டயலொக் ரக்பி லீக் தொடரின் இரண்டாம் வாரத்திற்கான இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. இப்போட்டிகளில் முறையே கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய CR & FC மற்றும் கண்டிக் கழக அணிகள் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன.
பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கண்டி விளையாட்டுக் கழகம்
இவ்விரு அணிகளும் மோதிக் கொண்ட போட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. பலரும் எதிர்பார்த்ததைப் போன்றே கண்டிக் கழகம் போட்டியின் ஆரம்பம் முதல் தன் ஆதிக்கத்தை வெளிக்காட்டத் தொடங்கியது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் பின்வரிசை வீரர்களின் சிறப்பான பந்து பரிமாற்றலின் பின்னர் புல் பாக் (Full Back) வீரர் திலின விஜேசிங்க முதல் ட்ரையினை பெற்றுக் கொண்டார். எனினும் அவரது கொன்வெர்சன் உதை குறிதவறியது. (கண்டி 05 – 00 பொலிஸ்)
பொலிஸ் விளையாட்டுக் கழகம் சில சிறப்பான நகர்வுகள் மூலம் எதிரணியின் பாதிக்குள் நுழைந்த போதிலும் அவர்களினால் புள்ளிகளைப் பெற முடியவில்லை. இந்நிலையில் எதிர்த்தாக்குதல் நடத்திய கண்டி அணி திலின விஜேசிங்கவின் ஊடாக மற்றுமொரு ட்ரையினை பெற்றுக் கொண்டது. இம்முறை கம்பங்களுக்கு அருகில் ட்ரை வைத்த விஜேசிங்க இலகுவான கொன்வெர்சன் உதையை புள்ளிகளாக மாற்றினார். (கண்டி 12 – 00 பொலிஸ்)
பொலிஸ் அணியானது போட்டியின் 18 ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பங்களை நோக்கி உதைக்க முடிவு செய்தது. சந்தேஷ் ஜயவிக்ரம வெற்றிகரமாக உதைத்ததுடன், சில நிமிடங்களின் பின்னர் உத்பல செனவிரத்ன ட்ரொப் கோல் ஒன்றின் மூலம் மேலும் மூன்று புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். (கண்டி 12 – 06 பொலிஸ்)
கண்டி மற்றும் ஹெவலொக் அணிகளுக்கு வெற்றிகரமான ஆரம்பம்
2017/2018 பருவகாலத்திற்கான டயலொக் ரக்பி லீக் தொடரின் முதற் போட்டியில் நடப்பு…
இதனைத் தொடர்ந்து ரிச்சர்ட் தர்மபால மற்றும் கயான் வீரரத்ன தமது அனுபவத்தையும் வேகத்தையும் சிறப்பாக பயன்படுத்தி எதிரணியின் தடுப்புச் சுவரை மீறி முன்னேறினர். அணித்தலைவர் வீரரத்னவிடமிருந்து பந்தைப் பெற்றுக் கொண்ட திலின விஜேசிங்க மற்றுமொரு ட்ரையினை வைத்து ஹட்ரிக் சாதனை படைத்தார். கடினமான கொன்வெர்சன் உதையை அவர் லாவகமாக உதைத்து புள்ளிகள் வித்தியாசத்தை அதிகரித்தார். (கண்டி 19 – 06 பொலிஸ்)
முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் தமது அசுர வேகம் மூலம் பொலிஸ் அணியை திணறடித்த கண்டி வீரர்களான ரிச்சர்ட் தர்மபால மற்றும் ஜேசன் திஸாநாயக்க இரண்டு ட்ரைகளை வைக்க, முதல் பாதியின் முடிவில் பொலிஸ் அணியின் தோல்வி ஏறத்தாழ உறுதியானது.
முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 31 – 06 பொலிஸ் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் பொலிஸ் கழக வீரர்கள் முன்னேற்றகரமான தடுப்பாட்டத்தை வெளிக்காட்டி கண்டி அணிக்கு புள்ளிகளை வழங்காது தடுத்தனர். எனினும் 55 ஆவது நிமிடத்தில் தனுஷ்க ரஞ்சன் சிறப்பான ஓட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 40m தூரத்தைக் கடந்து அபாரமான ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டார். (கண்டி 38 – 06 பொலிஸ்)
65 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய லவங்க பெரேரா கண்டிக் கழகத்தின் சார்பில் மேலுமொரு ட்ரையினை வைத்தார். இம்முறை அர்ஷாட் ஜமால்டீன் கொன்வெர்சன் உதையை முயற்சி செய்த போதிலும் அவரது உதை இலக்கை நோக்கி அமையவில்லை. அதனைத் தொடர்ந்து பொலிஸ் அணியானது ஒருவாறாக ஹேஷான் பெர்னாண்டோவின் உதவியுடன் தமது முதல் ட்ரையினை வைத்தது.
