டயலொக் ரக்பி லீக் முதல் சுற்றை வெற்றியுடன் முடித்த கண்டி கழகம்

232

டயலொக் ரக்பி லீக் இறுதி வாரப் போட்டியில், ஹெவலொக் அணியை 20-09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று, முதல் சுற்றை எந்த ஒரு தோல்வியையும் சந்திக்காது கண்டி கழகம் முடித்துக்கொண்டது.

டயலொக் ரக்பி போட்டிகளின், இறுதி வாரப் போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்டதும், விறுவிறுப்பான போட்டியாகவும் இப்போட்டி அமைந்தது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற கண்டி கழகமானது, மறுமுனையில் ஒரே ஒரு போட்டியில் தோல்வியுற்ற ஹெவலொக் கழகத்துடன் மோதிக்கொண்டது.

லீக் கனவை தொடர்ந்தும் உயிரோட்டத்துடன் வைத்துக்கொள்ள, ஹெவலொக் அணியானது  கண்டி அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைமையில், இப்போட்டி ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஹெவலொக் அணியானது தனது சொந்த மைதானத்தில் கண்டி அணிக்கு அழுத்தம் கொடுத்து ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடியது. கண்டி அணிக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்த பொழுதும் அவற்றை அவ்வணி தவறவிட்டது. மேலும் ரிச்சர்ட் தர்மபால மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, கண்டி அணி ஆரம்பம் முதலே பின்னடைவில் காணப்பட்டது.

கண்டி அணியின் ஓப் சைட் காரணமாக பெனால்டி வாய்ப்பை பெற்றுக்கொண்ட ஹெவலொக் அணியானது, போட்டியின் முதலாவது புள்ளியை பெனால்டி மூலமாக பெற்றுக்கொண்டது. ரீசா முபாரக் ஹெவலொக் அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (கண்டி 00 – 03 ஹெவலொக்)

கடற்படையை வீழ்த்தி கண்டி அணி தொடர்ந்தும் முதலிடத்தில்

தொடர்ந்து 50 மீட்டார் தொலைவில் இருந்து பெனால்டி உதையை சிறப்பாக உதைத்த துலாஜ் பெரேரா, ஹெவலொக் அணிக்கு மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (கண்டி 00 – 06 ஹெவலொக்)

தொடர்ந்து இரண்டு அணிகளும் பலவீனமான விளையாட்டை வெளிக்காட்டியதால் இரண்டு அணிகளாலும் எந்த ஒரு புள்ளியையும் பெற முடியவில்லை. எனினும் 40 ஆவது நிமிடத்தில் ஹெவலொக் அணியின் துஷ்மந்த ப்ரியதர்ஷனவிற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட, அதன் மூலம் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கண்டி அணி போட்டியின் முதலாவது புள்ளியை பெற்றுக்கொண்டது. நைஜல் ரத்வத்த கண்டி அணிக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.

முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 03 – 06 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

முதல் பாதியில் வெளிக்காட்டிய திறமையை இரண்டாம் பாதியில் வெளிக்காட்ட ஹெவலொக் அணி தவறியது. ஹெவலொக் அணியின் தவறினால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, விரைவாக பெற்றுக்கொண்ட ரிச்சர்ட் தர்மபால, பந்தை சிறிது முன்னெடுத்து சென்று பின் அலி மொஹமடிற்கு வழங்க, அலி கண்டி அணி சார்பாக முதல் ட்ரையை வைத்தார். நைஜல் கொன்வெர்சனை சிறப்பாக பூர்த்தி செய்தார். (கண்டி 10 – 06 ஹெவலொக்)

தொடர்ந்து, கண்டி அணியின் வேக நட்சத்திரமான அனுருத்த வில்வார மூலமாக பந்தை பெற்றுக்கொண்ட நைஜல் ரத்வத்த, ட்ரை கோட்டை கடந்து கண்டி அணி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். எனினும் நைஜல் இலகுவான கொன்வெர்சனை தவறவிட்டார். (கண்டி 15 – 06 ஹெவலொக்)

இறுதியாக பல முயற்சிகளின் பின்னர் ஹெவலொக் அணியினால் போட்டி நிறைவடைய சற்று முன்னராக 3 புள்ளிகளையே மேலதிகமாகப் பெற முடிந்தது. ரீசா முபாரக் 46 மீட்டர் தொலைவில் இருந்து அபாரமாக கம்பத்தின் நடுவே உதைத்தார். எனினும் வெற்றியை சுவீகரித்துக்கொள்ள ஹெவலொக் அணிக்கு புள்ளிகள் போதுமானதாக காணப்படவில்லை. (கண்டி 15 – 09 ஹெவலொக்)

கடற்படை அதிர்ச்சி கொடுத்த CH&FC : தொடர் தோல்விக்கு முடிவு கட்டிய CR&FC

போட்டியின் 80ஆவது நிமிடத்தில் கண்டி அணி ரிச்சர்ட் தர்மபால மூலமாக மேலும் ஒரு ட்ரை வைத்ததன் மூலம் கண்டி அணி தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது. ஹெவலொக் அணிக்கு இப்போட்டியில் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டாலும், சில தவறுகள் காரணமாக ஹெவலொக் அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

முழு நேரம் : கண்டி விளையாட்டுக் கழகம் 20 – 09 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – ஷெஹான் பதிரன (கண்டி விளையாட்டுக் கழகம்)

புள்ளிகள் பெற்றோர்

கண்டி விளையாட்டுக் கழகம் – அலி மொஹமட் 1T, நைஜல் ரத்வத்த 1T 1C 1P, ரிச்சர்ட் தர்மபால 1T

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் – ரீசா முபாரக் 2P, துலாஜ் பெரேரா 1P