இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் l) கால்பந்து தொடரின் B குழுவுக்கான லீக் போட்டியொன்றில் ரட்னம் விளையாட்டுக் கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் செரண்டிப் கால்பந்துக் கழகத்தை வெற்றிகொண்டு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.
இத்தொடரில் கடும் போட்டி நிலவும் குழுவாக உள்ள B குழுவில் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் இருந்த இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ரட்னம் அணியின் சொந்த மைதானமாக கொழும்பு CR&FC மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ரட்னம் அணிக்கு எதிரணியின் பெனால்டி பெட்டிக்கு வெளியில் வலது புறத்தில் ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அதனை இலங்கை 19 வயதின் கீழ் தேசிய அணி வீரர் மொஹமட் அமான் பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்து செரண்டிப் பின்கள வீரர்களால் ஹெடர் மூலம் மைதானத்தின் உள்பகுதிக்கு திசை திருப்பப்பட்டது.
பலம் மிக்க சென் மேரிசை வீழ்த்தியது செரண்டிப் அணி
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (டிவிஷன் l) தொடருக்கான மற்றொரு போட்டியில் யாழ் மண்ணின் பலம்…
போட்டியின் 16ஆவது நிமிடத்தில் வலதுபுற கோணர் திசையில் இருந்து செரண்டிப் வீரர் சிமொன் உள்ளனுப்பிய பந்தை சக வீரர் அப்துலாய் கோல் நோக்கி அடித்தார். அந்தப் பந்து கம்பங்களின் இடது புறத்தால் வெளியே சென்றது.
அடுத்த நிமிடத்தில் ஒரு திசையில் இருந்து அமான் உள்ளனுப்பிய பந்து முன்களத்தில் தனியே இருந்த ஒலவாலேயின் கால்களுக்கு செல்ல, அவர் பந்தை இலகுவாக கோலுக்குள் செலுத்தி ரட்னம் அணியை முன்னிலைப்படுத்தினார்.
28ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து ஆசிர் உள்ளனுப்பிய பந்தை செரண்டிப் அணித் தலைவர் ராஜ் ஷெரோன் பெற்று, சற்று முன்னே எடுத்துச் சென்று கோல் நோக்கி உதைகையில் ரட்னம் கோல் காப்பாளர் ஷெஹான் பந்தை தடுத்தார்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் பெனால்டி எல்லைக்கு அண்மையில் இருந்து செரண்டிப் வீரர் ஆசிர் வேகமாக உயர்த்தி உதைந்த பந்து ரட்னம் தரப்பினரின் கோலின் மேல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
முதல் பாதியில் செரண்டிப் பின்கள வீரர்கள் தொடர்ச்சியாக காண்பித்த முறையற்ற விளையாட்டுக்களினால் ரட்னம் அணியினருக்கு பல ப்ரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும், அவற்றில் எதுவும் சிறந்த முறையில் அவர்களுக்கு பலன் கொடுக்கவில்லை.
முதல் பாதியின் மேலதிக நேரத்தில் செரண்டிப் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது ஹேமன்த பண்டாரகொட உதைந்து உள்ளனுப்பிய பந்தை அவ்வணியின் நிஷான் கோல் நோக்கி உதைந்தார். எனினும் பந்தை ஷெஹான் இலகுவாகப் பிடித்தார்.
அடுத்த நிமிடம் ரட்னம் அணியின் மத்திய களத்தில் கிடைத்த ப்ரீ கிக்கை செரண்டிப் வீரர் ரியாஸ் மொஹமட் பெற்றார். அவர் கோலை இலக்கு வைத்து உதைந்த பந்து கோலை நோக்கி சென்றுகொண்டிருக்கையில் ரட்னம் கோல் காப்பாளர் ஷெஹான் சிறந்த முறையில் பாய்ந்து பந்தை வெளியே தட்டிவிட்டார்.
முதல் பாதி: செரண்டிப் கால்பந்துக் கழகம் 0 – 1 ரட்னம் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதியின் முதல் முயற்சியாக ரட்னம் வீரர் முஷர்ரப் வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்தை, செரண்டிப் கோல் காப்பாளர் நஜான் வெளியே தட்டினார்.
