இலங்கைத் தீவானது, திறமைமிக்க விளையாட்டு வீரர்களை அதிகம் கொண்டிருக்கின்ற போதிலும், அவர்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான வசதிகள் குறைவாகவே உள்ளது என இலங்கை வலைப்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் திலக்கா ஜினதாச தெரிவித்துள்ளார்.
“ நாங்கள் (இலங்கை) 2009ஆம் ஆண்டில் ஆசிய (வலைப்பந்து) சம்பியன் பட்டத்தினை வென்ற போது, ஆசிய நாடுகளுக்கான வலைப்பந்து தரவரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்பட்டோம். அதற்கு முன்னரும் 2005ஆம் ஆண்டில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தோம். 2009ஆம் ஆண்டின் பின்னர் ஆசிய சம்பியன்ஷிப் தொடரில் நாம் வெற்றியாளராக மிகவும் நெருங்கிய போதிலும் எமக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. மக்கள் கதைப்பது போன்று நாம் ஒன்றும் கீழே இறங்கிப் போய்விடவில்லை, நாம் இப்படியானதொரு நிலையை அடையக் காரணம் எமது நிர்வாகமும், முகாமைத்துவமும் தான் “ என ஜினதாச ThePapare.com இற்கு அளித்த நேர்காணலின் போது கூறியிருந்தார்.
தேசிய வலைப்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக திலகா ஜினதாச
இலங்கையை சர்வதேச மட்டத்தில் இரண்டு வகைப்..
“எங்களுக்கு நேர்ப்படையான நோக்கமோ அல்லது ஒரு இலக்கோ இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஜொலிப்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. புரூணையில், நாங்கள் பொதுவான ஒரு இலக்கினை மையமாகக் கொண்டு செயற்பட்டிருந்தோம். நான் இலங்கையினை புரூணையோடு (ஒப்பிட்டு) பார்க்கும் போது, வீராங்கனைகள் தேர்வு என்ற அடிப்படையில் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தேன். புரூணையில் 20 வீராங்கனைகள் மாத்திரமே இருப்பார்கள். அதிலிருந்து எனக்கு 12 வீராங்கனைகளை தெரிவு செய்வது மிகவும் இலகுவான ஒன்றாக காணப்படும். ஆனால், இலங்கையில் அவ்வாறு இருப்பதில்லை. திறமை கொண்டவர்களின் ஒரு பட்டாளமே இருக்கும். அதைக்கண்டு நானும் பிரம்மித்திருக்கின்றேன். அதிலிருந்து எனக்கு 12 பேரினை தெரிவு செய்வது மிகவும் சிரமம். எனவே, நாம் திறமைகளில் பின்தங்கியில்லை. இப்படியான நிலையில் இருப்பதற்கு எமது முகாமைத்துவமே காரணமாக இருக்கின்றது.“ என ஜினதாச இலங்கையில் வலைப்பந்து விளையாட்டில் திறமைகொண்டவர்கள் அதிகம் இருப்பதனை சுட்டிக்காட்டினார்.
மேலும் ஜினதாசவின் பொறுப்பு நீண்ட காலமாகவவோ அல்லது குறுகிய காலமாகவோ எதுவாக அமைந்த போதிலும், அதில் நல்ல அடைவுகளைப்பெறுவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் ஒன்று அவசியம் என்பதையும் உணர்த்தினார். புரூணை வலைப்பந்து அணி ஜினதாச பயிற்சியாளராக கடமையாற்றிய 7 வருடங்களில் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 ஆம் & 7 ஆம் இடங்களினைப்பெற்று> இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றது அப்படியான திட்டம் ஒன்றின் மூலமேயாகும்.
ஏனெனில் 2011ஆம் ஆண்டு ஜினதாச புரூணையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியினை பொறுப்பேற்ற போது, அந்நாடு சர்வதேச ரீதியில் (வலைப்பந்து தொடரொன்றில்) இறுதியாக 1993 ஆம் ஆண்டில் அரபூரா போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றி அதில் மோசமான தோல்வியினை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமைத்துவப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பின்னர், ஜினதாசவுக்கு அந்நாட்டு வலைப்பந்து அதிகாரசபை, வீராங்கனைகள் மற்றும் வலைப்பந்தோடு தொடர்பானவர்களுடன் பேச வேண்டி இருந்தது. அதோடு அப்போது நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் நல்ல முடிவுகள் கிடைத்திருந்தன. இது புரூணை அணிக்கு சர்வதேசத்தில் எதிர்காலம் உண்டு என்பதனை உணர்த்தியிருந்தது. இவற்றோடு ஆரம்ப நாட்களில் தனியொருவராக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜினதாசவின் கடின உழைப்பே, புரூணை நாட்டை இந்த விளையாட்டை நேர்மனப்பாங்குடன் நோக்க வைத்திருந்தது.
