T-20 அரங்கில் சதத்தில் புதிய உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்

741

இன்று (03) நிறைவுக்கு வந்த நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரில் பெற்ற சதம் மூலம் நியூசிலாந்து வீரர் கொலின் முன்ரோ சதங்களில் புதிய சாதனை படைத்துள்ளார்.  

முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனவும், ஒரு நாள் தொடரை 3-0 எனவும் கைப்பற்றிய நியூசிலாந்து அணி, T-20 தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி 2-0 என தொடரைக் கைப்பற்றி 2018ஆம் ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற முதலாவது T-20 போட்டியில் கொலின் முன்ரோவின் அரைச் சதத்துடன் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் வெளிநாட்டவர்கள்

இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது நடாத்தி வரும்…

இதன்பிறகு 2018ஆம் ஆண்டின் முதல் சர்வதேசப் போட்டியாக நடைபெற்ற 2ஆவது T-20 போட்டி மழை காரணமாக சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சார்பில் கொலின் முன்ரோ அதிரடியாக துடுப்பெடுத்தாடி 18 பந்தில் அரைச்சதம் கடந்தார். இதன்மூலம் அதிவேக அரைச்சதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதலிரண்டு இடங்களை அவர் தனதாக்கிக் கொண்டார். முன்னதாக 2016இல் இலங்கை அணிக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற T-20 போட்டியில் 14 பந்தில் இந்த மைல்கல்லை முன்ரோ எட்டினார்.

இந்நிலையில், 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கொலின் முன்ரோ மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் பௌண்டரி, சிக்ஸர் என மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை பதம்பார்த்து அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் கொலின் முன்ரோ T-20 போட்டிகளில் தனது 3ஆவது சதத்தை பதிவுசெய்தார். 53 பந்துகளுக்கு முகங்கொடுத்து 10 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்களை குவித்த அவர், 47 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்படி T-20 அரங்கில் ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 3 சதங்களைக் குவித்த முதல் வீரராகவும் அவர் இடம்பிடித்தார். முன்னதாக 2017ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிராக 101 ஓட்டங்களையும், இந்தியாவுக்கு எதிராக 109 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த மைதானத்தில் 3 T-20 சதங்கள் அடித்து, ஒரே மைதனாத்தில் 3 T-20 போட்டிகளில் சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் முன்ரோ பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, T-20 அரங்கில் 2 சதங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கலம், ஜிபாப்வேயின் எவின் வில்லியம்ஸ், மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் மற்றும் இந்தியாவின் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

மோசமான நடத்தையினால் ஒப்பந்தத்தை இழந்த சபீர் ரஹ்மான்

முதற்தரப் போட்டியொன்றின்போது..

முன்ரோவுடன் மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய மார்டின் கப்டில் 38 பந்துகளில் 63 ஓட்டங்களையும், அணித் தலைவர் வில்லியம்ஸன் 8 பந்துகளுக்கு முகங்கொடுத்து 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, புரூஸ் 14 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி 20 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணி 5 விக்கட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் பிராத்வைட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 244 என்ற பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதல் நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்து தடுமாற 16.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 119 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் 2-0 என இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அன்ட்ரு பிளெச்சர் 46 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.  நியூசிலாந்து சார்பில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கொலின் முன்ரோ, தொடர் மற்றும் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.