ட்ரை மழை பொழிந்த கண்டி, கடற்படை விளையாட்டுக் கழகங்கள்

240

டயலொக் கழக ரக்பி லீக் தொடர் இறுதிக் கட்டத்தை அண்மித்து வரும் நிலையில், நேற்று (13) இடம்பெற்ற ஆட்டங்களில் ஹெவலொக் விளையாட்டுக் கழகம், கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகம் என்பன வெற்றிகளைப் பதிவு செய்துகொண்டன. 

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் அதீத திறமையை வெளிக்காட்டிய ஹெவலொக் அணியானது, 27-08 என்ற புள்ளிகள் அடிப்படையில் இராணுவ அணியை இலகுவாக வென்றது.

ஹெவலொக் அணியானது, கடந்த வார CH&FC அணியுடனான தோல்வியின் பின்னர், இவ்வாரம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கியது. அவ்வாறே ஹெவலொக் அணி போட்டியின் முன்னிலை பெற்றது.

இராணுவ அணியின் சமீர புளத்சிங்கள 5 ஆவது நிமிடத்திலேயே மஞ்சள் அட்டை பெற்று வெளியேற, ஹெவலொக் அணி அதனை சாதகமாகப் பயன்படுத்தி அஸ்மின் பஜுதீன் மூலமாக முதலாவது ட்ரை வைத்தது. ரீசா முபாரக் கொன்வெர்சனை சிறப்பாக பூர்த்தி செய்தார். (ஹெவலொக் 07 – 00 இராணுவப்படை)

விமானப்படையை வீழ்த்தி இரண்டாம் இடத்திற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட CH & FC

சிறிது நேரத்தில் ரீசா பெனால்டி உதையின் மூலம் ஹெவலொக் அணிக்கு மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இராணுவ அணியும் தனது முதலாவது புள்ளியை பெனால்டி உதையின் மூலமாக பெற்றுக்கொண்டது. கயான் சாலிந்த 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து இராணுவ அணியானது அசோக ஜெயலால் மூலமாக ட்ரை வைத்ததுடன் முதல் பாதி நிறைவடைந்தது.

முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 10 – 08 இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 

இரண்டாம் பாதியில் மழை குறுக்கிட்டாலும், ஹெவலொக் அணியானது தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்து மேலும் முன்னிலை அடைந்து கொண்டது. லசிந்து கருணாதிலக்க மற்றும் சாணக பண்டார ஆகியோர் முறையே இரண்டு ட்ரைகளையும் வைத்தனர். மேலும் ரீசா தனது திறமையான ட்ரொப் கோலின் மூலம் ஹெவலொக் அணிக்கு 3 புள்ளிகளை மேலதிகமாக பெற்றுக்கொடுத்தார். ஹெவலொக் அணியின் கிஹான் மதுசங்கவிற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் 

முழு நேரம்: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 28(3T ,3C ,1P ,1DG ) – 08(1T ,1P) இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – ரீசா முபாரக் (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)


கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் CR & FC

கண்டி நித்தவலை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ட்ரை மழை பொழிந்த கண்டி கழகமானது, 50-15 என்ற புள்ளிகள் அடிப்படையில் CR & FC அணியை இலகுவாக வெற்றிபெற்றது.

இப்போட்டியில் ஆரம்பத்தில் CR & FC அணியானது தனது நட்சத்திர வீரர்கள் பலரை களத்தில் இறக்கவில்லை. இது CR & FC அணிக்கு மிக பெரிய பலவீனமாக அமைந்தது. CR & FC அணி தனது பலம் மிக்க வீரர்களை களத்தில் இறக்கும் பொழுது கண்டி அணி CR & FC அணியை துவம்சம் செய்திருந்தது.

ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய கண்டி அணியானது CR & FC அணிக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்காது ட்ரை மேல் ட்ரை வைத்தது. முதலாம் பாதியில் கண்டி அணி 3 ட்ரைகளை வைத்து அசத்தியது.

CR & FC அணியின் ஒமல்க விட்ட தவறினால் கண்டி அணி முதலாவது ட்ரையை 14 ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொண்டது. தரிந்து சதுரங்க ட்ரை வைத்தார். தொடர்ந்து ரிச்சர்ட் தர்மபால மற்றும் தனுஷ்க ரஞ்சன் கண்டி அணி சார்பாக ட்ரை வைத்தனர். திலின விஜேசிங்க இன்று விளையாடததால் நைஜல் ரத்வத்த உதைத்தலிற்கான பொறுப்பை ஏற்றார். அவ்வகையில் 3 கொன்வெர்சனையும் உதைந்து தனது திறமையை நைஜல் நிரூபித்தார்.

பொலிஸ் அணியை துவம்சம் செய்த கண்டி விளையாட்டுக் கழகம்

CR & FC அணி சார்பாக ரீசா றபாய்தீன் தமது அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். ஏறத்தாழ 50 மீட்டர் தொலைவில் இருந்து  உதைத்து 3 புள்ளிகளை தமது அணிக்கு அவர் பெற்றுக்கொடுத்தார்.

முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 21 – 03 CR & FC

இரண்டாம் பாதியில் கண்டி அணி 5 ட்ரைகளை வைத்து CR & FC அணியை நிலைகுலைய வைத்தது. இருந்தாலும் CR & FC அணி இப்பாதியில் இரண்டு ட்ரைகளை வைத்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இப்பாதியில் 7 ட்ரைகள் வைக்கப்பட்டது விசேட அம்சமாகும். இது ரசிகர்களுக்கு விருந்தளித்தது என்பதில் ஐயமில்லை.

கண்டி அணியின் உசித ஜயசூரிய ட்ரை மழையை ஆரம்பித்து வைக்க ஜேசன் திஸாநாயக்க அதனை சிறப்பாகப் பேணினார். முன்னாள் தலைவரான பாசில் மரிஜாவின் அசாத்திய விளையாட்டின் மூலமே இந்நிலைமை உருவானது என்பது விசேடம் ஆகும். தொடர்ந்து ஸ்ரீநாத் சூரியபண்டார கண்டி அணி சார்பாக ட்ரை வைக்க, CR & FC அணி மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தது. (கண்டி 38 – 03 CR & FC)

நைஜல் ரத்வத்த கண்டி அணிக்காக 7 ஆவது ட்ரையை வைத்தார். எனினும் சஷான் மொகமடின் விரைவான செயற்பாட்டினால் CR & FC அணி முதல் முறையாக ட்ரை கோட்டை கடந்தது. 67 ஆவது நிமிடத்தில் ரீசா றபாய்தீன் முதலாவது ட்ரை வைத்தார். எனினும் கொன்வெர்சனை அவர் தவறவிட்டார். (கண்டி 45 – 08 CR & FC)

ரிச்சர்ட் தர்மபால மீண்டும் கண்டி அணி சார்பாக ஒரு ட்ரை வைக்க, கண்டி அணி 50 புள்ளிகளைத் தொட்டது. இரண்டாம் பாதியில் கிடைத்த 5 கொன்வெர்சன்களில், மூன்றை நைஜல் வெற்றிகரமாக உதைத்தார். இறுதி நிமிடத்தில் CR & FC அணி மற்றுமொரு ஆறுதல் ட்ரை வைத்தது.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 50 (8T, 5C) – 15 (2T ,1C ,1P ) CR & FC

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – தரிந்து சதுரங்க (கண்டி விளையாட்டுக் கழகம்)


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கடற்படை அணியானது, சமீபகாலமாக சற்று தடுமாறும் பொலிஸ் அணியை 45 – 26 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது .

கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற உத்வேகத்தில் கடற்படை அணி போட்டியில் கலந்துக்கொள்ள, மறுமுனையில் வெற்றியை எதிர்பார்த்து பொலிஸ் அணி களமிறங்கியது.

போட்டியின் முதல் புள்ளியை, ஜனித் சந்திமால் மூலம் பொலிஸ் கழகம் பெற்றுக்கொண்டது. இதற்குப் பதிலடியாக தொடர்ந்து இரண்டு ட்ரைகளை வைத்து கடற்படை அணி அசத்தியது. ஸ்டீபன் க்ரெகரி முதலாவது ட்ரை வைக்க, 60 மீட்டர்கள் தனியாக கடந்து சென்ற திலின வீரசிங்க இரண்டாவது ட்ரை வைத்தார். 

தொடர்ந்து பொலிஸ் அணி பல வாய்ப்புகளை நழுவவிட்டாலும், ஜனித் சானக மூலமாக ட்ரை வைத்து புள்ளியை சமநிலை செய்தது. ஜெயவிக்ரமவின் கொன்வெர்சனுடன், பொலிஸ் அணி மீண்டும் முன்னிலை பெற்றது. (பொலிஸ் 12 – 10 கடற்படை)

இரண்டாவது பாதியை முழுமையாக தம்வசப்படுத்திய கடற்படை

முதல் பாதியின் இறுதித் தருணத்தில் கடற்படை அணியின் சரித் சில்வா ட்ரை வைத்து, கடற்படை அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார்.

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 12 – 17 கடற்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கடற்படை அணி, ஆரம்பத்திலேயே இரண்டு ட்ரைகளை வைத்தது. க்ரெகரி தனது இரண்டாவது ட்ரையை வைக்க, பிரியரத்னவின் அபார ஆட்டத்தின் உதவியுடன் சுபுன் டில்ஷான் ட்ரை வைத்தார். வீரசிங்க கொன்வெர்சனை வெற்றிக்கரமாக உதைத்தார். (பொலிஸ் 12 – 31 கடற்படை)

பொலிஸ் அணி உதய சஞ்சுல மூலமாக ட்ரை வைத்த பொழுதும் மேலும் இரண்டு ட்ரைகளை வைத்த கடற்படை அணியானது தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது. இம்முறை திலின மற்றும், ஹர்ஷ மதுரங்க ட்ரை வைத்தனர். விங் நிலை வீரரான சாணக பொலிஸ் அணி சார்பாக இறுதியாக ஆறுதல் ட்ரை வைத்தார்.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 26 (4T, 3C) – 45 (7T, 5C) கடற்படை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – ஸ்டீபண் க்ரெகரி (கடற்படை விளையாட்டுக் கழகம்)