கிண்ணத்திற்கான இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள தர்ஜினி
இலங்கையின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை..
“எங்களுக்கு சில மாத பயிற்சிகளுடன் சர்வதேச போட்டித்தொடர் ஒன்றில் போய் விளையாட முடியாது. 2017 ஆம், 2016 ஆம் ஆண்டுகளுக்கான தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் புரூணை அணிக்கு பயிற்சி வழங்கியிருந்தேன். நான் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தினை உருவாக்கினேன். அதில் வீரர்கள், நிர்வாக குழுவினர் அனைவருக்கும் உரிய வேலைகள் தெளிவாக கூறப்படிருந்தது. இலங்கை அணிக்கும் ஒரு நீண்ட காலத் திட்டம் தேவைப்பபடுகின்றது. அது குறைந்தது இரண்டு வருடங்களை சரி கொண்டிருக்கும். எனினும், எமக்கு இன்னும் சில மாதங்களில் (2018 இல்) ஆசிய சம்பியன்ஷிப் தொடர் இருக்கின்றது. இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு நாம் வரவேண்டும். அப்போதே 2019 ஆம் ஆண்டு லிவர்புலில் (Liverpool) நடைபெறும் வலைப்பந்து உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற முடியும். “ எனக்கூறிய ஜினதாச, தனக்கு பாரிய பொறுப்புக்கள் இருப்பதை குறிப்பிட்டு காட்டி இருந்தார்.
“ எம்மைப் (இலங்கையினை) பொறுத்தவரை எங்களுக்கு ஒரு வருட பயிற்சி அவசியமில்லை. எனினும் 8 அல்லது 9 மாதங்கள் கட்டாயம் பயிற்சி தேவை.. 2009 ஆம் ஆண்டில், நான் 6 மாதங்கள் வரையிலேயே இலங்கைக்கு பயிற்சி வழங்கியிருந்தேன். எனக்கு வீராங்கனைகளின் ஆற்றல்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என நம்புகின்றேன். அனைத்தும் வலிமையிலும் நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் செயற்படுவதிலுமே இருக்கின்றது. எல்லாம் வலைப்பந்து சார்ந்ததாகவே இருக்க வேண்டும். ஆனால், அது இங்கு நடைபெற்றிருப்பதாக நான் காணவில்லை“ என குறிப்பிட்ட ஜினதாச இலங்கை வீராங்கனைகள் சர்வதேசத்தில் ஜொலிக்க செய்ய வேண்டிய விடயங்கள் என்ன என்பது குறித்து கூறினார்.
“ நாம் சர்வதேச மட்டத்துக்கு செல்லும் போது பருமனான மற்றும் உயரமான வீராங்கனைகளை கொண்டவாறு செல்ல வேண்டும். ஆனால், இவர்களின் அசைவும், இவர்கள் நடமாடும் எல்லையும் குறைவாக இருக்கும். இங்கேதான் வீராங்கனைகளது வலிமையும், நிலைமைகளுக்கு ஏற்ற விதத்தில செயற்படுவதும் இருக்கின்றது. “
இலங்கை வலைபந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர், இளம் வீராங்கனைகள் கொண்ட குழாத்தினைக் கண்டு வியப்படைந்த போதிலும் முன்னேற்றப்பட விடயங்கள் இன்னும் இருப்பதாக தெரிவித்தார்.
“வலிமையும், நிலைமகளுக்கு ஏற்றவாறு செயற்படும் தன்மையும் இவர்களிடம் குறைவாக இருக்கின்றது. நாம் நீண்ட காலத்திட்டத்துடன் கூடிய செயற்பாடுகளை செய்யும் போது எதிர்காலத்தில் சிறந்த வீராங்கனைகளாக இவர்களை நாம் பார்க்க முடியும். இதில் சிலர் 16 அல்லது 17 வயதுடையவர்களாக காணப்படுகின்றனர். இது சர்வதேச வலைப்பந்து போட்டிகளுக்கு பொருத்தமாக இருந்த போதிலும் இவர்களுக்கு வலிமையை அதிகரிப்பதற்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்குவது முக்கியமாகின்றது. ஏனெனில், இவர்களுக்கு மேலே துள்ளி கீழே வரும் போது முழங்காலிலும், கணுக்காலிலும் அடிக்கடி அழுத்தங்களை உணர வேண்டி இருக்கும். சரியான முறையில் இதற்கான பயிற்சிகள் வழங்கப்படாதவிடத்து இவர்கள் காயங்களினை சந்திக்க வேண்டி இருக்கும். சில உபாதைகள் அவர்களது விளையாட்டு வாழ்க்கையினையே முடித்துவிடக் கூடியவை.”
