ஒருவரின் உண்மையான தோல்வி என்பது, அவர் விருப்பம் கொண்ட விடயத்தில் எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதே, அந்தவகையில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தோல்விகளால் துவண்ட இலங்கை அணிக்கு, முயற்சி செய்தால் எவ்வாறான விடயங்களையும் சாதிக்க முடியும் என்பதற்குரிய மனவலிமையை தந்துள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தமது அயல் நாட்டோடு இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என பறிகொடுத்திருப்பினும், அத்தொடரில் இளம் இலங்கை வீரர்களின் நேரான அணுகுமுறை இழந்த தங்களது பெருமைகளை மீட்டுக் கொள்ள நீண்டகாலம் எடுக்கப் போவதில்லை என்பதையும் காட்டி நிற்கின்றது.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க இம்மாதம் நியமனம்
இதன் அடிப்படையில் மிகவும் பலம்மிக்க இந்தியாவுடன் இலங்கை ஞாயிற்றுக்கிழமை (10) தரம்சாலாவில் ஆரம்பமாகும் ஒரு நாள் போட்டியோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரொன்றில் மீண்டும் மோதுகின்றது.
வரலாறு
இலங்கை அணி ஒரு நாள் போட்டிகள் விளையாட ஆரம்பித்து நான்கு வருடங்களின் பின்னரே (அதாவது 1979 ஆம் ஆண்டிலேயே) இந்திய அணியுடன் முதலாவது தடவையாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருந்தது.
அன்று தொடக்கம் இன்று வரை இரண்டு அணிகளும் 155 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. இதில் 88 போட்டிகளில் இந்திய அணி தமது ஆதிக்கத்தைக் காட்ட இலங்கை 55 போட்டிகளிலேயே வெற்றி பெற்றிருக்கின்றது. ஒரு போட்டி சமநிலைக்கு வர, 11 போட்டிகள் எந்த முடிவுமின்றி கைவிடப்பட்டிருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரொன்றை இறுதியாக இலங்கை அணி 1997 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றியிருந்தது. அத்தோடு இதுவரை இந்திய மண்ணில் எந்தவொரு ஒரு நாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இரண்டு அணிகளும், இலங்கையின் சொந்த மண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதியிருந்தன. இந்த ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என இலங்கை அணியை வைட் வொஷ் செய்து கைப்பற்றியிருந்தது.
எனவே இறுதியாக இலங்கை அணி அடைந்த தோல்விகளுக்கு பதில் தர நடைபெறப்போகும் ஒரு நாள் தொடர் இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை அணி
டெஸ்ட், T-20 போட்டிகளை ஒரு ஓரத்தில் வைத்தாலும் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகள் இலங்கை அணிக்கு மிகவும் கொடூரமாக அமைந்திருந்தது. 21 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கும் இலங்கை அணி, இவ்வருடத்தில் 4 வெற்றிகளை மாத்திரமே பெற்றிருக்கின்றது.
இதில் இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பெற்ற மூன்று வைட்வொஷ் தொடர் தோல்விகள் அடங்குகின்றன. இறுதியாக தாம் விளையாடிய 12 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி ஒருநாள் தரவரிசையில் தற்போது எட்டாம் இடத்தில் காணப்படுகின்றது. இவ்வாறான களநிலவரங்கள் இலங்கை கிரிக்கெட் அணியில் பலமாற்றங்கள் ஏற்பட வழிவகைகள் செய்திருந்தது. அந்தவகையில், இலங்கை அணி இந்தியாவுடனான இந்த ஒரு நாள் தொடரில் புதிய அணித் தலைவரான திசர பெரேராவின் தலைமையின் கீழ் செயற்பட இருப்பது குறிப்பிடத்தக்கது
சகல துறை வீரரான பெரேராவுக்கு தலைமைத்துவப் பதவி வழங்கப்பட்டுள்ளதால் இலங்கையின் முன்னாள் தலைவர் உபுல் தரங்கவுக்கு அழுத்தம் எதுவுமின்றி தனது தரப்பின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்த எதிர்பார்க்க முடியும். இந்த வருடத்தில் இலங்கை சார்பாக 47.77 என்ற சராசரியுடன் அதிக ஓட்டங்கள் (860) குவித்த வீரராக தரங்க காணப்படுகின்றார். சனத் ஜயசூரியவின் காலத்தில் இருந்து இலங்கை அணியில் இருக்கும் தரங்க இந்திய அணிக்கு எதிராக அதிக அனுபவம் கொண்ட வீரராகவும் இருக்கின்றார். தரங்க ஒரு நாள் போட்டிகளில் வாழ்நாளில் பெற்றுக் கொண்ட மொத்த ஓட்டங்களில் 17 சதவீதமானவை இந்தியாவுக்கு எதிராக பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு
எனவே, இலங்கை அணிக்கு இந்த ஒரு நாள் தொடரில் துருப்பு சீட்டு துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவே ஆவார்.