எவ்வாறாயினும் கண்டி அணி 43 – 11 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியை பதிவு செய்ததுடன், அதன்படி தாம் விளையாடிய முதலிரண்டு போட்டிகளையும் வெற்றி கொண்டுள்ளது.
முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 43 – 11 பொலிஸ் விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்டநாயகன் – கயான் வீரரத்ன (கண்டி விளையாட்டுக் கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
கண்டி விளையாட்டுக் கழகம் – திலின விஜேசிங்க (3 ட்ரை, 4 கொன்வெர்சன்), ரிச்சர்ட் தர்மபால (1 ட்ரை), ஜேசன் திஸாநாயக்க (1 ட்ரை), தனுஷ்க ரஞ்சன் (1 ட்ரை), லவங்க பெரேரா (1 ட்ரை)
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – ஹேஷான் பெர்னாண்டோ (1 ட்ரை), சந்தேஷ் ஜயவிக்ரம (1 பெனால்டி), உத்பல செனவிரத்ன (1 ட்ரொப் கோல்)
CR & FC எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்
இதேவேளை நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டி முதல் போட்டியை போன்றல்லாது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடற்படை மற்றும் CR & FC அணிகளுக்கு இடையிலான இப்போட்டி லோங்டன் பிளேஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
ஆரம்பம் முதலே இரு அணிகளும் அதிரடியான விளையாட்டுப்பாணியை வெளிப்படுத்தியிருந்தன. CR & FC அணியின் தாக்குதலை சிறப்பாக சமாளித்த கடற்படை வீரர்கள் எதிர்தாக்குதலை வழங்கி போட்டியின் முதல் ட்ரையினை பெற்றுக் கொண்டனர். மூஷின் பலீல் ட்ரையினை வைத்ததுடன் திலின வீரசிங்க கொன்வெர்சன் உதையை குறிதவறாது உதைத்தார். (CR & FC 00 – 07 கடற்படை)
போட்டியின் பத்தாவது நிமிடத்தில் CR & FC அணித்தலைவர் தரிந்த ரத்வத்த தனது அணிக்கான முதல் ட்ரையினை பெற்றுக் கொடுத்தார். அவர் கொன்வெர்சன் உதையையும் வெற்றிகரமாக உதைக்க இரு அணிகளின் புள்ளிகளும் சமனாகின. (CR & FC 07 – 07 கடற்படை)
இராணுவ அணிக்கு முதல் வெற்றி ; தொடரும் ஹெவலொக்ஸின் வெற்றியோட்டம்
இறுதி நிமிடத்தில் திறமையை வெளிக்காட்டிய இராணுவ ரக்பி அணி…
அதனை தொடர்ந்து ஆட்டத்தின் வேகம் சற்று குறைந்த போதிலும் கடற்படை அணியானது எதிரணியின் பாதிக்குள் தொடர்ந்தும் நிலைத்திருந்தது. அவ்வணியின் தொடர் அழுத்தம் காரணமாக CR & FC வீரர்கள் தவறுகளை இழைக்க, கடற்படை அணிக்கு அடுத்தடுத்து மூன்று பெனால்டி வாய்ப்புக்கள் கிடைத்தன. மூன்று உதைகளையும் திலின வீரசிங்க அற்புதமாக உதைக்க, வெறும் ஆறு நிமிடங்களில் கடற்படை அணி புள்ளிகள் வித்தியாசத்தை ஒன்பதாக அதிகரித்துக் கொண்டது. (CR & FC 07 – 16 கடற்படை)
முதல் பாதி நிறைவடையும் தருவாயில் திலின வீரசிங்க ட்ரை ஒன்றின் மூலம் தன் பங்களிப்பை மீண்டும் பெற்றுக் கொடுத்தார். எதிரணியின் தடுப்பை தகர்த்து முன்னேறிய சுபுன் டில்ஷான் பந்தை வீரசிங்கவிற்கு கடத்த அவர் இலகுவாக ட்ரை வைத்தார். கொன்வெர்சன் உதையை அவர் 2 புள்ளிகளாக மாற்ற முதல் பாதியை கடற்படை முன்னிலையில் நிறைவு செய்தது. (CR & FC 07 – 23 கடற்படை)
