இலங்கைக்கு எதிராக இந்திய அணிக்கு மற்றொரு வரலாற்று வெற்றி

454
@BCCI

நாக்பூரின் VCA மைதானத்தில் இன்று (27)  முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் படுதோல்வியினை தழுவியுள்ளது.

மூன்றாம் நாள் முடிவு – கோஹ்லியின் இரட்டைச் சதத்துடன் இந்தியா மேலும் வலுவான நிலையில்

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை (610) இந்தியா மிகவும் சிறப்பாக நிறைவு செய்திருந்தது. பதிலுக்கு தம்முடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை அணி 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து தடுமாற்றமான ஆரம்பத்தினை காட்டியிருந்த போது நேற்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

களத்தில் திமுத் கருணாரத்ன 11 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமான்ன 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றனர்.

இலங்கையை விட இந்திய அணி முதல் இன்னிங்சில் 384 ஓட்டங்களால்  முன்னிலை  வகித்த காரணத்தினால், நல்லதொரு இணைப்பாட்டத்தினை வேண்டி இலங்கை வீரர்கள் போட்டியின் நான்காவது நாளான இன்று தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்தனர்.  

இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விதமாக அமையவில்லை. இன்றைய நாளில் இலங்கையின் முதல் விக்கெட்டாக திமுத் கருணாரத்ன சுழல் வீரரான ஜடேஜாவின் பந்து வீச்சில் முரளி விஜயிடம் பிடிகொடுத்து 18 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

சிறிது நேரத்தில் கருணாரத்னவுடன் ஜோடி சேர்ந்திருந்த லஹிரு திரிமான்னவின் இன்னிங்சும் 23 ஓட்டங்களுடன் முடிவடைந்தது. இதனையடுத்து களம் நுழைந்த அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல போன்ற துடுப்பாட்ட வீரர்களும் ஏமாற்றம் தந்தனர். ஏழாம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த தசுன் சானக்க சிறிது நேரம் அதிரடி காட்டியிருந்தார். எனினும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இலங்கை அணி போட்டியின் மதிய போசன இடைவேளையின்போது 145 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் பரிதாபகரமான நிலைக்குச் சென்றிருந்தது.

இந்தியாவில் கன்னித் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை இளம் வீரர்கள்

இந்தியாவில் இடம்பெறும் 19 வயதுக்கு..

மதிய உணவு இடைவேளையினை அடுத்து தொடர்ந்த போட்டியில் இலங்கை அணியின் எஞ்சியிருந்த இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட்டன. முடிவில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி தம்முடைய இரண்டாம் இன்னிங்சில் 166 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று இந்தியாவிடம் இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி வரலாற்றில் தம்முடைய மோசமான டெஸ்ட் தோல்வியினை பதிவு செய்தது.  

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆறுதல் தரும் விதமாக செயற்பட்டிருந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தனது 15 ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் மொத்தமாக 82 பந்துகளுக்கு 10 பெளண்டரிகளுடன் 61 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அதேபோன்று பின்வரிசையில் வந்த சுரங்க லக்மால் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இலங்கை அணியினை முதல் இன்னிங்ஸ் போன்று இந்த இன்னிங்சிலும் நிர்மூலமாக்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதி விரைவாக  300 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் பதிவாகியிருந்தார். அதோடு இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தி தமது தரப்புக்கு டெஸ்ட் வரலாற்றில் கிடைத்த மிகச்சிறந்த வெற்றியினைப் பெற துணை புரிந்தனர்.

இலகு வெற்றியுடன் ஆஷஸ் தொடரை ஆரம்பித்த அவுஸ்திரேலியா

தற்பொழுது நடைபெற்று வரும் 2017/2018 ஆண்டு…

இந்த வெற்றியோடு இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என முன்னிலை அடைந்துள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக இரட்டைச் சதம் விளாசிய விராத் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டு அணிகளுக்குமான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 2ஆம் திகதி டெல்லியில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) 205 (79.1) தினேஷ் சந்திமால் 57(122), திமுத் கருணாரத்ன 51(147), நிரோஷன் திக்வெல்ல 24(30), ரவிச்சந்திரன் அஷ்வின் 67/4(28.1), இஷாந்த் சர்மா 37/3(14), ரவீந்திர ஜடேஜா 56/3(21)

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) 610/6d (176.1) விராத் கோஹ்லி 213(267), செட்டெஸ்வர் புஜாரா 143(362), முரளி விஜய் 128(221), ரோஹித் சர்மா 102(160)*, தில்ருவான் பெரேரா 202/3(45)

இலங்கை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 166 (49.3) தினேஷ் சந்திமால் 61(82), சுரங்க லக்மால் 31(42)*, ரவிச்சந்திரன் அஷ்வின் 63/4(17.3), ரவீந்திர ஜடேஜா 28/2(11), உமேஷ் யாதவ் 30/2(9),  இஷாந்த் சர்மா 43/2(12)

முடிவுஇந்தியா 239 ஓட்டங்களால் இன்னிங்ஸ் வெற்றி