இந்தப் பருவகாலத்திற்கான உள்ளூர் அணிகளுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின் இரண்டாம் சுற்றுக்கான போட்டிகள் வெள்ளிக்கிழமை (29) ஆரம்பமாகியது.
CR & FC கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக்கழகம்
ஹெவலொக் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாம் சுற்றின் முதல் ஆட்டமான இந்தப் போட்டியில் இராணுவப்படையை 24-17 என்ற புள்ளிகள் கணக்கில் CR&FC கழகம் தோற்கடித்தது.
முதல் பாதியில் இராணுவப்படையின் ஆதிக்கம் ஆரம்பத்தில் இருந்தே காணப்பட்டிருந்த போதிலும், தமக்கு கிடைத்த வாய்ப்பு ஒன்றின் மூலம் முதல் பாதியில் புள்ளிகளை CR & FC கழகம் சமனாக்கிக் கொண்டது.
முதல் பாதி: CR & FC 10 – 10 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதியை ட்ரை ஒன்றுடன் CR & FC கழகம் ஆரம்பித்தது. இந்த ட்ரை வெற்றிகரமாக கொன்வெர்சன் செய்யப்பட அவ்வணி இராணுவப்படையை விட முன்னிலை அடைந்தது.
டயலொக் ரக்பி லீக் முதல் சுற்றை வெற்றியுடன் முடித்த கண்டி கழகம்
டயலொக் ரக்பி லீக் இறுதி வாரப் போட்டியில், ஹெவலொக் அணியை 20-09 என்ற புள்ளிகள் அடிப்படையில்…
மேலும் இராணுவப்படை இரண்டாம் பாதியில் செய்த தவறுகளால் பெனால்டி வாய்ப்புக்கள் மூலம் CR & FC அணி மேலும் புள்ளிகளை அதிகரித்துக் கொண்டதுடன் ஆட்டத்தின் முழு ஆதிக்கத்தையும் எடுத்துக் கொண்டது. இறுதி நிமிடங்களில் இராணுவப்படையினர் ஆறுதல் ட்ரை ஒன்றை எடுத்த போதிலும் CR&FC அணியை வீழ்த்த அது போதுமாக அமைந்திருக்கவில்லை.
முழு நேரம்: CR & FC 24 (3T, 1P, 3C) – 17 (2T, 2C, 1P) இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
ஹெவலொக் விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாம் சுற்றுக்காக ஆரம்பமான மற்றுமொரு போட்டியில் ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 34-18 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப்படை அணியை வீழ்த்தியது.
ரத்மலானையில் வெள்ளிக்கிழமை (29) மாலை தொடங்கிய இந்த மோதலின் தொடக்கத்தில் இரண்டு ட்ரைகளை வெற்றிகரமாக கொன்வெர்சன் செய்து கொண்ட ஹெவலொக் அணி மிகவும் சிறந்த ஆரம்பத்தை வெளிக்காட்டியது.
எனினும், இந்த ஆதிக்கத்தை ஹெவலொக் அணியினர் நீடிக்கத் தவறிய காரணத்தினால் விமானப்படை அணிக்கு இதன்போது கிடைத்த ட்ரை கொன்வெர்சன் செய்யப்பட்டதன் மூலம் முதல் பாதியின் முடிவில் உற்சாகத்தை அடைந்து கொண்டனர்.
முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 14 – 7 விமானப்படை விளையாட்டுக் கழகம்
முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் புத்துணர்ச்சி அடைந்த விமானப்படை இரண்டாம் பாதியில் தமது எதிர் தரப்புக்கு சவால் தரும் விதமாகவே செயற்பட்டது.
இதனால் ஒருகட்டத்தில் இரண்டு அணிகளதும் புள்ளிகள் 17-15 என்ற நிலைக்கு வந்தது. இந்த தருணத்தில் சுதாரித்துக் கொண்ட ஹெவலொக் அணியினர் ட்ரைகளை துரிதமாக பெறத்தொடங்கினர். இதனால் விமானப்படையைத் தாண்டி போட்டியின் வெற்றியாளர்களாக ஹெவலொக் கழகம் மாறுவதற்கு அவர்களுக்கு இலகுவாக இருந்தது.