2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள்
இவ்வருடத்தை பொறுத்தமட்டில் தேசிய..
இன்னும் வீராங்கனைகள் இலங்கையில் தெரிவு செய்யப்படும் முறை அந்தளவுக்கு பொருத்தமாகவிருப்பதில்லை எனவும் ஜினதாச சுட்டிக்காட்ட தவறவில்லை.
“வளர்ந்த நாடுகளில் வலைப்பந்தாட்ட தொடர்கள் இருப்பதன் காரணமாக அங்குள்ள வீராங்கனைகள் எப்போதும் தயாரானவர்களாகவே இருப்பார்கள். ஆனால், அதோடு வீராங்கனைகள் தெரிவும் அங்கு நடைபெறும் தொடர்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். ஆனால், இலங்கையில் நடைபெறும் தெரிவில் ஒரு வீராங்கனை 15 நிமிடங்கள் விளையாட வேண்டும். குறிப்பிட்ட பயிற்சி நடைபெறும் நாள் வீராங்கனைக்கு சரியாக அமையவில்லை எனின், அவர் சரியான முடிவினை இந்த தெரிவில் காட்ட மாட்டார். அவுஸ்திரேலியா அவர்களது தேசிய வலைப்பந்து அணியினை அவர்களது தேசிய லீக் ஆட்டங்களின் பின்னரே அறிவிக்கின்றனர். எங்களுக்கும் ஒரு சரியான கட்டமைப்பு இருப்பின், நிறைய விடயங்களை நாமும் அடைய முடியும்.”
கடந்த வருடங்களில் ஜினதாச பயிற்சியாளராக விண்ணப்பித்தும் இரண்டு தடவைகள் அவர் நிராகரிப்பட்டிருந்தார். இதனால், ஜினதாச ஏமாற்றம் அடைந்தாலும் தற்போது தனக்கு சரியான தருணத்தில் தான் பொறுப்பு தரப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கின்றார்.
“ புதிய நிர்வாகத்தில், நான் தற்போதைய தலைவர் (த்ரிக்ஸி நாணயக்கார) மற்றும் செயலாளர் (ஜயந்தி ஜயசேகரம்) ஆகியோருடன் முன்னர் வேலை செய்த அனுபவத்தை கொண்டிருக்கிறேன். 2009ஆம் ஆண்டில் த்ரிக்ஸி தேசிய வலைப்பந்து அணியின் முகாமையாளராகவும், ஜயந்தி தேர்வுக்குழுவின் தலைவராகவும் இருந்தனர். “
“இருவரும் சிறப்பான வேலைகளைச் செய்கின்றனர். இரண்டு பேருக்கும் ஒரு நேரான இலக்கு இருக்கின்றது. ஏனெனில், இருவரும் இலங்கை வலைப்பந்து அணியின் முன்னாள் தலைவர்கள். நான் அவர்களுடன் இலகுவாக இணைந்து செயல்பட முடியும். இந்த விளையாட்டு மீதான விருப்பமும், பற்றும் அவர்களுக்கு அதிகம் உண்டு. “ எனக் கூறிய ஜினதாச தேசிய வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவரும், செயலாளரும் தனக்கு ஒத்துழைப்பாளர்களாக காணப்படுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.
“நிர்வாகத்தினால் தரப்படாத ஒத்துழைப்பே விளையாட்டு ஒன்றை மந்தமாக்கும். பயிற்றுவிப்பாளர்கள் சுயாதீனமான முறையில் செயற்பட வாய்ப்பு தரப்பட வேண்டும். அதோடு அவர்கள் இன்று விளையாட்டில் என்ன நடக்கின்றது என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களினையும் அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இலங்கை ஆசியாவில் சிறந்த வலைப்பந்து வீராங்கணைகளை கொண்டிருக்கின்றது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. “ என இறுதியாக கூறிய ஜினதாச, தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவுகள் மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.