கப்படுகின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிசயராஜ் டேவிட்சன், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து கருத்து வெளியிட்ட அதிசயராஜ், என்னுடைய அண்மைக்கால திறமைகளைப் பார்த்து இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டும் என பலர் என்னிடம் சொல்லி வருகின்றனர். உண்மையில் அவ்வாறு விளையாடுவதற்கு வாய்ப்பு கிட்டினால் எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அது அமையும். எனினும், ஆனால் அதை மனதில் வைத்துக்கொண்டு நான் விளையாடவில்லை. எனது முழுக் கவனமும் தற்போது நடைபெற்று வருகின்ற சையத் முஷ்டாக் அலி கிண்ண டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதாகும் என தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்திய அணிக்காக விளையாடுகின்ற திறமை இவரிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.