ஆஷஸ் 2017/2018 பருவகாலத்திற்கான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 120 ஓட்டங்களால் இங்கிலாந்து அணியை வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடரில் 2-0 எனும் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பகலிரவுப் போட்டியாக அவுஸ்திரேலியாவின் அடிலைட் ஓவல் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமானது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 எனும் கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் இரு அணிகளும் களமிறங்கின.
இலகு வெற்றியுடன் ஆஷஸ் தொடரை ஆரம்பித்த அவுஸ்திரேலியா
தற்பொழுது நடைபெற்று வரும் 2017/2018 ஆண்டு..
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட் இழப்பிற்கு 442 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. அவுஸ்திரேலிய அணி சார்பாக சோன் மார்ஷ் ஆட்டமிழக்காது 126 ஓட்டங்களையும், டிம் பெய்ன் 57 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் கிரேக் ஓவர்டன் 3 விக்கெட்டுக்களையும், ஸ்டுவட் ப்ரோட் 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் க்றிஸ் வோக்ஸ் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சினைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அலஸ்டைர் குக் 37 ஓட்டங்களைப் பெற்றதுடன் க்றிஸ் வோக்ஸ் 36 ஓட்டங்களையும், மொயின் அலி 25 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களுக்கே சுருண்டது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் நதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் பெட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும் ஜோஸ் ஹசல்வுட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
215 ஓட்டங்கள் முன்னிலையில் தமது 2ஆவது இன்னிங்சினை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் க்றிஸ் வோக்ஸ் ஜோடி அபார பந்து வீச்சின் மூலம் அதிர்ச்சியளித்தது.
இதன் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா 20 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை, ஏனைய வீரர்கள் 20 கும் குறைவான ஓட்டங்களைப் பெற்றனர்.
அபாரமாகப் பந்து வீசிய ஜேம்ஸ் அண்டர்சன் 5 விக்கெட்டுக்களையும், க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுக்களையும், கிரேக் ஓவர்டன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்காமல் வீடு திரும்பிய இலங்கை வீரர்கள்
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள்..
பின்னர் 354 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து 53 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அலஸ்டைர் குக் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்க் ஸ்டோன்மன் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி அடுத்தடுத்து இரு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் அணித் தலைவர் ஜோ ரூட் மற்றும் டேவிட் மாலன் ஜோடி நிதானமாக ஆடி 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்த வேளை மாலன், பெட் கம்மின்ஸ்யின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இதனால் நான்காம் நாள் முடிவின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து 6 விக்கெட்டுக்கள் கையிருப்பில் உள்ள நிலையில் 178 ஒட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஐந்தாம் நாளைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியின் அன்றைய முதல் விக்கெட்டாக க்றிஸ் வோக்ஸ் ஓய்வறை திரும்ப, மறுமுனையில் அரைச்சதம் கடந்து நிதானமாக ஆடிய ஜோ ரூட்டும் ஆட்டமிழந்தாார்.
எனவே, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கான போராட்டம் பின்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களின் கைகளில் தங்கியது. எனினும் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து அணி 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஹசல்வுட் மற்றும் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக சோன் மார்ஷ் தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது போட்டி எதிர் வரும் 14ஆம் திகதி பேர்த்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 442/8d (149) சோன் மார்ஷ் 126*, டிம் பெய்ன் 57, உஸ்மான் கவாஜா 53, டேவிட் வோர்னர் 47, பெட் கம்மின்ஸ் 44. க்ரெய்க் ஓவர்டன் 3/105, ஸ்டுவர்ட் ப்ரோட் 2/72, க்றிஸ் வோக்ஸ் 1/84, ஜேம்ஸ் அண்டர்சன் 1/74
இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 227/10 (76.1) க்ரெய்க் ஓவர்டன் 41*, அலஸ்டைர் குக் 37, க்றிஸ் வோக்ஸ் 36, மொய்ன் அலி 25. நதன் லியோன் 4/60, மிச்சல் ஸ்டார்க் 3/49, பெட் கம்மின்ஸ் 2/47, ஜோஸ் ஹசல்வுட் 1/56.
அவுஸ்திரேலியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 138/10 (58) உஸ்மான் கவாஜா 20, மிச்சல் ஸ்டார்க் 20. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5/43, க்றிஸ் வோக்ஸ் 4/36, க்ரெய்க் ஓவர்டன் 1/11
இங்கிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 233/10 (84.2) ஜோ ரூட் 67, மார்க் ஸ்டோன்மன் 36, ஜோன்னி பர்ட்சோ 36, டேவிட் மாலன் 29. மிச்சல் ஸ்டார்க் 5/88, ஜோஸ் ஹசல்வுட் 2/49, நதன் லியோன் 2/45, பெட் கம்மின்ஸ் 1/39
>> மேலும் பல சுவையான விளையாட்டு செய்திகளைப் படிக்க <<