செரண்டிப் அணியின் முதல் முயற்சியாக ரியாஸ் உயர்த்தி உதைந்த பந்தை ஹேமன்த கோல் நோக்கி ஹெடர் செய்தார். எனினும் பந்து கம்பங்களுக்கு வெளியால் சென்றது.
ஆட்டத்தின் 55 நிமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் செரண்டிப் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை அணித் தலைவர் ஷெரோன் பெற்றார். அவர் கோல் நோக்கி உதைந்த பந்து அனைத்து தடுப்பு வீரர்களுக்கும் மேலால் சென்று கோலுக்குள் இறங்கியது. இதன்போது மிக வேகமாக வந்த பந்தை பிடிப்பதற்கு முயற்சி மேற்கொண்ட கோல் காப்பாளர் ஷெஹான் அசைவதற்குள் பந்து கம்பங்களுக்குள் புகுந்தது. இதனால் ஆட்டம் சமநிலையடைந்தது.
UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள்
உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் மோதும் சுற்றுக்கான போட்டிகள் விபரம் இன்று (11) வெளியானது.
மெலும் 15 நிமிடங்கள் கடந்த நிலையில், ரட்னம் அணிக்கும் செரண்டிப் வீரர்களுக்கு கிடைத்தது போன்றே ஒரு ப்ரீ கிக் கிடைத்தது. அந்த வாய்ப்பின்போது மொஹமட் இபாம் வேகமாக உதைந்த பந்து செரண்டிப் அணியின் கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு மீண்டும் மைதானத்திற்குள் வந்தது.
73ஆவது நிமிடத்தில் செரண்டிப் வீரர்களிடையேயான சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் கோலுக்கு அண்மையில் இருந்த சிமொனிடம் பந்து வந்தது. எனினும், அவரால் பந்தை சிறந்த முறையில் தன்னகப்படுத்த முடியாமல் போனதால், பந்து எதிரணியின் பின்கள வீரர்களால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் ரட்னம் அணிக்கு மாற்று வீரராக வந்த சபீர் மிக வேகமாக பல பின்கள வீரர்களைக் கடந்து சென்று கோல் நோக்கி பந்தை அடிக்கும்பொழுது கோல் காப்பாளர் நஜான் பந்தைத் தடுத்தார்.
ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் ரட்னம் முன்கள வீரரை செரண்டிப் கோல் காப்பாளர் முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக ரட்னம் அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த உதையைப் பெற்ற ஒலவாலே கோலின் வலது புறத்தினால் பந்தை உள்ளே செலுத்தி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்து அணியை மீண்டும் முன்னிலைப்படுத்தினார்.
அதன் பின்னர் எஞ்சிய 12 நிமிடங்களுக்குள்ளும் அணிக்கான அடுத்த கோலைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தும் முயற்சியுடன் செரண்டிப் வீரர்கள் மிக வேகமாக செயற்பட்டனர். எனினும், அவர்களது பந்துப் பரிமாற்றங்கள் சிறந்த நிறைவுகளைக் கொடுக்காததன் காரணமாக கோல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மறுமுனையில் ரட்னம் வீரர்கள் அணிக்கான அடுத்த கோலுக்கான முயற்சியுடன்கூடிய தடுப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் செரண்டிப் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை ரியாஸ் பெற்றார். அவர் உதைந்த பந்தும் கோலுக்கான வாய்ப்பை உருவாக்காத நிலையில் ஆட்டம் நிறைவடைந்தது.
எனவே, இரண்டு பாதிகளிலும் ஒலவாலேயினால் பெற்ற தலா ஒரு கோலுடன் ரட்னம் விளையாட்டுக் கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இந்த லீக் சுற்றில் மேலும் ஒரு போட்டி எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: செரண்டிப் கால்பந்துக் கழகம் 1 – 2 ரட்னம் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
செரண்டிப் கால்பந்துக் கழகம் – ராஜ் ஷெரோன் 56’
ரட்னம் விளையாட்டுக் கழகம் – O ஒலவாலே 17’ & 78’
மஞ்சள் அட்டை
செரண்டிப் கால்பந்துக் கழகம் – மொஹமட் நஜான் 77’
ரட்னம் விளையாட்டுக் கழகம் – O ஒலவாலே 79’