முழு நேரம்: ஹெவ்லோக் விளையாட்டுக் கழகம் 34 (5T, 3C, 1P) – 18 (2T, 1C, 2P) விமானப்படை விளையாட்டுக் கழகம்
CH & FC கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்
வெலிசரை கடற்படை மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகம், CH & FC அணியை 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றியொன்றை சுவைத்தது.
ஆரம்பத்தில இருந்தே மிகவும் சிறப்பாக செயற்பட்ட CH & FC கழக அணியினர் போட்டியின் ஆதிக்கத்தை தம்வசம் வைத்திருந்தனர். முதல் பாதி நிறைவடைய 15 நிமிடங்களுக்கு முன்னர் எதிரணி விட்ட தவறுகளை சாதகமாக பயன்படுத்திய கடற்படை தமது புள்ளிகளை அதிகரித்துக் கொண்டது. எனினும் முதல் பாதி CH & FC கழகத்தின் முன்னிலையுடனே முடிவடைந்தது.
முதல் பாதி: CH & FC 17 – 10 கடற்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதியில் முதல் ட்ரையை வைத்து CH & FC அணி அவர்களது முன்னிலையை மேலும் அதிகரித்தது. இதற்கு ட்ரைகள் மூலம் பதில் தந்த கடற்படை அணி ஒரு கட்டத்தில் CH & FC கழகத்துடன் புள்ளிகளை 24-24 என சமன் செய்தது.
கடற்படை அதிர்ச்சி கொடுத்த CH&FC : தொடர் தோல்விக்கு முடிவு கட்டிய CR&FC
டயலொக் ரக்பி லீக்கின் இந்த வாரத்திற்கான முதல் இரண்டு போட்டிகளிலும் எதிரணிக்கு கடும் அழுத்தம்…
இப்படியாக ஆட்டம் விறுவிறுப்பு அடைந்த பொழுது தவறு ஒன்றை செய்த CH & FC கழகம் கடற்படைக்கு பெனால்டி ஒன்றை வழங்கியது. இதனை சரியாக உபயோகித்த அவர்கள் தொடரின் முதற்சுற்றில் தம்மை வீழ்த்திய CH&FC அணிக்கு பதிலடி தந்தனர்.
முழு நேரம்: CH & FC 24 (3T, 3C, 1P) – 27 (3T, 3C, 1P) கடற்படை விளையாட்டுக் கழகம்
கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்
நித்தவலையில் நேற்று (30) இடம்பெற்ற இந்தப் போட்டியில் கண்டி ட்ரை மழை பொழிந்து 61-20 என்ற புள்ளிகள் கணக்கில் பொலிஸ் அணியை வீழ்த்தியது.
ஆரம்பத்தில் இருந்தே கண்டி அணி ஆக்ரோஷமாக ஆடியது. கண்டி அணி சார்பாக முதல் பாதியில் நான்கு ட்ரைகள் வைக்கப்பட்டு அவை அனைத்தும் கொன்வெர்சன் மூலம் மேலதிக புள்ளிகளாக மாற்றப்பட்டிருந்தன. பொலிஸ் அணிக்கு எந்த ட்ரையையும் முதல் பாதியில் வைக்க முடியவில்லை.
முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 28 – 06 பொலிஸ் விளையாட்டுக் கழகம்
டயலொக் கழக ரக்பி தொடரின் முதல் சுற்றில் எந்தவொரு தோல்வியையும் பெறாத கண்டி கழகம் இரண்டாம் பாதியிலும் அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தது.
இந்தப்பாதியிலும் அதிக ட்ரைகள் பெறப்பட்ட நிலையில் போட்டியின் வெற்றியாளராக மாறுவதற்கு கண்டி அணிக்கு அது போதுமாக இருந்தது. அந்த வகையில் இந்தப் பருவகாலத்திற்கான டயலொக் கழக ரக்பி தொடரில் எந்தவொரு வெற்றியும் இன்றி பொலிஸ் அணி காணப்படுகின்றது.
முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 61(9T, 8C) – 20 (2T, 2C, 2P) பொலிஸ் விளையாட்டுக் கழகம்