பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை

1188
BCCI

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக வழமையான ஆட்டநேர நிறைவுக்கு சற்று முன்னதாக முடிவடைந்திருக்கின்றது.

இலங்கைக்காக ஜொலித்த சானக்க; இரண்டாம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீடு

மூன்றாம் நாள் நிறைவில் இலங்கை சிறந்த துடுப்பாட்டம், பந்து வீச்சு என்பவற்றினை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் இந்திய அணியினை பெரிய இலக்கு ஒன்றை அடையவிடாமல் (172) கட்டுப்படுத்தியிருப்பதுடன் அவர்களை விட வெறும் 6 ஓட்டங்களே பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

போட்டியின் முதல் இரண்டு நாட்களும் சீரற்ற காலநிலை காரணமாக குறைவான ஓவர்களே வீசப்பட்டிருந்த நிலையில் கைவிடப்பட்டிருந்தன. போட்டி நடைபெற்ற காலப்பகுதிகளில் இலங்கை அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ளத் தடுமாறியிருந்த இந்திய அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

களத்தில் செட்டெஸ்வர் புஜாரா 47 ஓட்டங்களுடனும், ரித்திமன் சஹா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.

போட்டியின் மூன்றாம் நாள் ஏனைய போட்டி நாட்கள் போல் அல்லாது மிக ரம்மியான காலைப்பொழுதுடன் ஆரம்பமாகியிருந்தது. இன்றைய நாளில் முதல் இன்னிங்ஸ்  துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இந்திய அணிக்கு வலதுகை வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகே அதிர்ச்சியூட்டியிருந்தார். ஏனெனில், இந்திய அணிக்காக போராடிக்கொண்டிருந்த செட்டெஸ்வர் புஜாராவின் விக்கெட் போல்ட் முறையில் அவரினால் பறிபோயிருந்தது.

இந்திய அணியின் 6 ஆவது விக்கெட்டாக வீழ்ந்த புஜாரா தனது 16 ஆவது டெஸ்ட் அரைச் சதத்துடன் 10 பெளண்டரிகளுடன் 117 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று ஓய்வறை நடந்திருந்தார்.

புஜாராவின் விக்கெட்டினை அடுத்து பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுத் தந்த பெறுமதி மிக்க ஓட்டங்களுடன் 59.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இந்தியா 172 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சுக்காக போட்டியின் மதியவேளை நெருங்கும் போது பெற்றிருந்தது.

கனிஷ்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஓரளவு சிறப்பாக செயற்பட்ட ரித்திமன் சஹா 29 ஓட்டங்களினையும், மொஹமட் சமி 24 ஓட்டங்களினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் இந்த ஆட்டத்தினால் ஒரு கட்டத்தில் 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்த இந்திய அணி 172 ஓட்டங்கள் வரை பெற்று சரிவில் இருந்து மீண்டமை குறிப்பிடத்தக்கது.  

அதேபோன்று இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், லஹிரு கமகே, தசுன் சானக்க மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து இரண்டு அணி வீரர்களும் மதிய போசனத்தை எடுத்துக் கொண்ட பின்னர் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் ஆரம்பமாகியிருந்தது.

மிகவும் நேர்த்தியாக அணியின் துடுப்பாட்ட இன்னிங்சினை சதீர சமரவிக்ரம பெளண்டரி ஒன்றுடன் ஆரம்பித்திருந்தார். எனினும், இலங்கை அணிக்கு புவ்னேஸ்வர் குமார் தனது வேகத்தின் மூலம் ஆரம்பத்திலேயே அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இலங்கை அணியின் முதல் விக்கெட் LBW முறையில் புவ்னேஸ்வர் குமாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக திமுத் கருணாரத்ன 8 ஓட்டங்களுடன் பறிபோயிருந்தார். அவர் தனது ஆட்டமிழப்புக்காக மூன்றாம் நடுவரின் உதவியை நாடியிருந்த போதிலும் அது பலனளிக்காமல் போயிருந்தது.

இதனையடுத்து சிறிது நேரத்தில் குமாரின் ஸ்விங் பந்து ஒன்றினை ஆட முயன்ற போது அது மெல்லியதாக துடுப்பாட்ட மட்டையில் பட்டு விக்கெட்  காப்பாளர் ரித்திமன் சஹாவிடம் செல்ல இலங்கை அணியின் ஏனைய ஆரம்ப வீரரான சதீர சமரவிக்ரமவின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் 23 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டது.

சிங்கர் பிரீமியர் லீக் T20 இறுதிப் போட்டியில் டிமோ – யுனிசெல்லா

எனவே, களம் நுழைந்த லஹிரு திரிமான்ன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய புதிய துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறாமல் இலங்கை அணிக்காக மெதுவாக இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்பியிருந்தனர். போட்டியின் தேநீர் இடைவேளை வரை இவர்களது இணைப்பாட்டம் (79) நீடித்தது.

தேநீர் இடைவேளையினை அடுத்து தொடர்ந்த போட்டியின் இறுதி இடைவெளியில் இலங்கை அணி சார்பாக திரிமான்ன தனது 5 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை கடந்தார். இந்நிலையில், சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் அவரது விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார். 99 ஓட்டங்களினை மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக பகிர உதவிய திரிமான்ன 8 பெளண்டரிகளுடன் 51 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சில விநாடிகளே போயிருந்த நிலையில் 28 ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் காணப்பட்ட மெதிவ்சின் விக்கெட்டும் யாதவினால் வீழ்த்தப்பட்டது.

தொடர்ந்து இலங்கை தமது முதல் இன்னிங்ஸ் தொடர்ந்த போது போதிய வெளிச்சமின்மையினால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 45.4 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களுடன் வலுப்பெற்றிருக்கின்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் இத்தொடரில் முழுநேர துடுப்பாட்ட வீரராக செயற்படும் அஞ்செலோ மெதிவ்ஸ் 94 பந்துகளுக்கு  8 பெளண்டரிகளுடன் 52 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அதோடு களத்தில் ஆட்டமிழக்காது அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களுடனும், நிரோஷன் திக்வெல்ல 14 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.

இந்திய அணியின் பந்து வீச்சு சார்பாக உமேஷ் யாதவ் மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல்  இன்னிங்ஸ்) – 172 (59.3) செட்டெஸ்வர் புஜாரா 52(117), ரித்திமன் சஹா 29(83), சுரங்க லக்மால் 26/4(19), தில்ருவான் பெரேரா 19/2(7), தசுன் சானக்க 36/2 (12), லஹிரு கமகே 59/2 (17.3)

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 165/4 (45.4) அஞ்செலோ மெதிவ்ஸ் 52(94), லஹிரு திரிமான்ன 51(94), புவ்னேஸ்வர் குமார் 49/2(14.4), உமேஷ் யாதவ் 50/2 (13)

போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்.