டிமோ, யுனிசெல்லா அணிகள் T-20 அரையிறுதிக்கு முன்னேற்றம்

618

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 25ஆவது பிரீமியர் லீக் T-20 நொக் அவுட் தொடரின் இரண்டு காலிறுதிப் போட்டிகள் இன்று (16) நடைபெற்றன. அவற்றில் வெற்றி பெற்ற டிமோ மற்றும் யுனிச்செல்லா அணிகள் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா

டி.எம். சம்பத் மற்றும் பர்வீஸ் மஹரூபின் அதிரடி இணைப்பாட்டத்தின் மூலம் ஜோன் கீல்ஸ் அணியை 8 விக்கெட்டுகளால் வென்ற மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா அணி 25ஆவது சிங்கர் பிரீமியர் லீக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்ட முதல் அணியாக தம்மை பதிவு செய்தது.

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷ 38 பந்துகளில் 69 ஓட்டங்களை விளாசினார்.

யுனிசெல்லா அணித்தலைவர் டி.எம் டில்ஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மஹரூப் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய யுனிசெல்லா அணிக்கு ஆரம்ப வீரராக வந்த அதிரடி ஆட்டக்காரர் ரமித் நம்புக்வெல்ல 10 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தார்.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டி.எம் சம்பத் மற்றும் மஹரூப் ஜோடி 80 பந்துகளில் 92 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். டி.எம். சம்பத் 49 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றதோடு மஹ்ரூப் 39 பந்துகளில் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 150 ஓட்டங்களை எட்டியது.  

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 149/9 (20) பானுக்க ராஜபக்ஷ 69, மதுக்க லியனபத்திரனகே 23, டி.எம் டில்ஷான் 4/34, பர்வீஸ் மஹரூப் 2/22

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா – 150/2 (17) டி.எம். சம்பத் 81, பர்வீஸ் மஹரூப் 52*

டிமோ எதிர் ஹேய்லிஸ்

ஹஷான் துமின்து மற்றும் திக்சில டி சில்வா ஆரம்ப விக்கெட்டுக்கு பெற்ற இணைப்பாட்ட சதத்தின் மூலம் ஹேய்லிஸ் அணியுடனான காலிறுதிப் போட்டியில் டிமோ அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் இரண்டாவது காலிறுதிப் போட்டியாக இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட டிமோ அணிக்கு துமின்து மற்றும் திக்சில ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்கு 106 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதன்போது துமின்து 48 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றதோடு திக்சில 33 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 66 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் டிமோ அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது.  

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய ஹேய்லிஸ் அணி சார்பில் ஆரம்ப வீரர் ரொன் சந்திரகுப்தா வேகமாக ஓட்டங்களை பெற்றபோதும் மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியான இடைவெளியில் பறிபோயின.

இதனால் ஹேய்லிஸ் அணியினால் 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. சந்திரகுப்தா 39 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

டிமோ – 182/6 (20) திக்சில 66, ஹஷான் துமின்து 50, சம்மு 28, ரமேஷ் 20*, எச். ராஜபக்ஷ 2/17, அன்டி சொலமன்ஸ் 2/30

ஹேய்லிஸ் – 159/9 (20) ரொன் சந்திரகுப்தா 48, சஹான் நிமேஷ 22, திக்ஷில 2/18