சம்பியன் லீக்கிற்கான வெற்றிப் பாதையில் ரெட் ஸ்டார் அணி

565

தற்பொழுது நடைபெற்று வரும் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) கால்பந்து தொடரின் சுபர் சிக்ஸ் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை கம்பளை ரெட் சன் மற்றும் பேருவளை ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகங்கள் பலப்பரீட்சை நடாத்தின. விறுவிறுப்பான இப்போட்டியின் நிறைவில், ரெட் ஸ்டார் அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது.

கம்பளை வீகுலுவத்தை விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியை ரெட் சன் விளையாட்டுக் கழகம் ஆரம்பித்தது. கோலிற்கான முதல் முயற்சி போட்டியின் 2ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் முன்கள வீரரான முஹமட் ரஹுமான் மூலம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அம்முயற்சி ரெட் ஸ்டார் அணிக்கு பலனளிக்கவில்லை.

அதே போல் போட்டியின் 3ஆவது நிமிடத்தில், ரெட் சன் அணிக்கு கிடைத்த முதல் வாய்ப்பை அவ்வணியின் முன்கள வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த தவறினர்.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ரெட் சன் அணியின் வலது பக்க மத்திய களத்திலிருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை, பெனால்டி எல்லையிருந்த ரெட் சன் கழக வீரர்கள் தடுத்தாடுவதில் தோல்வியுற்றனர். எதிரணி வீரர்கள் மூலம் விடப்பட்ட தவறை பயன்படுத்திய முஹமட் ரஹுமான், தன்னையடைந்த பந்தை சிறந்த முறையில் கோலாக்கினார்.

FIFA உலகக் கிண்ணத்தை பார்வையிட 1,500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

எதிரணி வீரர்கள் போட்டியில் முன்னிலை பெற்ற சமயத்தில் 13ஆவது நிமிடத்தில் எதிரணியின் பெனால்டி பெட்டிக்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற மைக்கல் மூலம் போட்டியை சமப்படுத்த முடியாமல் போனது. 

நீண்ட நேர பந்து பரிமாற்றத்தின் பின் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் வலது பக்க மூலையிலிருந்து பொன்னபெரும மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தினால், மீண்டும் சிறந்ததொரு வாய்ப்பை ரெட் சன் அணி பெற்றது. எனினும் அவ்வாய்ப்பின்  மூலமும் அவ்வணிக்கு எவ்வித பலனும் கிட்டவில்லை. 

நீண்ட நேரமாக எதிரணியின் எல்லைக்குள் நுழையத் தடுமாறிய ரெட் ஸ்டார் அணிக்கு போட்டியின் 39ஆவது நிமிடத்தில் சிறந்த வாய்ப்பு காத்திருந்தது. ரெட் சன் அணியின் பெனால்டி எல்லைக்கு அருகில் பின்கள வீரர்களுக்கு மத்தியில் நிலவிய மோசமான பந்து பரிமாற்றத்தின் போது, தன்னையடைந்த பந்தை பெற்ற ரெட் ஸ்டார் வீரர்  முஹமட் பைசல் தனது அணிக்கான இரண்டாவது கோலை சிறந்த முறையில் பெற்றுக் கொடுத்தார்.

எதிரணி இரண்டு கோல்களின் மூலம் முன்னிலை பெற்றதை அவதானித்த ரெட் சன் கழக வீரர்கள் போட்டியை சற்று வேகப்படுத்திய போதும் முதல் பாதியில் அவர்களுக்கான எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 

முதல் பாதி: ரெட் சன் விளையாட்டுக் கழகம் 0 – 2 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்து முதல் நிமிடத்திலேயே சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர் பெனால்டி எல்லையிலிருந்து ரெட் சன் வீரர் மைக்கல் பெற்ற பந்தை பின்கள வீரர்களையும் தாண்டி சிறந்த முறையில் கிம்ஹானவிற்கு வழங்கினார். எந்தவித பின்கள வீரர்களுமின்றி பெற்ற பந்தை கிம்ஹானவால் கோலினுள் செலுத்தி நிறைவு செய்ய முடியவில்லை. 

