யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் மற்றும் கொழும்பு, கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையில் பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியின் இம்முறை போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
இந்தப் போட்டி சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (13) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.
அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களான கபில்ராஜ் மற்றும் அபினாஷ் ஆகியோரது அபாரப் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் கொழும்பு தரப்பினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர்.
வானவேடிக்கை நிகழ்த்திய ரோஹித் சர்மாவின் உலக சாதனைகள்
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில்…
இதன் காரணமாக புனித தோமியர் கல்லூரி அணி 62 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. பின்வரிசை வீரராக வந்த மன்தில விஜேரத்ன மாத்திரம் இறுதிவரை போராடி 123 பந்துகளை சந்தித்து ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களைப் பெற்றார்.
சென் ஜோன்ஸ் அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் அபினாஷ் 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், வலது கை வேகப்பந்து வீச்சாளர் கபில்ராஜ் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த சென் ஜோன்ஸ் கல்லூரியினராலும் எதிரணியின் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் போனது. இதனால் அவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்கனை மாத்திரமே பெற்றனர்.
அவ்வணி சார்பாக ஜதுசன் (32) மாத்திரமே 20 ஓட்டங்களைக் கடந்து அணிக்காக தனி ஒருவராகப் போராடினார். பந்து வீச்சில் புனித தோமியர் அணிக்காக சனென் பெர்னாண்டோ, தெவின் மற்றும் அசாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
தொடர்ந்து 43 ஓட்டங்கள் முன்னிலையில் இன்றைய இரண்டாவது நாளில் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த புனித தோமியர் வீரர்கள் முதல் இன்னிங்சை விடவும் மோசமான ஆட்டம் ஒன்றையே வெளிப்படுத்தினர். இதனால் 54 ஓவர்கள் முடிவில் அவர்களால் 97 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
அவ்வணிக்காக மனிஷ ரூபசிங்க மாத்திரம் 26 ஓட்டங்களைப் பெற, பந்து வீச்சில் ரதுசன் 5 விக்கெட்டுக்களைப் பதம் பார்த்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற…
இதன் காரணமாக சென் ஜோன்ஸ் கல்லுரிக்கு 140 ஓட்டங்கள் வெற்றி இலக்காக வழங்கப்பட்டது. எனினும் அவ்வணிக்கு ஆரம்பம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது.
ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றிருந்த வேளையில் முதல் 3 விக்கெட்டுக்களையும் இழந்த யாழ் வீரர்களுக்கு தோல்விக்கான வாய்ப்புக்களே அதிகமாக இருந்தன. எனினும் மத்திய வரிசையில் வந்த ஜதுசன், தினோசன் மற்றும் முதல் இன்னிங்ஸ் பந்து வீச்சில் அசத்திய அபினாஷ் ஆகியோரது ஓரளவு நிதானமான ஆட்டத்தினால் இன்றைய போட்டி நேர முடிவின்போது 41 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 128 (62 ஓவர்கள்) – மன்தில விஜேரத்ன 69*, அபினாஷ் 35/6, K. கபில்ராஜ் 31/3
சென் ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 85 (33 ஓவர்கள்) – V. ஜதுசன் 32, சனென் பெர்னாண்டோ 09/3, தெவின் எரியகமகே 14/3, மொஹமட் அசாம் 15/3
புனித தோமியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 97 (33 ஓவர்கள்) – மனிஷ ரூபசிங்க 26, ரதுசன் 26/5, கபில்ராஜ் 16/2
சென் ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 88/6 (41 ஓவர்கள்) – ஜதுசன் 25, தினோசன் 21*, அபினாஷ் 20, சென்னொன் பெர்னாண்டோ 27/4
போட்டி முடிவு – போட்டி சமநிலையடைந்தது.