டெல்லி, பெரோஸ் ஷாஹ் கொட்லா மைதானத்தில் நாளை (02) ஆரம்பமாகவிருக்கும் இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லியின் இந்திய அணி முக்கியமான உலக சாதனை ஒன்றை சமன்செய்ய எதிர்பார்த்துள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வென்றால் தொடர்ச்சியாக ஒன்பது டெஸ்ட் தொடர்களை வென்று தற்போதைய சாதனையை சமன் செய்யும்.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் இந்தியா கடைசி டெஸ்ட்டை வென்றால் அல்லது சமன் செய்தால் தொடரை கைப்பற்றிவிடும். இதன்மூலம், 2005 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலத்தில் அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக ஒன்பது தொடர்களை வென்ற சாதனையையே இந்திய அணி சமன் செய்ய எதிர்பார்த்துள்ளது.
>> ஹேரத்திற்கு பதிலாக புதிய சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் இலங்கை
எனினும் இந்த சாதனையை முறியடிக்க இந்திய அணி அடுத்து தென்னாபிரிக்க மண்ணில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்த வேண்டியுள்ளது. இதற்கு ஏற்பாடாகவே இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்திலேயே இந்தியாவின் இந்த வெற்றிப்பயணம் ஆரம்பமானது. இவ்வாறு 7 தொடர்களில் வெற்றி பெற்ற நிலையிலேயே அந்த அணி கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை மண்ணில் இலங்கை அணியை டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் (Whitewash) செய்தது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் இடம்பெறும் தொடரில் நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் வீழ்த்தியே இந்தியா தொடரில் முன்னிலை பெற்றது.
குறிப்பாக அடுத்த தொடருக்கு ஏற்பாடாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்காக ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவில் மிக கடினமான சவாலுக்கு முகம்கொடுக்க தமது அணி தயாராக இருக்க வேண்டும் என்று கோஹ்லி குறிப்பிடுகிறார். “இதனாலேயே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் ஆடுகளங்களை தயாரிக்க நாம் கோரினோம். போட்டிகளுக்கு இடையில் தயாராக போதிய காலம் இல்லை. எனவே, எதிர்வரும் மிகப்பெரிய சவாலுக்காக நாம் இருக்கும் காலத்தை பயன்படுத்துகிறோம்” என்றார் கோஹ்லி.
இந்திய அணியின் வேகப்பந்து முகாமில் இரண்டாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இஷான்த் ஷர்மா வெற்றிகரமாக அணிக்கு திரும்பியபோதும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கொல்கத்தாவின் பச்சை நிறமாக இருந்த ஆடுகளத்தில் ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இலங்கை விக்கெட்டுகளை சாய்த்த புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாகவே 6 அடி 5 அங்குலம் உயரமான ஷர்மா அழைக்கப்பட்டார்.
இந்திய வேகப்பந்து வரிசையில் உமேஷ் ஷர்மா மாத்திரமே பலவீனம் கொண்டவராக பார்க்கப்படுவதோடு, இரண்டாவது டெஸ்டில் இடம்பெறாத மொஹமட் ஷமி நாளைய டெஸ்டில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கோஹ்லி ஓய்வெடுத்துக்கொள்ளவுள்ள நிலையில் ரோஹித் ஷர்மா இந்திய அணித்தலைவராக செயற்டவுள்ளார்.
“அவர்கள் (வேகப்பந்து வீச்சாளர்கள்) மிக உக்கிரத்தோடு போட்டியில் பங்கேற்று வருகின்றனர்” என்று ரோஹித் ஷர்மா குறிப்பிட்டார்.
சந்திமாலின் நெருக்கடி
இந்திய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டி ஒன்றை வெல்லும் கனவுடனேயே இலங்கை அணி இந்தியா சென்றது. உண்மையில் இந்த டெஸ்ட் தொடர் இலங்கை அணியின் யதார்த்தத்தை புரியவைப்பதாகவே உள்ளது. நாக்பூரில் அடைந்த தோல்வி இலங்கை அணியின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியாக இருந்தது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முன் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை ஆட்டம் கண்டது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்ரன் அஷ்வின் கடைசி டெஸ்டில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஓட்டங்கள் பெற வசதியாக இருந்த ஆடுகளத்தில், அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவின்திர ஜடேஜாவின் பந்துக்கு ஏமாற்றம் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இலங்கை அணி தனது உத்வேகத்தை தொடர முடியாமல் தடுமாறுகிற நிலையில் மோசமான முடிவுகள் அணிக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் எச்சரித்தார்.
“முதல் இன்னிங்ஸில் நாம் அதிக ஓட்டங்கள் பெற வேண்டும். டெல்லியில் அதனையே செய்ய வேண்டும்” என்று அணித்தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டார்.
“எமது வரிசையில் அஞ்செலோ சிரேஷ்ட வீரர் ஒருவராக உள்ளார். அவர் ஓட்டங்கள் பெறாதபோது எமது அணி வீழ்ச்சி காணும். ஒரு சிரேஷ்ட வீரர் என்ற வகையில் நிலைகொண்டு திறமையை வெளிப்படுத்த வேண்டும். அப்போதே இளம் வீரர்கள் அதனை தொடருவார்கள்” என்று சந்திமால் குறிப்பிட்டார்.
டெல்லி டெஸ்டில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறன. குறிப்பாக அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஜெப்ரி வெண்டர்சே அல்லது லக்ஷான் சதகான் அவரது இடத்தை பிடிக்க எதிர்பார்த்துள்ளனர்.
எவ்வாறு இருப்பினும் இலங்கை அணிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகப் பெரிய நெருக்கடி கொண்டதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.