FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

1014

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 2010 உலக சம்பியன் ஸ்பெயின் அணியும் ஐரோப்பிய சம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் அணியும் ஒரே குழுவில் இடம்பிடித்திருப்பதோடு, இங்கிலாந்து அணி பலம்மிக்க பெல்ஜியத்தை எதிர்கொள்ளவுள்ளது.

2018 உலகக் கிண்ணத்தில் ஆட தேர்வாகி இருக்கும் 32 அணிகளையும் எட்டு குழுக்களாக பிரிக்கும் வண்ணமயமான நிகழ்வு ரஷ்யாவில் நேற்று (01) நடைபெற்றது. இதில் நெய்மரின் பிரேசில் அணி இருக்கும் குழுவில் சுவிட்சர்லாந்து, கொஸ்டா ரிகா மற்றும் செர்பிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பிரேசில் ஆறாவது உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்குடனேயே களமிறங்கவுள்ளது.

FIFA உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் இவைதான்

நியூசிலாந்துடனான இரண்டாவது கட்ட பிளே…

நடப்பு சம்பியன் ஜெர்மனி அணி மெக்சிகோ, சுவீடன் மற்றும் தென் கொரிய அணிகள் இருக்கும் குழுவில் இடம்பிடித்துள்ளது. ஜோசிம் லொவேஸ் பயிற்சியில் ஆடும் ஜெர்மனி 1962இல் பிரேசில் நிகழ்த்திய சாதனைக்கு பின் தொடர்ச்சியாக இரண்டாவது முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளது.  

எவ்வாறாயினும் கடந்த இரு உலகக் கிண்ண போட்டிகளிலும் நடப்பு சம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறின. 2010இல் நடப்பு சம்பியன் இத்தாலி மற்றும் 2014 நடப்புச் சம்பியன் ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கு முன்னெறவில்லை.  

உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவே பெரும் போராட்டம் நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீன அணி முதல் முறை உலகக் கிண்ணத்தில் ஆடவிருக்கும் ஐஸ்லாந்து, அதேபோன்று அபாய அணியாக பார்க்கப்படும் குரோஷியா மற்றும் நைஜீரிய அணிகள் இருக்கும் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது.  

11 நகரங்களில் 64 போட்டிகள்

கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற குழுக்களை பிரிக்கும் நிகழ்வு முந்தைய நிகழ்வுகள் போலன்று மிக விரைவாக முடிவுற்றது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் FIFA தலைவர் கியன்னி இன்பன்டினோவின் உரைகளுக்கு பின் நான்கு சாடிகளிலும் வைக்கப்பட்ட 32 அணிகளின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு விரைவாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த குலுக்கல் செயல்முறைக்கு ஆர்ஜென்டீன முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மற்றும் பிரான்சின் 1998ஆம் ஆண்டு அணித் தலைவர் லோரென்ட் ப்ளான்க் உதவியாக செயற்பட்டனர்.

போட்டியை நடத்தும் ரஷ்யாவின் முதல் சுற்று எதிர் அணிகள் தேர்வாவதற்கு சற்று முன்னர் உரையாற்றிய புட்டின், அதிகம் போராடும் திறன் கொண்ட அணியே அதிகம் விரும்பப்படும் கிண்ணத்தை வெல்லும். வெற்றி பெறுவதற்கு அனைத்து அணிகளுக்கும் நான் வாழ்த்து தெரிவிப்பதோடு விசுவாசமான அனைத்து ரசிகர்களும் ரஷ்யாவுக்கு வந்து 2018 உலகக் கிண்ணத்தை கண்டுகளிக்க நான் அழைப்பு விடுக்கிறேன் என்று புடின் இந்நிகழ்வில் குறிப்பிட்டார்

2018, ஜூன் 14 ஆம் திகதி தொடக்கம் ஒரு மாதம் நீடிக்கும் உலகக் கிண்ண போட்டிகள் ரஷ்யாவின் 11 நகரங்களில் நடைபெறவுள்ளன. நாட்டின் மேற்கில் கலிங்கார்ட் தொடக்கம் கிழக்கில் 2,500 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் எகடெரின்போர்க் நகர் வரை போட்டிகள் இடம்பெறும்.  

ஒட்டுமொத்தமாக 64 போட்டிகள் நடைபெறவிருப்பதோடு இதன் இறுதிப் போட்டி தலைநகர் மொஸ்கோவின் லுஸ்னிக்கி அரங்கில் ஜுலை 15ஆம் திகதி நடைபெறும்.

