கொழும்பில் பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த ஹத்துருசிங்க

1432

2017இல் மோசமான தோல்விகளை தழுவி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை அணிக்கு, புதிய பயிற்சியாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டமை அனைவரது மத்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் 2018ஆம் ஆண்டுக்கான புதிய கிரிக்கெட் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் வீரர்களின் உளவியல், உடலியல் மற்றும் போட்டித் தன்மையை சிறந்த முறையில் எதிர்கொள்ளும் வகையில் இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தனது பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்தார்.

இலங்கை அணியின் எதிர்காலதிற்கான ஹத்துருசிங்கவின் திட்டம்

இலங்கை அணிக்கு மீண்டும் சேவையாற்ற கிடைத்தமையை எனக்கு…

புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றதன் பிறகு, பங்களாதேஷ் தொடரை இலக்காகக் கொண்டு தெரிவுசெய்யப்பட்ட 23 வீரர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சிகளை நேற்று(28) ஹத்துருசிங்க ஆரம்பித்தார். இக்குழாமில் ஏற்கனவே இடம்பெற்ற அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதை காரணமாக கலந்துகொள்ளாவிட்டாலும், குறித்த குழாமில் இடம்பெறாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இணைந்துகொண்டு வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வீரர்களுடன் மிகவும் சிறந்த முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொண்ட ஹத்துருசிங்க தனது பயிற்சிகளை வீரர்களுக்கு உத்வேகத்துடன் வழங்கியிருந்தமையைக் காணமுடிந்தது. இதில் பிரேமதாஸ மைதான ஆடுகளத்தில் உபுல் தரங்க, குசல் ஜனித் பெரோ, குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு துடுப்பாட்ட பயிற்சிகளை பந்துவீச்சு இயந்திரம் மூலம் வழங்கியிருந்தார்.

அதேபோல பயிற்சிகளை ஆரம்பிக்க முன்னர் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஹத்துருசிங்க, தமக்கு தெரிந்த நுணுக்கங்களை மைதானத்தில் செய்து காட்டும் படி அறிவுரை வழங்கியிருந்தார்.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிகளின் பிறகு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஹத்துருசிங்க பதிலளித்தார்.

நான் நான்கு முக்கிய பிரிவுகளாக வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் துடுப்பாட்டத்தில் எவ்வாறு ஈடுபடுவது, துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு பந்தை எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவிப்பது உள்ளிட்ட பிரதான விடயங்களை முதலில் சொல்லிக் கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்.

போட்டியொன்றில் பிடியெடுப்புகளை தவறவிடுவதோ அல்லது பொருத்தமில்லாத தீர்மானங்களை எடுப்பதோ தோல்விகளுக்கு காரணமல்ல. முதலில் வீரர்கள் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் நீங்கள ஒரு பிடியெடுப்பை தவறவிட்டால் அதுவே தோல்விக்கு காரணமாக இருக்கலாம். இதனால் மற்றுமொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இதற்கு பந்துவீச்சார்களும் விதிவிலக்கல்ல. எனவே நாம் அனைத்து துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு வீரர்களுக்கு நன்கு பயிற்சிகளை வழங்குவதோடு அவர்களிடம் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கான சூழலை விரைவில் ஏற்படுத்துவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன். அதேபோல வீரர்களுடன் சிறந்த தொடர்பாடலையும் விரைவில் ஏற்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2018 இல் இலங்கை பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் பற்றிய பார்வை

2017 இல் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுத் தோல்விகளை…

ஒரு பயிற்றுவிப்பாளராக எனக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தர்ப்பமாக இதை கருகிறேன். சிறந்த பயிற்சிகளின் மூலம்தான் நான் வீரர்களின் திறமைகளை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன். நாம் சிறப்பாக விளையாடாத காரணத்தால் தான் இந்த நிலைக்கு பின்தள்ளப்பட்டோம். ஆனால் தற்போதுள்ள அணியில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர் என்றார் புதிய பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க.

