இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல் தொடரின் 11ஆவது பருவகாலப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இம்முறைப் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் பெங்ளுருவில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு கடந்த வாரம் முடிவடைந்தது. இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக 1,122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 578 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் நேற்று(20) உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். இதன்படி, 578 வீரர்களில் 182 வீரர்கள் ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க 39 இலங்கை வீரர்கள் விண்ணப்பம்
11ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில்…
அத்துடன், 36 வீரர்களின் அடிப்படை விலை இந்திய பணப்பெறுமதியில் 2 கோடி ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 பேர் இந்திய வீரர்கள். 23 பேர் வெளிநாட்டு வீரர்கள். அத்துடன், 32 பேரின் அடிப்படை விலை 1.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 31 பேரின் அடிப்படை விலை 1 கோடி ரூபாவாகவும், 23 பேரின் அடிப்படை விலை 75 இலட்சம் ரூபாவாகவும், 122 பேரின் அடிப்படை விலை 50 இலட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
14 வீரர்களின் அடிப்படை விலை 40 இலட்சமாகவும், 17 பேரின் விலை 30 இலட்சமாகவும், 303 பேரின் விலை 20 இலட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஐ.பி.ல் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 25 வீரர்களை ஏலம் எடுக்கலாம்.
எனவே, 282 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ள இம்முறை ஐ.பி.எல் ஏலத்திற்கு இலங்கையிலிருந்து 39 வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதிலிருந்து இறுதி ஏலத்தில் போட்டியிடுவதற்கு 18 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அடிப்படை விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
வழமை போல பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இம்முறை தொடரிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேவேளை, ஐ.சி.சியின் அங்கத்துவ நாடுகளான அமெரிக்காவில் இருந்து 2 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து ஒரு வீரரும் இம்முறை ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்தமுறை ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்ட இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ், இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளதுடன், அவருக்கான அடிப்படை விலை இந்திய ரூபாவில் 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம்
இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள சந்திக்க…
ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஒரேயொரு இலங்கை வீரரான லசித் மாலிங்கவை, விடுவிக்க மும்பை அணி நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் போட்டியிடுகின்ற லசித் மாலிங்கவுக்கு ஒரு கோடி ரூபா அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு வீரர்களைத் தவிர ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பெற்றுள்ள எஞ்சிய 16 வீரர்களுக்குமான அடிப்படை விலை 50 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் இலங்கை அணிக்காக அபாரமாக விளையாடி வருகின்ற மற்றுமொரு அதிரடி ஆட்டக்காரரான நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரோ, அசேல குணரத்ன, தசுன் சானக்க உள்ளிட்ட வீரர்களும் இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, இம்முறை ஐ.பி.எல் ஏலத்திற்காக வீரர்களின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 36 பேர் கொண்ட முன்னணி வீரர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள 13 இந்திய வீரர்களில் யுவராஜ் சிங், கௌதம் காம்பீர், ரவிச்சந்திரன் அஷ்வின், அஜிங்கே ரஹானே, ஹர்பஜன் சிங், ஷிகர் தவான் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், 23 வீரர்கள் இடம்பெற்றுள்ள சர்வதேச வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் லையன், இயென் மோர்கன், டுவைன் பிராவோ, கொலின் முன்ரோ, ஜோ ரூட், கிளென் மெக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், பாப் டூ ப்ளெசிஸ் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோரின் அடிப்படை விலையும் 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் அடிப்படை விலைகள் விபரம்
அடிப்படை விலை (இந்திய ரூபா) | மொத்தம் | இந்திய வீரர்கள் | வெளிநாட்டு வீரர்கள் |
2 கோடி | 36 | 13 | 23 |
1.5 கோடி | 32 | 5 | 27 |
1 கோடி | 31 | 9 | 22 |
75 இலட்சம் | 23 | 5 | 18 |
50 இலட்சம் | 122 | 30 | 92 |
40 இலட்சம் | 14 | 8 | 6 |
30 இலட்சம் | 17 | 10 | 7 |
20 இலட்சம் | 303 | 280 | 23 |
காசிப் நவீடின் சதத்தால் பாணந்துறை அணி முன்னிலையில்
இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 உள்ளுர் பருவ காலத்திற்கான…
இலங்கை வீரர்களின் அடிப்படை விலை விபரம்
வீரர்கள் | அடிப்படை விலை |
அஞ்செலோ மெதிவ்ஸ் | 2 கோடி |
லசித் மாலிங்க | 1 கோடி |
நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகென், சச்சித்ர சேனாநாயக்க, உபுல் தரங்க, அசேல குணரத்ன, திசர பெரேரா, தில்ஷான் முனவீர, சீக்குகே பிரசன்ன, தசுன் சானக்க, துஷ்மன்த சமீர , நுவன் குலசேகர, சுரங்க லக்மால், தனஞ்சய டி சில்வா, இசுரு உதான | 50 இலட்சம் |