சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி, இலங்கை மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர்களின் போராட்டத்தினால் வெற்றி தோல்வியின்றி சமநிலை அடைந்துள்ளது. எனினும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.
டெல்லி பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நிறைவின்போது, தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இடைநிறுத்திக்கொண்ட இந்திய அணி இலங்கைக்கு 410 ஓட்டங்களினை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்திருந்தது.
கடினமான இந்த இலக்கை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கியிருந்த இலங்கை நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 16 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 31 ஓட்டங்களுடன் தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது.
>> நான்காம் நாள் ஆட்ட முடிவு – சவலான இலக்கினை நோக்கி ஆடும் இலங்கை அணி தடுமாற்றத்தில்
களத்தில் தனன்ஞய டி சில்வா 13 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் ஓட்டமேதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்டத்தின் இன்றைய இறுதி நாளில் வெற்றி பெற 379 ஓட்டங்கள் தேவைப்பட்டவாறு பாரிய பொறுப்புக்களைச் சுமந்த இலங்கை வீரர்கள் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்தனர்.
இன்றைய நாளுக்கான ஆட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்துக்குள்ளேயே இலங்கை அணி தமது முதல் விக்கெட்டாக அஞ்செலோ மெதிவ்சினைப் பறிகொடுத்தது. ரவிந்திர ஜடேஜாவின் சுழலினை எதிர்கொண்ட மெதிவ்ஸ் அஜிங்கியா ரஹானேவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
மெதிவ்சின் விக்கெட்டினை அடுத்து போட்டி இந்திய அணிக்கு சாதமாகிய தருணத்தில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் வலுவான இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளமிடத் தொடங்கினர். இவர்களது முயற்சி வெற்றியளிக்க போட்டியின் மதிய போசண இடைவேளை வரை இலங்கையின் எந்த விக்கெட்டுக்களையும் இந்தியாவுக்கு வீழ்த்த முடியாமல் போயிருந்தது.
இலங்கை டெஸ்ட் அணிக்கு நீண்ட காலத்தின் பின்னர் திரும்பிய தனன்ஞய டி சில்வா, மதிய உணவுக்கு முன்பாக அரைச்சதம் கடந்து சிறப்பாக செயற்பட்டிருந்தார்.
டெல்லி காற்றுமாசினால் மைதானத்திலிருந்து வெளியேறிய இலங்கை வீரர்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான…..
மதிய போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் சந்திமால் மற்றும் சில்வா ஆகியோர் ஐந்தாம் விக்கெட்டுக்காக உருவாக்கிய உறுதியான இணைப்பாட்டம் ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழலால் தகர்க்கப்பட்டது.
இலங்கையின் ஐந்தாம் விக்கெட்டாக அணித் தலைவர் தினேஷ் சந்திமால் வித்தியாசமான விதத்தில் போல்ட் செய்யப்பட்டிருந்தார். சில்வாவுடன் இணைந்து 112 ஓட்டங்கள் வரையில் ஐந்தாம் விக்கெட்டுக்காகப் பகிர்ந்த சந்திமால் 36 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.
சந்திமாலின் விக்கெட்டினை அடுத்து இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய ரோஷென் சில்வா, தனன்ஞய டி சில்வாவுடன் கைகோர்த்து நிதானமான முறையில் அணிக்கு ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார்.
இந்த இரண்டு வீரர்களினதும் கட்டுப்படான இணைப்பாட்டம், இந்திய அணியினை போட்டியின் வெற்றியில் இருந்து தூரமாக்கத் தொடங்கியது. இந்த நிலையில் இலங்கை அணிக்காக தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தினை தனன்ஞய டி சில்வா பெற்றுக்கொண்டார்.
சில்வா இந்த சதத்தின் மூலம், டெஸ்ட் போட்டியொன்றின் நான்காம் இன்னிங்சில் இலங்கை சார்பாக சதம் கடந்த ஒன்பதாவது வீரர் என்னும் பதிவினையும் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், துரதிஷ்டவசமாக காலில் வலி ஒன்றினை உணர்ந்த சில்வாவுக்கு தொடர்ந்து துடுப்பாட முடியாமல் போயிருந்தது. இதனால் மைதானத்தினை விட்டு சில்வா வெளியேறினார்.
தனன்ஞய டி சில்வா இப்போட்டியில் 219 பந்துகளினை எதிர்கொண்டு 15 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 119 ஓட்டங்களினை குவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை ஒரு நாள் குழாம் அறிவிப்பு
இம்மாதம் 10ஆம் திகதி இந்தியாவின் தர்மாசாலாவில் ஆரம்பமாகவுள்ள..
இதனையடுத்து ரோஷென் சில்வா, நிரோஷன் திக்வெல்லவுடன் இணைந்து இலங்கை அணிக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கத் தொடங்கினார். இவர்களது இணைப்பாட்டத்தினை (94*) தகர்த்து இலங்கையின் மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்ற இந்தியாவினால் முடியாத நிலையில் போட்டி சமநிலை அடைந்தது.
இலங்கை அணியானது போட்டி சமநிலைக்கு வரும் போது, 103 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களினை பெற்றிருந்தது.
போராட்டம் மிகுந்த இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தனது கன்னி டெஸ்ட் அரைச் சதத்தினை கடந்த ரோஷென் சில்வா 154 பந்துகளை எதிர்கொண்டு 11 பெளண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களோடும், நிரோஷன் திக்வெல்ல 44 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காமல் நின்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் இந்த இன்னிங்சில் ரவிந்திர ஜடேஜா 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருதினையும், தொடர் நாயகன் விருதினையும் இப்போட்டியில் அபார இரட்டைச் சதம் விளாசிய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.
இரண்டு அணிகளுக்கும், இடையிலான டெஸ்ட் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகின்றது.
ஸ்கோர் விபரம்
போட்டி முடிவு – போட்டி சமநிலை அடைந்தது