2018 FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்படும் அபாயம்

421
Image Courtesy - EPA

ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெறும் அரசியல் தலையீடு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் ஸ்பெயின் அணி 2018 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.  

ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அந்நாட்டு அரசு தொடர்ந்து தலையிட்டால் அடுத்த உலகக் கிண்ண போட்டியில் ஸ்பெயினுக்கு தடை விதிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.  

ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஏஞ்சல் மரியா வில்லார் ஊழல் குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் கடந்த ஜூலை தொடக்கம் இடைக்கால தலைவராக ஜுவான் லுவிஸ் லர்ரி செயற்பட்டு வருகிறார்.

FIFA கழக உலகக் கிண்ணம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரியல் மெட்ரிட் வசம்

எனினும் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட வாக்கெடுப்பு இன்னும் முன்னெடுக்கப்படவில்லை. அந்த பதவிக்கு ஸ்திரமான ஒருவரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்துடன் அந்நாட்டு அரசின் தேசிய விளையாட்டு கௌன்ஸில் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் FIFA வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் நிலைமை குறித்து கவலை வெளியிடும் கடிதம் ஒன்றை FIFA அனுப்பியதை எம்மால் உறுதி செய்ய முடியும். உறுப்பினராக இருக்கும் அனைத்து சங்கங்களும் தனது விவகாரங்களை சுதந்திரமாக கையாளவேண்டும் என்பதை அந்தக் கடிதத்தில் உணர்த்தப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.  

“சம்மேளனங்களின் உள்விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் வெளித்தலையீடுகள் இல்லை என்பதை அனைத்து சம்மேளனங்களும் உறுதி செய்ய வேண்டும். அடுத்த சில வாரங்களில் FIFA மற்றும் UEFA உறுப்பினர்கள் மெட்ரிட்டுக்கு பயணித்து அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு நடத்தும்” என்றும் FIFA அறிவித்துள்ளது.

சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் புதிய வாக்கெடுப்புக்குள் அரசின் விளையாட்டு திணைக்களம் அழுத்தம் கொடுப்பது தொடர்பிலேயே FIFA கவலை அடைந்திருப்பதாக ஸ்பெயின் செய்திப் பத்திரிகையான ‘எல் பயிஸ்’ குறிப்பிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற உலகக் கிண்ண அணிகளை குழு நிலை பிரிக்கும் நிகழ்வின் போது ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லர்ரி இது குறித்து FIFA உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

உலகக் கிண்ண போட்டியில் ஆடுவதில் இருந்து ஸ்பெயின் தடுக்கப்படும் ஆபத்து இருப்பதாக தான் கருதவில்லை என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் குறிப்பிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்தில் வெற்றி வாய்ப்பு அதிகம் கொண்ட அணியாகக் காணப்படுகிறது.

செரண்டிப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்த ரட்னம்

எனினும் கால்பந்து சம்மேளனங்களின் உள்விவகாரங்களில் அரசியல் தலையீடு இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் உலக கால்பந்து சம்மேளனத்தால் எந்த ஒரு தேசிய அணிக்கும் தடை விதிக்க முடியும்.  

அரசியல் தலையீடு குறித்த குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபரில் பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்திற்கு FIFA தடை விதித்ததோடு இதே குற்றச்சாட்டில் குவைட், சூடான் நாடுகளும் முன்னதாக FIFA வின் தடைக்கு உள்ளாயின.

குறிப்பாக இந்துனேசிய மத்திய அரசு அந்நாட்டு கால்பந்து சம்மேளன விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து அந்த நாடு உலகக் கிண்ண கால்பந்து தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்பதற்கு 2015 ஆம் ஆண்டு FIFA தடை விதித்தது.