அனைத்து வகைக் கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறும் சயீட் அஜ்மல்

288
Saeed Ajmal

நவீன கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் அணியின் ஒப்பற்ற கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக விளங்கிய சயீட் அஜ்மல், இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள பாகிஸ்தான் அணியின் உள்ளூர் T-20 போட்டித் தொடருடன் தனது கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுக்கவுள்ளார்.

எனினும், தற்போது பைஸலாபாத் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்ற 40 வயதான சயீட் அஜ்மல், கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்த லாஹுர் புளூஸ் அணியுடனான போட்டியில் 26 ஓட்டங்களுக்கு அஹமட் ஷேசாத், பாபர் அசாம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகிய முன்னணி வீரர்களின் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். எனினும், தனது ஓய்வு குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத அஜ்மல், இப்போட்டித் தொடரின் பிறகு ஓய்வுபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுடனான டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு குறைவு : முரளிதரன்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இலங்கை..

2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தனது 32ஆவது வயதில் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி வலுது கை சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல், 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து பாகிஸ்தான் அணிக்காக அனைத்துவித போட்டிகளிலும் களமிறங்கி பிரகாசித்து வந்த அஜ்மல், 2012இல் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 24 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி 30 என இங்கிலாந்து அணியை வைட்வொஷ் செய்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

இதுவரை, 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள அஜ்மல், மிஸ்பாவின் தலைமையின் கீழ் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

எனினும், 2011ஆம் ஆண்டு முதல் மிஸ்பாஉல்ஹக்கின் தலைமைத்துவத்தின் கீழ் முக்கியமான பந்துவீச்சாளராக திகழ்ந்து, ஒருநாள் அரங்கில் பாகிஸ்தானுக்காக தனியொரு நபராக ஜொலித்துவந்த அஜ்மல், இதுவரை 113 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுக்களையும், 64 T-20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இவ்வனைத்து வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் மத்தியில் சயிட் அஜ்மலுக்கு 2009ஆம் ஆண்டு மிகப்பெரிய சிக்கலுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசிய சயிட் அஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கையில், பந்துவீச்சு முறையில் சந்தேகம் எழுந்ததன் மூலம் புயல் வீச ஆரம்பித்தது.

அவுஸ்திரேலிய அணியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டித் தொடரின் போது அவரது பந்துவீச்சு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. எனினும் அவ்வாறு எழுந்த புகாரை உடனடியாக சரிசெய்து கொண்டு மீண்டும் போட்டிகளில் அவர் கலந்துகொண்டார்.

பிற்காலத்தில், .சி.சியின் ஒரு நாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்ட அஜ்மல், கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கெதிராக காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது 2ஆவது முறையாகவும் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கினார்.

அவரது பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனது பந்துவீச்சை மீண்டும் அவர் சரிசெய்தார். அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பிறகு அவரால் முன்பு போல் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. குறிப்பிட்டு சொல்லப்போனால் அவரால் விக்கெட்டுகளையே வீழ்த்த முடியாமல் போனது. இருப்பினும் அதன் பிறகு அவரால் சோபிக்க முடியாமல் போனதுடன், தேசிய அணியிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.  

எனினும், 2015 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு பங்களாதேஷ் அணியுடனான 2 ஒரு நாள் மற்றும் ஒரேயொரு T-20 போட்டியில் விளையாடிய அஜ்மல், 2 விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியிருந்தார். அதன்பிறகு எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

ஆனால், குறித்த காலப்பகுதியில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் இருந்த அஜ்மல், டெஸ்ட் மற்றும் T-20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருந்தார். இந்த காலகட்டத்தில் அஜ்மல் கைப்பற்றியிருந்த விக்கெட் அளவிற்கு எந்தவொரு வீரரும் விக்கெட்டுக்கள் வீழ்த்தவில்லை.

எனினும், பந்துவீச்சு தடையால் அஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கை மங்கியது. சர்வதேச போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த தவறிய அவர், உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மட்டுமே இடம்பிடித்து வந்தார். இந்நிலையில், தற்போது நடைபெற்று வருகின்ற உள்ளூர் T-20 தொடர் நிறைவுக்குவந்தவுடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கடந்த திங்கட்கிழமை .எப்.பி செய்திப் பிரிவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அஜ்மல் தெரிவித்தார்.

மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் அசேல குணரத்ன

பனாகொடையில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் கழகம்…

அவர் மேலும் அங்கு கருத்து வெளியிடுகையில், நடப்பு தேசிய T-20 தொடருக்குப் பிறகு அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் என்ன சாதிக்க வேண்டுமோ அதை சாதித்ததாகவே கருதுகிறேன். அணிக்கு போட்டிகளை வென்று கொடுத்துள்ளேன். இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முழு திருப்தியுடன் முடித்துக்கொள்கின்றேன். நான் நிர்ணயித்திருந்த இலக்குகளை எட்டிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.  

அத்துடன், தனக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடையானது விரக்தியையும், மனதளவில் மிகப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்தாக தெரிவித்த அஜ்மல், கடந்த 2 வருடங்களும் தனது வாழ்க்கையில் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மொஹமட் ஹபீஸும் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அதுபோன்று, சந்தேகத்துக்குரிய முறையில் பந்துவீசுகின்ற பல வீரர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் விளையாடி வருவதாக சுட்டிக்காட்டிய அஜ்மல், இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் போர்ட், அஜ்மல் போன்ற வீரர்கள் எவ்வாறு இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட முடியும் என அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தன்னை மிகவும் கவலையடையச் செய்ததாகவும் தெரிவித்தார்.  

எனினும், இறுதியில் தன்னை குற்றஞ்சாட்டிய அனைவரையும் மன்னித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்காலத்தில் பந்துவீச்சுப் பயிற்சியாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஒரு வருடமாக பைசலாபாத் கிரிக்கெட் அகடமியில் விளையாடி வருகின்ற அஜ்மல், தற்போது நடைபெற்றுவருகின்ற உள்ளூர் T-20 தொடரில் இஸ்லாமாபாத் யுனைட்டெட் அணிக்காக நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அஜ்மல் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.