எனினும், கடந்த காலங்களில் பெற்ற தோல்விகளுக்கு வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தாதது காரணமல்ல என தெரிவித்த அவர், உலகில் முதல் 5 அல்லது 10 இடங்களில் இடம்பெறக்கூடிய திறமையான வீரர்கள் இலங்கையில் இருப்பதாகவும், அவர்களது திறமை இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை அணியால் மீண்டும் புத்துயிர் பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்ட ஹத்துருசிங்க, 2019 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு அணியை கட்டியெழுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்மால் மீண்டும் திறமையாக விளையாட முடியும் என நாம் திடமாக நம்புகிறேன். தற்போதுள்ள இலங்கை அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். இது எனக்கு உற்சாகத்தைக் கொடுப்பதுடன், அவர்களது ஆற்றல் வெளிப்பாட்டுக்கு உந்துசக்தியாகவும் அமையவுள்ளது. எனவே எமது வீரர்களின் திறமைகளை அதிஉச்சத்துக்கு கொண்டு செல்வதே எனது குறிக்கோளாகும். அதிலும் 2019 உலகக் கிண்ணத்தை வெல்வதே எனது முதல் கனவாகும் எனவும் தெரிவித்தார்.

2010இற்குப் பிறகு மீண்டும் கிடைத்த பதவி

இலங்கை அணிக்கு மீண்டும் பயிற்றுவிக்க கிடைத்தமை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல சரியான காலத்தில்தான் நான் இலங்கை அணியை பொறுப்பேற்றுள்ளேன். உண்மையில் இலங்கை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கு 100 சதவீதம் பங்களிப்பினை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் வீரர்களை நாடும் ஹத்துருசிங்க

இலங்கை அணியின் தொடர் பின்னடைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அணியை மறுசீரமைப்பதற்கும் முன்னாள் வீரர்களான சங்கக்கார, மஹேல மற்றும் முரளிதரனின் பங்களிப்பு முக்கியமானது என இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த முன்னாள் வீரர்களின் அனுபவங்களை எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனக்கு அதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் நான் இருக்கும்போது சங்கக்காரவின் உதவியை பல தடவைகள் பெற்றுக்கொண்டுள்ளேன். எனவே, இவ்வாறு முன்னாள் வீரர்களின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள தவறும் பட்சத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை வீணடிப்பதாக அமைந்துவிடும். எனவே சங்கா, மஹேல மற்றும் முரளி உள்ளிட்டோருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

குசல் மெண்டிஸின் வருகை

இலங்கை அணியில் உள்ள திறமையான வீரர்களில் குசல் மெண்டிஸும் ஒருவர். அவருடைய திறமையை இவ்வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான தொடர்களின் வாயிலாக கண்டுகொள்ள முடிந்தது என்றார்.

ஒரு நாள் மற்றும் T-20 அணித்தலைமை

இலங்கை அணியுடன் 2019 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் வரை மாத்திரம் என்னை ஒப்பந்தம் செய்யவில்லை. என்னுடைய பதவிக்காலம் 2020 வரை உள்ளது. அதேபோல ஒவ்வொரு போட்டித் தொடருக்கும் ஒவ்வொரு தலைவரை நியமித்தால் எனக்கும் அணியை கையாள்வது இலகுவாக இருக்கும். ஆனால் கீழ் மட்டத்தில் இருந்துதான் எமக்கு முன்னேறிச் செல்ல முடியும். எனவே அணித் தலைமை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தற்போது என்னிடம் எந்தவொரு தகவலும் கிடையாது.

பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்கள் பங்களாதேஷ் அணியுடன்…

அதேபோல இலங்கையில் உள்ள விளையாட்டு சட்டத்தின் பிரகாரம் அணியொன்றில் கடமையாற்றுகின்ற பயிற்றுவிப்பாளருக்கு அணியொன்றை தெரிவு செய்யவோ, பெயரிடவோ முடியாது. எனினும், என்னுடைய கருத்துக்களுக்கும் அவர்கள் செவிசாய்ப்பார்கள் என நான் கருகிறேன். அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளுக்கமைய இறுதி 11 வீரர்களை தெரிவுசெய்யும் போது என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

லசித் மாலிங்கவின் திடீர் பிரசன்னம்

பங்களாதேஷ் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் லசித் மாலிங்க இடம்பெறாமை குறித்து தெரிவுக்குழு தலைவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவருக்கு தற்போது எந்தவொரு போட்டிகளும் இல்லாத காரணத்தால் பந்துவீச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இன்று இங்கு வந்தார். அவருடைய முயற்சியை நான் மிகவும் விரும்புகிறேன். அதேபோல மாலிங்கவைப் போல எந்தவொரு வீரருக்கும் இங்கு வந்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உள்ளுர் போட்டிகளில் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