தரங்க பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரிலும் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்கள் குவித்த வீரராவார்.
இலங்கை அணியின் மத்திய வரிசையை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தமது காயங்களிலிருந்து மீண்டு, மீண்டும் குழாமில் உள்வாங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இவர்களோடு சேர்த்து இலங்கை அணிக்கு மேலும் வலுச்சேர்க்க இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர். இதில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த வருடம் இலங்கை அணிக்காக 52.50 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் ஓட்டங்கள் சேர்த்திருக்கின்றார்.
இந்திய அணியுடன் இறுதியாக நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் மெதிவ்ஸ் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்கள் (192) சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
மெதிவ்சுடன் சேர்த்து நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணிக்கு பெறுமதி சேர்க்க கூடிய மிக முக்கிய வீரராவார். இந்த வருடத்தில் 770 ஓட்டங்களை ஒரு நாள் போட்டிகளில் பெற்றிருக்கும் திக்வெல்ல, அண்மைய ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பதிவைக் காட்டாது போயினும் இந்த ஒரு நாள் தொடரில் அதிலிருந்து மீள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு இலங்கை அணிக்கு இன்னும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்க, லஹிரு திரிமான்ன, பகுதி நேர துடுப்பாட்ட வீரரான திசர பெரேரா ஆகியோர் இருப்பது மேலும் பலம் சேர்ப்பதாகும்.
இலங்கை அணியின் பந்துவீச்சை எடுத்து நோக்கும் போது, அணித் தலைவர் திசர பெரேரா, சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் போன்ற வீரர்களுடன் இணைந்து வேகப்பந்துவீச்சுத்துறையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிகமாக மெதிவ்ஸ் பந்து வீசினால் அது இலங்கைக்கு உதிரி ஆதரவாக அமையும்.
இலங்கை அணி அனுபவம் குறைந்த சுழற்பந்து வீச்சாளர்களுடனேயே இந்திய அணியை எதிர்கொள்கின்றது. எனினும், இந்திய அணியுடன் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில், மொத்தமாக 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அகில தனஞ்சய இந்திய அணியை இம்முறையும் மிரட்டுவார் என்பதற்கு ஆதரமாகக் கொள்ள முடியும்.
