கிரிக்கெட் உலகில் அண்மைக் காலமாக முன்னிலை பந்துவீச்சாளர்களாக வலம் வந்த இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில சுழல் பந்துவீச்சாளர்கள் பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருவதை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக குறித்த வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குரியாக மாறியதையும் காணமுடிந்தது.
இந்நிலையில், உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தாலும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. அதிலும் குறிப்பாக 90ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்த பந்துவீச்சாளராக விளங்கிய முரளிதரனுக்கு பந்தை வீசி எறிவதாக அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு சில நடுவர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தியிருந்ததுடன், அவருக்கு எதிராக பொய்யான செய்திகளையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த சம்பவம் நடைபெற்று சுமார் 22 வருடங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவ் வோ, 1995ஆம் ஆண்டு பொக்சிங் டே என்று அழைக்கப்படுகின்ற கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாள் நடைபெற்ற குறித்த போட்டியில் விளையாடிய வீரராக முரளிக்கு முகங்கொடுக்க நேரிட்ட அந்த சம்பவம் தொடர்பில் முதற்தடவையாக கருத்து வெளியிட்டார்.
இந்தியாவிலிருந்து சிறந்த வீரர்களாக செல்கின்றோம் – நிக் போதாஸ்
இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள இலங்கை அணி மிகவும் சிறந்த…
அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
”முத்தையா முரளிதரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே அவர் பந்தை வீசி எறிவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர்களான டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர். முத்தையா முரளிதரனின் பந்துவீச்சில் தவறுகள் இருப்பது அவதானிக்கப்பட்டிருப்பின் அது போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய பிரச்சினையாகும். எனினும், முரளிதரன் அத்தகைய சம்பவத்துக்கு முகங்கொடுத்தமையானது வீரரொருவர் முகங்கொடுக்க கூடாத துரதிஷ்டவசமான சம்பவம்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முரளிதரனை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கிலேயே அவர் பந்தைவீசி எறிவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். உண்மையில் அது வீரரொருவரை அகௌரவப்படுத்திய விடயமாகவே நான் கருதுகிறேன்.
முரளியை இவ்வாறு குற்றவாளியாக்குவதற்கு அவர்கள் போட்டிக்கு முன்னரே முடிவெடுத்திருக்கலாம். அதிலும் குறிப்பாக ஊடகங்கள் வாயிலாக இதற்காக பொய்யான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்த சம்பவத்தை என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், என்னைப் பொறுத்தமட்டில் முரளிதரனின் பந்துவீச்சு சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்திருந்தது. எனினும், முரளியின் உடற்கட்டமைப்பிலும், பந்துவீச்சிலும் வித்தியாசமான மாற்றம் தென்பட்டதுடன், அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் அவர் பந்துவீசியிருந்தார்.
எனவே அவர் விதிமுறைகளை மீறி பந்துவீசியிருந்தால் அதே பாணியில் மற்றுமொரு வீரருக்கு பந்துவீசியிருக்க முடியும். ஆனால் இதுவரை எந்தவொரு வீரரும் அவ்வாறு பந்துவீசவில்லை. ஆகவே இதன் மூலம் முற்றிலும் மாறுபட்ட முறையில் பந்துவீசுகின்ற திறமை முரளியிடம் காணப்பட்டமை உறுதியாகிவிட்டது.
மறுபுறத்தில் இருந்த ரொஸ் எமர்சன் நடுவராலும் முரளியின் பந்துவீச்சானது நோ- போல் என அறிவிக்கப்பட்டது. உண்மையில் அது விதிமுறைகளுக்கு உட்பட்ட பந்தாகவே அமைந்திருந்தது. எனவே அவரும் முன் ஆயத்தமாகவே இவ்வாறு மைதானத்தில் முரளியின் பந்தை நோ- போல் என அறிவித்திருக்கலாம் என நான் புரிந்துகொண்டேன்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற முரளி, வெளிநாடுகளில் இடம்பெற்ற டி20 லீக் போட்டிகளிலும் சில காலம் விளையாடியிருந்தார். அதன் பிறகு பயிற்றுவிப்பில் களமிறங்கிய அவர் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார்.
உண்மையான சகலதுறை வீரர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்?
தற்போதைய நாட்களில் கிரிக்கெட் விளையாட்டானது முழுதுமாக துடுப்பாட்ட…
இதேவேளை, கடந்த வருடம் இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக முத்தையா முரளிதரன் கடமையாற்றினார். பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு முரளிதரன் இலங்கை அணியின் இரகசியங்களை எதிரணிக்கு வழங்குவதாக இந்நாட்டு ஊடகங்கள் வாயிலாக பரவலாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டன.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முரளிதரன், ”இலங்கைக்காக நான் இறுதியாக விளையாடியது, 6 ஆண்டுகளுக்கு முன்னராகும். இலங்கை கிரிக்கெட்டோடு நான் இப்போது சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனது அறிவை, ஏனையோருடன் பகிரும் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலியாதான் முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றது என முதலில் குற்றம் சுமத்தியிருந்ததுடன், இறுதியில் அதே அவுஸ்திரேலியாதான் முரளியிடமிருந்து உதவியையும் பெற்றுக்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.