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் அணியின் பின்களத்திலிருந்து சிறந்த முறையில் வழங்கப்பட்ட பந்தை தனது கட்டுப்பாட்டில் நிறுத்திய பீடர், பெனால்டி எல்லை வரை பந்தை கொண்டு சென்றார். எனினும், ரெட் சன் அணியின் பின்கள வீரர்கள் மூலம் சிறந்த முறையில் வழங்கப்பட்ட சவாலினால் அம்முயற்சி தகர்க்கப்பட்டது. 

மீண்டும் போட்டியின் 73ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் அணியின் முன்கள வீரர்களான முஹமட் ரஹுமான் மற்றும் பீடர் ஆகியோர் மத்தியல் நிலவிய தொடரான சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின், பெனால்டி எல்லையில் பீடர் தான் பெற்ற பந்தை கோலின் இடது பக்க மூலையை நோக்கி உள்ளனுப்பினார். எனினும் மிகவும் சிறப்பாக செயற்பட்ட ரெட் சன் அணியின் கோல் காப்பாளர், பந்தை பாய்ந்து பற்றிக் கொண்டார்.

அதனை தொடர்ந்து ரெட் ஸ்டார் அணி பெற்ற கோணர் வாய்ப்பின் போது முஹமட் ரஹூமான் மற்றும் மற்றும் முஹமட் அலீ ஹசன் ஆகிய இரு வீரர்களாலும், பெனால்டி எல்லையிலிருந்து கோலை நோக்கி எடுக்கப்பட்ட தொடரான இரு முயற்சிகளையும் ரெட் சன் அணியின் கோல் காப்பாளர் மீண்டும் சிறந்த முறையில் தடுத்து நிறுத்தினார்.

தொடராக 82ஆவது நிமிடத்தில் முஹமட் ரஹுமான் மூலம் மீண்டும் வலது பக்க பெனால்டி எல்லையிலிருந்து கோலிற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இம்முறை, பந்தானது கோல் காப்பாளரை தாண்டிய போதும் கோல் கம்பங்களில் பட்டு எல்லைக் கோட்டை தாண்டியது.

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான புட்சால் தொடர் இவ்வார இறுதியில்

இறுதி முயற்சியாக போட்டியின் மேலதிக நேரத்தில் ரெட் சன் அணியின் முன்கள வீரரான மைக்கல் மூலம் அவ்வணிக்கான முதல் கோல் பெறப்பட்டது. மாற்று வீரராக களமிறங்கிய கிம்ஹான மூலம் மத்தியகளத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற மைக்கல் கோல் காப்பாளரையும் தாண்டி ரெட் சன் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். அத்துடன் சில வினாடிகளில் நடுவர் போட்டியை நிறைவு செய்தார்.

இரண்டாம் பாதியில் பல வெற்றிகரமான வாய்ப்புக்களை ரெட் ஸ்டார் அணியின் முன்கள வீரர்கள் பெற்ற போதும், ரெட் சன் அணியின் கோல் காப்பாளரை தாண்டி அணிக்கான கோலை அவர்களால் பெறமுடியவில்லை. 

இந்த வெற்றியோடு, ரெட் ஸ்டார் அணி சுபர் சிக்ஸ் தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதோடு, சம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பினையும் அதிகரித்துக்கொண்டுள்ளது.

முழு நேரம்: ரெட் சன் விளையாட்டுக் கழகம் 1 – 2 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

கோல்கள் பெற்றோர்

ரெட் சன் விளையாட்டுக் கழகம் : மைக்கல் 90+3′ 

ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் : முஹமட் ரஹுமான் 10′, முஹமட் பைசல் 38′

மஞ்சள் அட்டை

ரெட் சன் விளையாட்டுக் கழகம் : குமார தஹனாயக்க 81′