“நாங்கள் எங்களது நம்பிக்கையை இழந்திருந்தோம், உங்களுக்கு எமது வீரர்கள் பயிற்சி ஆட்டங்களின் போது செய்வதை வந்து பார்க்க முடியுமாயின் நீங்கள் பிரம்மித்துப் போவீர்கள். இங்கு செய்வதையே நாங்கள் மைதானத்திலும் வெளிப்படுத்துவோம் எனின், அது வித்தியாசமான ஒரு அணியை உங்களுக்குக் காட்டும். என்னுடைய சொந்தக் கருத்துப்படி நாங்கள் தொடர்ச்சியாக எமது தன்னம்பிக்கைகளை இழந்துவிட்டோம். இந்த விடயத்தையே நாம் மாற்றி முன்னேற வேண்டும்“ என இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா, வீரர்கள் இந்த ஒரு நாள் தொடரில் முன்னேற்ற வேண்டிய முக்கியமான விடயம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அதிரடி மாற்றங்கள்
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி
நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்ன, உபுல் தரங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, சதீர சமரவிக்ரம/குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா (அணித்தலைவர்), சுரங்க லக்மால், நுவன் பிரதீப், அகில தனஞ்சய
இந்திய அணி
ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து அவர்கள் பங்குபற்றிய ஏனைய அனைத்து ஒரு நாள் தொடர்களும் (சம்பியன் கிண்ணம் தவிர்ந்த) மிகவும் வெற்றிகரமாகவே அமைந்திருந்தது. சம்பியன் கிண்ணத் தொடரை அடுத்து இந்திய அணி தாம் பங்குபற்றிய இறுதி நான்கு ஒரு நாள் தொடர்களையும் கைப்பற்றியிருக்கின்றது. இப்படியாக அதி வலுவான நிலையில் காணப்படும் இந்திய அணி, இந்த ஒரு நாள் தொடரிலும், T-20 தொடரிலும் அதிக வேலைப்பளு கருதி அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கியுள்ளது. இதனால் இந்திய அணியை ரோஹித் சர்மா தலைமை தாங்குகின்றார்.
கோஹ்லி இந்திய அணியில் இல்லாவிட்டாலும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை பலம் குன்றியதாக மாறிவிட்டதாகக் கருதிவிட முடியாது. இலங்கை அணியை இந்தியா சொந்த மண்ணில் வைத்து 5-0 என வைட் வொஷ் செய்த ஒரு நாள் தொடரின் பின்னர் பலமிக்க இரண்டு அணிகளுடான தொடர்களில் (அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) விளையாடியிருக்கின்றது. அந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்றக் காரணமாக அமைந்த ரோஹித் சர்மா இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரோடு சேர்த்து 772 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இந்திய அணியின் துடுப்பாட்டத்துக்கு சர்மா முதுகெலும்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மாவோடு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவானும் இலங்கை அணிக்கு அபாயமாக இருக்கக் கூடிய மற்றுமொரு வீரர் ஆவார். இலங்கை அணிக்கு எதிராக 67.91 என்ற ஓட்ட சராசரியை தவான் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வரிசையைப் பலப்படுத்த மஹேந்திர சிங் தோனி, அஜிங்கியா ரஹானே, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்களை இந்திய அணி கொண்டுள்ளது.
வேகப்பந்துவீச்சாளர்களையே பெரிதும் நம்பியிருக்கும் இந்திய அணிக்கு ஜஸ்பிரிட் பும்ரா மிகவும் முக்கியமான ஒருவர், இலங்கை அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் பும்ரா மொத்தமாக 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அத்தோடு, பகுதிநேர வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா புவ்னேஸ்வர் குமாருடன் இணைந்து இந்திய அணிக்கு மேலும் பலம் சேர்க்கக் கூடிய ஒருவர் ஆவார்.
யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்றவர்கள் இந்திய அணிக்கு சுழல் வீரர்களாக பங்களிப்பு வழங்குவதை எதிர்பார்க்க முடியும்.
எதிர்பார்க்கப்படும் இந்திய அணி
ரோஹித் சர்மா(அணித்தலைவர்), சிக்கர் தவான், அஜிங்கியா ரஹானே, ஹர்திக் பாண்டியா, மஹேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவ்னேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்
இலங்கை – இந்தியா ஒரு நாள் தொடர் அட்டவணை
- முதலாவது ஒரு நாள் போட்டி – டிசம்பர் 10 – தர்மசலா – காலை 11.30 மணி
- இரண்டாவது ஒரு நாள் போட்டி- டிசம்பர் 13 – மொஹாலி – காலை 11.30 மணி
- மூன்றாவது ஒரு நாள் போட்டி – டிசம்பர் 17 – விசாகப்பட்டிணம் – பகல் 1.30 மணி