விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்காமல் வீடு திரும்பிய இலங்கை வீரர்கள்

1578

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் விமான நிலையத்துக்குச் சென்று, மீண்டும் திரும்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணி இந்தியாவுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் தொடருக்கான திசர பெரேரா தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த தொடருக்காக 9 வீரர்கள் இந்தியா செல்வதற்காக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு (04) சென்றுள்ளனர். எனினும் வீரர்கள் புறப்படத் தயாராக இருந்த ஒரு சில நிமிடங்களில் அவர்களை மீண்டும் அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை ஒரு நாள் குழாம் அறிவிப்பு

இம்மாதம் 10ஆம் திகதி இந்தியாவின் தர்மாசாலாவில்..

இந்தியா செல்லும் ஒரு நாள் குழாமுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அனுமதி அளிக்காத காரணத்தினால்தான் இவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதற்காக விளையாட்டு வைத்திய குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக இலங்கை அணி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், வீரர்களின் உடற்தகுதியில் காணப்படுகின்ற குறைபாடுகள்தான் இதற்கு முக்கிய காரணம் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பகிரங்கமாகக் குற்றம்சுமத்தியிருந்தார். இதன்படி, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுகின்ற அனைத்து வீரர்களுக்கும் உடற்தகுதி பரிசோதனை கட்டாயம் எனவும், அவ்வாறு குறித்த பரிசோதனையில் தேறாவிட்டால் எந்தவொரு போட்டிகளுக்கும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னணியிலேயே இந்திய தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

1973ஆம் ஆண்டின் விளையாட்டுத்துறை யாப்பின்படி இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களினாலும் சர்வதேச மட்டத்தில் நடைபெறுகின்ற போட்டித் தொடர்களுக்காக தெரிவுசெய்யப்படுகின்ற வீரர்கள், விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியின் பிறகுதான் குறித்த தொடர்களில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்கப்படும்.

அறிமுக வீரர்களுடன் இலங்கைக்கு எதிரான இந்திய T20 குழாம்

மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை அணியுடன்..

இதன்படி. இதுவரை காலமும் குறித்த நடைமுறைகளைப் பின்பற்றிவந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முதற்தடவையாக விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் ஒரு நாள் அணியை இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஒரு நாள் அணியில் இடம்பெற்றிருந்த சகலதுறை வீரரான சச்சித் பத்திரன முன்னதாகவே இந்தியாவுக்கு சென்றுவிட்டதாகவும், ஏனைய வீரர்களான திஸர பெரேரா, உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, அசேல குணரத்ன, சதுரங்க டி சில்வா, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீர, நுவன் பிரதீப் ஆகிய வீரர்கள் இரவோடு இரவாக வீடு திரும்பியதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, குறித்த தொடருக்கான அனுமதியை இன்று மாலைக்குள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதனையடுத்து ஒரு நாள் அணியில் இடம்பெற்றுள்ள எஞ்சிய வீரர்கள் நாளை (06) காலை இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

© Agence France-Presse