பங்களாதேஷ் போட்டித் தொடருக்கு இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. அதிலும் குறிப்பாக நாங்கள் முதலில் வெள்ளை நிறப் பந்தில் விளையாடவுள்ளோம். அதேபோல தற்போது உள்ளுர் பருவகாலப் போட்டிகள் சிவப்பு நிறப் பந்தில் நடைபெற்றுவருகின்றன. எனவே அது 4 நாட்கள் கொண்ட போட்டியாக இருப்பதால் பங்களாதேஷ் தொடருக்காக அறிவிக்கப்பட்ட குழாமில் இடம்பெற்ற வீரர்களை கழகங்களுக்காக விளையாட வேண்டாம் என அறிவித்தேன்.

வீரர்களுக்கான புதிய ஒழுக்க விதிமுறைகள்

வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் எதிர்காலத்தில் ஏற்படாது. யாருக்காவது பயிற்சிகளின் போது பாட்டு கேட்கவோ அல்லது பேஸ்புக் பார்க்கவோ விரும்பினால் பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டி ஏற்படும். கடந்த காலங்களில் அவர்கள் எவ்வாறு இருந்தது என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தற்போது எனக்கு தேவை என்ன என்பது தொடர்பில் அவர்கள் நன்கு அறிவர். எனவே எதிர்காலத்தில் இதன் மாற்றத்தை நன்கு உணரலாம் எனத் தெரிவித்தார்.

உளவியலாளரை உபயோகிக்கும் ஹத்துருசிங்க

வீரர்களுக்கு மத்தியில் சிறந்த மனோநிலையை கட்டியெழுப்பும் வகையில் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்டி தண்டர் அணிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய பிரிஸ்பேனைச் சேர்ந்த உளவியலாளர் வைத்தியர் பில் ஜொன்சியின் உதவியை இலங்கை அணிக்கு பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

என்னுடன் 4 வருடங்கள் இணைந்து பணியாற்றிய அவர், அவுஸ்திரேலிய ஒலிம்பிக் அணி மற்றும் பேஸ்போல் அணிக்காக சேவையாற்றியவர்.

2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க…

இதன்படி, எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து 10 நாட்கள் தங்கியிருந்து வீரர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கவுள்ளார். அதேபோல அவரின் உதவியை வருடத்திற்கு 4 தடவைகள் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணி தொடர்பில் ஹத்துருவின் நிலைப்பாடு

எனது முதல் சுற்றுப் பயணமாக பங்களாதேஷுக்கு இலங்கை அணியைக் கொண்டு செல்வது என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. அது மிகப் பெரிய சவாலாகவும் அமையவுள்ளது. ஏனெனில் எமது அணி திறமைக்கேற்ப சிறப்பாக இல்லை. ஆனால் அதுதொடர்பில் பேசுவதற்கு இது பொருத்தமான காலம் கிடையாது. ஊடகங்களுக்கு நல்லதை மாத்திரம் சொல்லக்கூடியவனாகவே நான் இருந்து வருகிறேன்.

அதேபோல, பங்களாதேஷ் அணி கடந்த 2 வருடங்களாக சொந்த மண்ணில் மிகவும் பலமிக்க அணியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதேபோல அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டுவரும் ஜிம்பாப்வே அணியும் இத்தொடரில் பங்கேற்பதும் சவால்தான். அத்துடன், எனக்கு கீழ் பணியாற்றிய ஹீத் ஸ்ட்ரீக் மற்றும் பங்களாதேஷ் அணியின் ஏனைய உதவி பயிற்றுவிப்பாளர்கள் மிகத் திறமையானவர்கள். எனவே இந்தத் தொடர் மிகவும் போட்டித்தன்மை மிக்க,  சவாலான தொடராக அமையும் என தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பயிற்சி முகாமில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளரான ருமேஷ் ரத்னாயக்க மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான திலான் சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததுடன், இன்றைய தினமும் இவ்விசேட பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ள இலங்கை அணி, முத்தரப்பு ஒரு நாள், 2 T-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.