முதல் பாதி: CR & FC 07 – 23 கடற்படை விளையாட்டுக் கழகம்
பதினாறு புள்ளிகள் பின்னிலையில் இரண்டாம் பாதியை ஆரம்பித்த CR & FC போட்டியை வெல்லும் முனைப்புடன் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தது. 50 ஆவது நிமிடத்தில் முன்கள வீரர் ஓமல்க குணரத்ன தன் பலத்தை சிறப்பாக பயன்படுத்தி எதிரணியின் தடுப்பை மீறி ட்ரை கோட்டை நோக்கி முன்னேறினார். அவரிடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட சுபுன் வர்ணகுலசூரிய வலப்பக்க மூலையில் ட்ரை வைத்தார். கடினமான கொன்வெர்சன் உதையை தரிந்த ரத்வத்த குறிதவறாது உதைத்தார். (CR & FC 14 – 23 கடற்படை)
சில நிமிடங்கள் கடந்த நிலையில் CR & FC அணி தனது சிறப்பாட்டத்தின் பலனாக மற்றுமொரு ட்ரையினை வைத்து. முன்வரிசை வீரர்களின் பலமிக்க நகர்வுகளை தொடர்ந்து சஷான் மொஹமட் ட்ரை ஒன்றை வைத்தார். மற்றுமொரு கடினமான உதையை ரத்வத்த எவ்வித சலனமுமின்றி புள்ளிகளாக மாற்ற, புள்ளிகள் வித்தியாசம் இரண்டாக குறைந்தது. (CR & FC 21 – 23 கடற்படை)
68 ஆவது நிமிடத்தில் CR & FC அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்ததுடன், தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த தரிந்த ரத்வத்த இம்முறையும் இலக்கை நோக்கி உதைத்தார். இதன்படி CR & FC அணியானது போட்டியில் முதல் முறையாக முன்னிலை பெற்றுக் கொண்டது. (CR & FC 24 – 23 கடற்படை)
கடற்படை அணி இறுதி நிமிடங்களில் முன்னிலை பெறும் நோக்குடன் கடும் சவாலை வழங்கிய போதிலும், தடுப்பாட்டம் மற்றும் தாக்குதல் ஆட்டம் என இரண்டிலும் சிறந்து விளங்கிய CR & FC அணி, எதிரணியின் எதிர்பார்ப்புக்களை சிதறடித்தது. 77 ஆவது நிமிடத்தில் தரிந்த ரத்வத்த மற்றுமொரு அசத்தலான ட்ரையினை வைக்க கடற்படையின் தோல்வி உறுதியானது. (CR & FC 31 – 23 கடற்படை)
போட்டியின் இறுதி வினாடிகளில் CR & FC வீரர் சஷான் மொஹமட் மேலுமொரு ட்ரை வைத்து புள்ளிகள் வித்தியாசத்தை அதிகரித்தார். தரிந்த ரத்வத்தவின் உதை இம்முறையும் குறிதவறவில்லை. இதன்படி அணித்தலைவர் ரத்வத்தவின் சிறப்பான விளையாட்டுத் திறன் மற்றும் வழிநடத்தலின் கீழ் CR & FC அணி 38 – 23 என்ற புள்ளிகள் கணக்கில் கடற்படை அணிக்கு அதிர்ச்சியளித்தது. கடற்படை அணியானது இரண்டாவது பாதியில் ஒரு புள்ளியையேனும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுநேரம்: CR & FC 38 – 23 கடற்படை விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்டநாயகன் – தரிந்த ரத்வத்த (CR & FC)
புள்ளிகள் பெற்றோர்
CR & FC – தரிந்த ரத்வத்த (2 ட்ரை, 1 பெனால்டி, 5 கொன்வெர்சன்), சஷான் மொஹமட் (2 ட்ரை), சுபுன் வர்ணகுலசூரிய (1 ட்ரை)
கடற்படை விளையாட்டுக் கழகம் – மூஷின் பலீல் (1 ட்ரை), திலின வீரசிங்க (1 ட்ரை, 3 பெனால்டி, 2 கொன்வெர்சன்)