CR & FC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த CH & FC

206

டயலொக் ரக்பி லீக் தொடரின் மூன்றாம் வாரத்திற்கான போட்டியொன்றில் CR & FC மற்றும் CH & FC அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டி கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.  

CR & FC அணியானது தமது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்திருந்ததுடன், பிரபல கடற்படை அணியையும் வீழ்த்தியிருந்தது. CH & FC அணியோ முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், இப்போட்டியில் CR & FC அணி இலகு வெற்றியை சுவீகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

CH & FC அணியின் இளம் ப்ளை ஹாப் வீரர் சேமுவல் மதுவந்த தனது உதையின் மூலம் போட்டியை ஆரம்பித்து வைத்தார். போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் சரி சமனான விளையாட்டுப் பாணியை வெளிப்படுத்தின.

போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் CH & FC அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்ததுடன், அவ்வணி கம்பங்களை நோக்கி உதைக்க முடிவு செய்தது. சேமுவல் மதுவந்த உதையை வெற்றிகரமாக உதைக்க, CH & FC அணி போட்டியின் முதல் புள்ளிகளை பெற்றுக் கொண்டது. (CH & FC 03 – 00 CR & FC)

இலங்கை கனிஷ்ட ரக்பி அணியின் தலைவராக நவீன் ஹேனகன்கனம்கே

CH & FC வீரர்கள் கடந்த போட்டிகளை விட முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு தொடர்ந்து அழுத்தத்தை வழங்கினர். போட்டியின் பதினாறாவது நிமிடத்தில் CH & FC அணியின் சேமுவல் மதுவந்த விவேகமாக பந்தைக் கைமாற்ற, அவரிடமிருந்த பந்தைப் பெற்றுக் கொண்ட லீ கீகல் பல தடுப்பு வீரர்களை புறந்தள்ளி சிறப்பான ட்ரை ஒன்றை வைத்தார். சேமுவல் மதுவந்த கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (CH & FC 08 – 00 CR & FC)

எதிரணிக்கு பதிலளிக்கும் விதமாக தமது வழமையான அதிவேக விளையாட்டுப் பாணியை வெளிக்காட்டிய CR & FC அணி இருபதாவது நிமிடத்தில் ரீசா றபாய்தீன் மூலமாக ட்ரை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. அவ்வணியின் சகல பின்வரிசை வீரர்களும் சிறப்பாக பந்தைப் பரிமாற்றம் செய்து அந்த ட்ரையினை பெற்றுக் கொள்ள வழியமைத்துக் கொடுத்தனர். கடந்த போட்டியில் தனது உதைக்கும் திறனின் மூலம் அசத்தியிருந்த தரிந்த ரத்வத்த, கடினமான கொன்வெர்சன் உதையை குறிதவறாது உதைத்தார். (CH & FC 08 – 07 CR & FC)

எனினும் அதனைத் தொடர்ந்து CR & FC அணி மிகவும் மந்தமான போக்கை வெளிக்காட்ட ஆரம்பித்தது. 26ஆவது நிமிடத்தில் CR & FC அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிட்டியதுடன், இலகுவான உதையை தரிந்த ரத்வத்த தவறவிட்டார். சில நிமிடங்கள் கடந்த பின்னர் CH & FC அணியின் முன்வரிசை வீரர் ஹென்றி டெரன்ஸ் விதிமுறைகளுக்கு முரணான ஆட்டம் காரணமாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இம்முறையும் தரிந்த ரத்வத்த பெனால்டி உதையை தவறவிட்டு ஏமாற்றமளித்தார்.

இதேவேளை 34ஆவது நிமிடத்தில் CH & FC அணிக்கு கிடைத்த பெனால்டி உதையை சேமுவல் மதுவந்த சிறப்பாக உதைத்து மேலும் மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். அதன்படி CH & FC அணி முதல் பாதியை முன்னிலையில் நிறைவு செய்தது. (CH & FC 11 – 07 CR & FC)

முதல் பாதி: CH & FC 11 – 07 CR & FC

கடந்த போட்டியைப் போன்று CR & FC வீரர்கள் இரண்டாம் பாதியில் எதிரணிக்கு பதிலடி கொடுக்கும் நோக்குடன் களமிறங்கியிருந்தனர். எனினும் CH & FC அணி மற்றுமொரு ட்ரை வைத்து எதிரணியை நிலைகுலையச் செய்தது. சேமுவல் மதுவந்த லாவகமாக பந்தினை உதைக்க அதனை துரத்திப் பிடித்த லீ கீகல் அபாரமான ட்ரை ஒன்றினை பெற்றுக் கொடுத்தார். கடினமான கொன்வெர்சன் உதையை மதுவந்த தவறவிட்டார். (CH & FC 16 – 07 CR & FC)

அதனைத் தொடர்ந்து CR & FC அணிக்கு பல வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் மோசமான பந்து பரிமாற்றம் மற்றும் பிழையான உத்திகள் காரணமாக அவை கைநழுவிச் சென்றன. CH & FC அணியும் சில சிறப்பான நகர்வுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த போதிலும், அவ்வணியினாலும் புள்ளிகளைப் பெற இயலவில்லை.

கடற்படையை மூழ்கடித்த CR & FC; தொடரும் கண்டி அணியின் வெற்றியோட்டம்

எவ்வாறாயினும் எதிரணியின் தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக மட்டுப்படுத்திய CH & FC வீரர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்தினர். 77ஆவது நிமிடத்தில் 40m தூரத்தில் கிடைத்த பெனால்டி உதையை சேமுவல் மதுவந்த எவ்வித சலனமுமின்றி உதைக்க, CH & FC அணியின் வெற்றி மேலும் உறுதியானது. (CH & FC 19 – 07 CR & FC)

80ஆவது நிமிடத்தில் CR & FC அணி ஒருவாறாக ஆறுதல் ட்ரை ஒன்றினை பெற்றுக் கொண்டது. கடந்த போட்டியைப் போன்றல்லாது இப்போட்டியில் சோபிக்கத் தவறிய ரத்வத்த இவ்வுதையையும் தவறவிட்டார். (CH & FC 19 – 12 CR & FC)

முழு நேரம்: CH & FC 19 – 12 CR & FC

இதன்படி கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித வெற்றியையும் பெற்றுக் கொள்ளத் தவறியிருந்த CH & FC அணி, முப்பது போட்டிகளின் பின்னர் முதல் வெற்றியைப் பதிவு செய்து கொண்டது. சேமுவல் மதுவந்த மற்றும் லீ கீகல் ஆகியோரின் கூட்டணி இவ்வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. மறுமுனையில் CR & FC அணியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மிக மோசமாகவே விளையாடியிருந்தது.

ThePapare.com இன் ஆட்டநாயகன்லீ கீகல் (CH & FC)

புள்ளிகள் பெற்றோர்

CH & FC – லீ கீகல் (2 ட்ரை), சேமுவல் மதுவந்த (3 பெனால்டி)

CR & FC – ரீசா றபாய்தீன் (1 ட்ரை), சுமுது ரன்கொத்கே (1 ட்ரை), தரிந்த ரத்வத்த (1 கொன்வெர்சன்)