கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை

1238

கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில், அணியொன்றினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நேபாள கட்புலனற்றோர் அணியுடன் இன்று (13) நடைபெற்ற லீக் போட்டியில் 494 ஓட்டங்களைப் பதிவுசெய்த இலங்கை அணி புதிய உலக சாதனை படைத்தது.

கட்புலனற்றோருக்கான 40 ஓவர்கள் கொண்ட 5 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் டுபாய் மற்றும் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்றன.

டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சந்தன தேஷப்பிரிய முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய கௌஷால் சில்வா, பிரியந்த ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடி முதல் விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இதில் கௌஷால் சில்வா 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சமன், சுரங்க சம்பத் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, துடுப்பாட்டத்தில் அபாரமாக விளையாடிய பிரியந்த 68 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டியின் போது ஏற்பட்ட திடீர் உபாதையினால் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பமாகும்…

இதனையடுத்து ஜோடி சேர்ந்த திமுது ரவீந்திர மற்றும் அணித் தலைவர் சந்தன தேஷப்பிரிய ஆகியோர் நேபாள அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளி இம்முறை உலகக் கிண்ணத்தில் தமது முதலாவது சதங்களைப் பெற்றுக் கொண்டதுடன், கட்புலனற்றோர் உலகக் கிண்ணப் போட்டியில் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தனர்.

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 494 ஓட்டங்களை இலங்கை கட்புலனற்றோர் அணி பெற்றுக்கொண்டது.

இதில் திமுது ரவீந்திர ஆட்டமிழக்காது 79 பந்துகளில் 168 ஓட்டங்களையும், சந்தன தேஷப்பிரிய ஆட்டமிழக்காது 62 பந்துகளில் 129 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 495 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள அணி 33.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று 340 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. அவ்வணி சார்பாக பர்தி 37 ஓட்டங்களையும், சுனில் தாபா 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திமுது, தனிஷ மற்றும் சந்தன தேஷப்பிரிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதை திமுது ரவீந்திர பெற்றுக்கொண்டதுடன், பெறுமதிமிக்க வீரருக்கான விருதை சந்தன தேஷப்பிரிய பெற்றுக்கொண்டார்.

கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெற்றி

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற கட்புலனற்றோருக்கான ஐந்தாவது…

முன்னதாக இலங்கை அணி தாம் பங்குபற்றிய முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 485 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டதுடன், அப்போட்டியில் 303 ஓட்டங்களால் அபார வெற்றியையும் பதிவு செய்தது.

இந்நிலையில், இலங்கை எதிர் பங்களாதேஷ், அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் மற்றும் இந்தியா எதிர் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நாளை (14) நடைபெறவுள்ளது.

ஆட்டநாயகன் விருது – திமுது ரவீந்திர

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 494/5 (40) – திமுது ரவீந்திர 168*, சந்தன தேஷப்பிரிய 129*,  ட்ருகா 1/75

நேபாளம் – 154 (33.4) – பர்தி 37, சுனில் தாபா 26

முடிவு – இலங்கை கட்புலனற்றோர் அணி 340 ஓட்டங்களால் வெற்றி