முதல் போட்டியில் ரஷ்யாசவூதி

போட்டியை நடத்தும் அணி என்பதால் இம்முறை உலகக் கிண்ணத்திற்கு ரஷ்யா தகுதிகாண் போட்டி இன்றியே தேர்வானது. எனினும் தாம் ஸ்பெயினை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று ரஷ்ய அணியின் பயிற்சியாளர் ஸ்டெனிஸ்லேவ் செர்சசோவ் குறிப்பிட்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்தது போல் ஸ்பெயின் இருக்கும் குழுவில் ரஷ்யா இடம்பெறாதபோதும் அந்த அணி சவால் கொண்ட A குழுவிலேயே இடம்பெற்றுள்ளது. அந்த குழுவில் பார்சிலோனாவின் லுயிஸ் வச்ரேஸ் தலைமையிலான உருகுவே, லிவர்பூல் முன்கள வீரர் மொஹமது சலாஹ்வின் எகிப்து அணிகள் இடம்பெற்றுள்ளன. ஆசிய மண்டலத்தில் இருந்து தேர்வான சவூதி அரேபியாவும் A குழுவில் உள்ளது.

மொஸ்கோ நகரில் உலகக் கிண்ணத்தை ஆரம்பித்து வைக்கும் முதல் போட்டியில் ஜூன் 14 ஆம் திகதி ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தும்.

எனவே, உலகக் கிண்ண ஆரம்ப போட்டி ஒன்றில் ஆசிய அணி பங்கேற்பது முதல்முறையாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடு ஒரே ஒரு தடவை மாத்திரமே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறாமல் இருந்துள்ளது. 2010 உலகக் கிண்ணத்தை நடத்திய தென்னாபிரிக்கா குழு நிலை போட்டிகளோடு வெளியேறியது. சுமார் 30 வீதமான உலகக் கிண்ணத்தை, போட்டியை நடத்திய நாடே வென்றமை குறிப்பிடத்தக்கது.  

இம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு?

இலங்கையின் கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும்…

B குழுவில் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் என்ற பலம்மிக்க போட்டியாளர்களுடன் மொரோக்கொ மற்றும் ஈரானும் இடம்பெற்றுள்ளன. ஈரான் அணி ஆசிய மண்டல உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியுறாத அணியாகவே உலகக் கிண்ணத்திற்கு முன்னெறியது. அதேபோன்று ஆபிரக்க மண்டலத்தில் பலம் கொண்ட ஐவொரி கோஸ்ட் அணியை பின்தள்ளியே மொரோக்கோ உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியது.   

வலுவான முன்கள வீரர்களான அன்டொயினே கிரியஸ்மான் மற்றும் பதின்ம வயது வீரர் கைலியன் ம்பப்பே ஆகியோரை கொண்டிருக்கும் பிரான்ஸ் C குழுவில் ஆஸ்திரியா, பெரு மற்றும் டென்மார்க் அணிகளை எதிர்கொள்ளும்.

ஆர்ஜென்டீனா மோதும் D குழுவில் அண்மைக் காலமாக சோபிக்கும் இரு ஐரோப்பிய அணிகளான ஐஸ்லாந்து, குரோஷியா இடம்பெற்றிருப்பதோடு எதிர்வுகூற முடியாத அணியாக கருதப்படும் நைஜீரியாவும் இந்த குழுவிலேயே உள்ளது.  

இதில் H குழு குறிப்பிடத்தக்கதாகும். இந்த குழுவில் முன்னணி அணியாக போலந்துடன் ஆபிரிக்காவின் செனகல், தென் அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் ஆசியாவின் பலம்கொண்ட அணியான ஜப்பான் இடம்பெற்றுள்ளன. எனினும் கால்பந்து அரங்கில் மிகப்பெரிய கிண்ணங்களை வெல்லாத அணிகளை கொண்ட குழுவாகவே இது உள்ளது.

உலகக் கிண்ண குழுநிலை போட்டிகள் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், நொக் அவுட் சுற்றான (knockout) 16 அணிகள் மோதும் சுற்றுக்கு தேர்வாகும்.   

குழு நிலை அணிகள்

A குழு ரஷ்யா, சவூதி அரேபியா, எகிப்து, உருகுவே
B குழு போர்த்துக்கல், ஸ்பெயின், மொரோக்கோ, ஈரான்
C குழு பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பெரு, டென்மார்க்
D குழு ஆர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரோஷியா, நைஜீரியா
E குழு பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா
F குழு ஜெர்மனி, சுவீடன், மெக்சிகோ, தென் கொரியா
G குழு பெல்ஜியம், பனாமா, துனீஷியா, இங்கிலாந்து
H குழு போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான்